Pages

Thursday 24 November 2011

"நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!" - "பாலை" செந்தமிழன் பேசுகிறேன்.....


முகம் தெரியாத உறவுகளுக்கு வணக்கம்.
‘பாலை’ என்ற திரைப்படத்தை எழுதி இயக்கியவன் நான். என் பெயர் ம.செந்தமிழன்.


 ’பாலை’ படத்தில் அதன் நாயகி காயாம்பூ பேசும் வசனங்களில் எனக்கு நெருக்கமானது,
‘பிழைப்போமா அழிவோமா தெரியாது…
வாழ்ந்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’ என்பது.

‘பாலை’ குழுவினர் உங்களிடம் கூற விரும்புவதும் ஏறத்தாழ இதுவே.
‘பாலை படம் தமிழினத்தில் பதிவாகுமா அழிந்து போகுமா தெரியாது…
இப்படி ஒரு படம் எடுத்தோம் எனப் பதிவு செய்ய விரும்புகிறோம்’


சில நாட்களுக்கு முன் பாலையின் முன்னோட்டக் காட்சியைப் பார்த்த இயக்குனர் பாலுமகேந்திரா, ’பாலை உலகத் திரைப்பட வரலாற்றில் குறிக்கத்தக்க இந்தியப் படமாக இருக்கும். இது ஒரு தமிழ்ப் படம் என்பதில் எனக்குத் தனிப்பட்ட கர்வம் உண்டு. எனது 45 ஆண்டுகால சினிமா வாழ்க்கையில் எந்தப் படத்தைப் பார்த்தும் ’இந்தப் படத்தை நான் இயக்கவில்லையே’ என ஆதங்கப்பட்டதில்லை. பாலை படம் என்னை அப்படி ஏங்கச் செய்கிறது’ என்று கடிதம் எழுதிக் கொடுத்தார்.

சத்தியமாக இவ்வார்த்தைகளுக்கான தகுதி எனக்கில்லை. இவை ஒரு மூத்த படைப்பாளியின் உணர்ச்சிவய வார்த்தைகள்.

முன்னோட்டக் காட்சி பார்த்த கார்ட்டூனிஸ்ட் பாலா முதல் மென்பொருள் இளம் பொறியாளர் விர்ஜினியா ஜோசபின் வரை பாலையை மனமார வாழ்த்துகிறார்கள்.

இவர்கள் அனைவரின் வேண்டுகோளும் மக்களை நோக்கி இருக்கிறது.
‘அவசியம் பாலை படத்தைப் பாருங்கள்’ என்கிறார்கள் இவர்கள்.

எனக்கும் என் குழுவினருக்குமான வேண்டுகோள் மக்களை நோக்கி இல்லை. அதற்கான சூழலும் எழவில்லை. எங்கள் வேண்டுகோள் திரையுலகை நோக்கி இருக்கிறது.

தமிழகத்தின் சரி பாதி பகுதிகளில் பாலையைத் திரையிட ஒரு திரை அரங்கு கூட கிடைக்கவில்லை. இதற்கான காரணங்கள் நிறைய. அவற்றை நான் அடுக்க விரும்பவும் இல்லை; இப்போது அதற்கான அவகாசமும் இல்லை.

ஓர் உண்மையை உரத்துச் சொல்ல விரும்புகிறேன்.
‘அதிகாரமும் பெரும் பணமும் இருந்தால் குப்பைகளுக்கும் திரையரங்குகள் திறக்கும். இல்லையென்றால், இயக்குனர், தயாரிப்பாளர் முகங்களில் குப்பை வீசப்படும்’

இன்றைக்குத் தமிழகத்தில் உள்ள ஆயிரத்து இருநூறு திரையரங்குகளில் சரி பாதியை மிகச் சில படங்கள் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவை ஓடும் திரையரங்குகளுக்குச் சென்று பாருங்கள். மக்கள் கூட்டம் அலைமோதுகிறதா அல்லது இவை வெறுமனே பணபலத்தாலும் அதிகார பலத்தாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளனவா என்பதை நீங்களே உணரலாம்.

ஒவ்வொரு அரங்கத்துக்கும் இலட்சக் கணக்கில் பணம் கொடுக்கப்பட்டு, அவ்வரங்குகளில் வேறு படங்கள் வராமல் பாதுகாக்கப்படுகின்றன.

திரைப்படங்களால் நிரம்ப வேண்டிய அவ்வரங்குகள் மிகச் சில முதலைகளின் கழிவுகளால் நாற்றமெடுத்துக் கிடக்கின்றன.

தமிழகத்தில் dam 999 என்ற படத்துக்குக் கிடைத்த திரையரங்குகளில் 25% கூட பாலைக்குக் கிடைக்கவில்லை!


முல்லைப் பெரியாறு அணையின் உரிமையை மலையாளிகளுக்குப் பிடுங்கித் தரும் படமாக இருந்தாலும் பரவாயில்லை; தமிழரின் வரலாற்றைப் பதிவு செய்யும் படத்துக்கு அரங்கு இல்லை. அழுவதைத் தவிர வேறு என்ன வழி?

இப்போது dam 999 படம் தடை செய்யப்பட்டுவிட்டது. ஆனாலும் அந்தத் திரை அரங்குகளில் மிகச் சில கூட பாலைக்குக் கிடைக்கவில்லை. அவ்வரங்கங்கள், வேறு ஒரு warner brothers தயாரிப்புப் படத்துக்காகக் காத்திருக்கின்றன. ஜாக்கிசானின் 1911 படத்துக்குக் கிடைத்த அரங்குகளின் எச்சில் துளி கூட எங்களுக்குக் கிடைக்கவில்லை.

கிடைத்த அரங்குகளில் பாலை வெளியாகிறது. எமக்கு அரங்கு கொடுத்த அரங்க உரிமையாளர்கள், மேலாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் இப்பணியில் தம்மை அளவுக்கு மீறி ஈடுபடுத்திக் கொண்டதால் மிக மோசமான உடல் உபாதையில் சிக்கித் தவிக்கும் என் இனிய நண்பர் செங்கோட்டை திரைப்பட இயக்குனர் சசிகுமார் உள்ளிட்ட அனைவருக்கும் எமது மனமுருகிய நன்றிகள்!


 இக் கடிதத்தை எழுதுவதால் என்ன பலன் என எனக்குப் புரியவில்லை.
ஆனால், நான் ஒரு போதும் நம்பிக்கையை விடுவதில்லை. இயற்கையின் பேராற்றலை வேண்டுகிறேன். அப்பேராற்றலின் அங்கங்களாகவும் படைப்புகளாகவும் விளங்கும் மக்களை நம்புகிறேன்.

நாங்கள் பந்தயத்தில் பரிசு கேட்கவில்லை
நிற்க ஒரு அடி மண் கேட்கிறோம்!

பாலை குழுவுக்காக,

(ம.செந்தமிழன்)

`பாலை’ திரைப்படம்... ஒரு திறனாய்வு.


`பாலை’ திரைப்படம் பார்த்தேன்.இரண்டாயிரம் வருடத்திற்கு முன் வாழ்ந்த தமிழர்களின் வரலாற்றின் ஊடாக ஈழத்தில் அழிக்கப்பட்ட ஒரு இனத்தின் கதையை பேசுகிறது இப் படம். 




ஓப்பனிங்க் சீனிலே எந்த அலட்டலும் இல்லாமல் பெருமூச்சோடு தொடங்கும் குரல் ஒன்று கதை சொல்ல ஆரம்பிக்கிறது.. அது அப்படியே காயாம்பூ என்ற கதாப்பாத்திரத்தின் வழியாக காட்சியாக விரிந்து நம்மையும் அவர்களோடு பயணிக்க வைக்கிறது. வழக்கமாக போர்கள் பற்றிய படம் என்றால் பேரரசர்களின் பெருமை பேசுவதாகவே இருக்கும். 


ஆனால் இது எளிய மனிதர்களின் போர். அதை சுவராஸ்யமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் செந்தமிழன். ஓப்பனிங்க் சீனில் கதை சொல்ல ஆரம்பிக்கும் குரல், முதுவன் பாத்திரத்தில் நடித்த பெரியவர், காயாம்பூவாக நடித்த ஷம்மு, ஒளிப்பதிவு, இசை, பாடல், வசனங்கள், சங்க கால தமிழர்களிடையே இருந்த ஆண் பெண் பாகுபாடற்ற சுதந்திரத்தை சொல்லும் காட்சிகள் என படத்தில் பல விசயங்கள் என்னை கவர்ந்தது.


நம்பவே முடியாத க்ராஃபிக்ஸ் சாகச கதாநாயக காமெடிகளை பார்த்து காசை கரியாக்குபவர்கள் ஒருமுறை பாலை படத்தைப் பாருங்கள்.. நல்ல அனுபவமாக இருக்கும். 


குறைந்த பட்ஜெட்டில் ஒரு நல்ல படத்தை எடுத்திருக்கும் செந்தமிழன் டீமுக்கு வாழ்த்துகள்.


திறனாய்ந்தவர்: கார்ட்டூனிஸ்ட் பாலா...

Wednesday 23 November 2011

கணினி உலகம்!


கணினி உதிரிப்பாகங்களைக் கொண்டு உலகத்தின் வரைபடத்தை அமைக்க முடியுமா? என்று கேட்டால், ஆம் என்று பதில் சொல்ல வேண்டியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த சுசன் ஸ்டொக்வெல் என்கின்ற கலைஞர், கணினி உதிரிப்பாகங்களைக் கொண்டு, உலகத்தின் வரைபடத்தை பிரமாண்டமான முறையில் உருவாக்கியிருக்கிறார். 




உங்கள் பார்வைக்காக அந்த பிரமாண்டமான வரைபடத்தின் ஒரு பகுதி. மொத்த உலக வரைபடத்தினையும் காண, இந்த இணைப்பிற்கு செல்லுங்கள்.

http://www.thisiscolossal.com/2011/11/susan-stockwell/


தகவல்: புதுநுட்பம்



Tuesday 22 November 2011

இந்திய அணிக்கு இதுதான் மரியாதை!



நவம்பர் இருபதாந் தேதி பஞ்சாப் குருநானக் ஸ்டேடியத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பைக்கான கபடிப் போட்டியின் இறுதியாட்டத்தில் இந்திய ஆடவர் அணியும், மகளிர் அணியும் தங்களை எதிர்த்து விளையாடிய இங்கிலாந்து அணியை விளையாடிய வென்று உலக கோப்பையைக் கைப்பற்றின.


உலகக் கோப்பையை வென்ற இந்த வீரர்களுக்கு கிடைத்த கெளரவம் என்ன தெரியுமா? அவமானம் மட்டுமே.  உலகக் கோப்பையை வென்றெடுத்த இந்த வீரகளின் வெற்றியை யாரும் மதித்ததாகவேத் தெரியவில்லை. மரியாதை நிமித்தம் அவர்களை ஒரு வாகனத்தில் கூட ஏற்றி அனுப்ப முன்வரவில்லை போட்டியை நடத்தியவர்கள்....

வெற்றி வீரர்களில் பலர் போட்டி முடிந்த பிறகு நடந்தே வீடு சென்றுள்ளனர் எனபது உச்சகட்ட பரிதாபம்.

விளையாட்டு வீராங்கனைகள் தங்கியிருந்த விடுதி அறைகளுக்குக் கூட இந்திய விளையாட்டு நிர்வாகம் வாடகை செலுத்தாததால் விடுதி ஊழியர்களின் கெடுபிடிகளுக்கும் இவர்கள் ஆளாகியுள்ளனர்.

தாங்கள் வென்றெடுத்த உலகக் கோப்பையை இவர்கள்ஆட்டோ ரிக்சா ஒன்றிலேயே வீட்டிற்கு எடுத்துச் சொன்றுள்ளார்கள்.


சில நாட்களுக்கு முன் நடந்த பேருந்து விபத்தில் தங்களுடைய உடைமைகள் எரிந்து நாசமாகிவிட்டதால் ஒரு வார காலமாக தாம் ஒரே உடையுடன் மிகவும் அவதிப்பட்டதாக தெரிவித்துள்ளார்கள்.

 ஒரே உடையுடன் ஓரு வாரம் அப்படியிருந்தும் உலககோப்பையை வென்றது இவர்களின் மனதின் உறுதியை பறைசாற்றுகின்றது.  இப்படிப்பட்ட வீரர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர உரிய முறையில் கௌரவிக்க அரசுக்கு என்ன தயக்கம்?

இந்தியாவின் கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் விளையாட்டுக்குண்டான அங்கீகாரம் கிடைக்கும், அவர்கள் மட்டுமே வீரர்கள் கோடி கோடியாக அவர்களுக்கு ஊதியம் தரப்படும் என்பது எழுதப்படாத விதியாகி விட்டது.

 மற்ற விளையாட்டுகளையும் வீரர்களை இது போன்று அவமதிப்பது தொடர்ந்தால் இனி இந்தியாவில் எந்தப் போட்டிகளிலும் ஆர்வத்துடன் முன்வந்து பங்கேற்கும் போட்டியாளர்கள் இல்லை என்ற நிலை ஏற்பட்டால் ஆச்சர்யமில்லை.

மனதுக்கு இதமாக ஒரு படம்...

Saturday 19 November 2011

மறக்கப்பட்ட மனிதம்.....

கிருஷ்ணகிரியில் இருந்து சூளகிரி போகும் வழியில் சேலம் - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சின்னார் என்ற இடத்தில் சுமார் நாற்பது வயது மதிக்கத் தக்க ஆதரவற்ற மனநலம் குன்றிய பெண் ஒருவர் சாலையைக் கடக்க முயலுகையில் வாகனம் மோதி கடந்த 18ந் தேதி அதிகாலையில் சம்பவ  இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.


சாலையில் அடிபட்டு இறந்தது ஒரு மனித உயிர் என்பதை அறியாதவர்களாக அந்தச் சாலையில் சென்ற நூற்றுக்கணக்கான வாகனங்கள் அந்தப் பெண்ணின் சடலம் மீது ஏறியதில் இடுப்புக் கீழ் அப் பெண்ணின் உடல் முற்றிலும் சிதைந்து கூழானது.


நன்றாக விடிந்த பின்பே நடந்த கொடூரத்தினைக் கண்ட அந்தப் பகுதி மக்கள் மேலும் அந்த உடல் சிதையாமல் அதன் மீது தென்னங்கீற்று மற்றும் பனை ஓலைகளைப் போட்டு மூடி வைத்தனர். மேலும் வாகனங்கள் ஏறா வண்ணம் சாலை ஓரமாக அந்த சடலம் இழுத்துப் போடப்பட்டது.

சம்பவ இடத்துக்கு இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் காவல் நிலையம் இருந்தும் போலீசார் அந்த சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்ப முற்படவில்லை.

இதை விடக் கொடுமை ஹை வே பெட்ரோல் வாகனத்தில் சாலை பாதுகாப்பினை அந்தத் தேசிய நெடுஞ்சாலை வழியே மேற்கொண்ட போலீசாரும் இதனை கண்டு கொள்ள வில்லை என்பது தான்....



கூழான அந்தப் பெண்ணின் சதை அந்தப் பகுதி நாய்கள் மற்றும் காக்கைகளுக்கு உணவானதை அந்தப் பகுதில் சென்ற அனைவரும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. சம்பவம் பற்றி செய்தியாளர்கள் படம் பிடிக்கச் சென்ற போதிலும் கூட போலீசார் அங்கு அங்கு வந்து சேரவில்லை.

ஒரு முன்னாள் மனுஷிக்கு நேர்ந்த துயரம்
வார்த்தைகளில் எழுத முடியாத சோகம்....

வாழ்க போலீசாரின் மனித நேயப் பற்று!....

இந்த விபத்தினைப் பற்றிய காணொளி... 
மனதினைத் திடப்படுத்திக் கொண்டு பாருங்கள்......



நகைக்கச் சில துணுக்குகள்!





Tuesday 15 November 2011

உலகின் முதல் கம்ப்யூட்டர்!

 கணினி......

நமது இன்றைய வாழ்வின் தவிர்க்க முடியாத ஒரு அம்சமாக மாறிவிட்டது.... அரசு, தனியார் அலுவலகங்கள், மருத்துவம், காவல் துறை,  இராணுவம், வங்கிகள், ஊடகங்கள், பொழுதுபோக்கு என அனைத்துத் துறைப் பயன்பாட்டிலும் கணினி இன்றியமையாத பங்கினை வகித்து வருகிறது.

கல்வி கற்பதிலும் கணினி புகுத்தப்பட்டு அங்கும் அது தவிர்க்க முடியாத ஒரு இடத்தினைப் பெற்றுள்ளது.

கணினி இன்று அலுவலகக் கணினி, வீட்டுக் கணினி, மடிக்கணினி, கையடக்கக் கணினி, இணையகுறிப்புக் கணினி மற்றும் பல வடிவங்களின் வெளியாகிக் கோடிக கணக்கானோரால் பண்படுத்தப் பட்டுக் கொண்டுள்ளது.


உலகில் முதன் முதலில் உருவாக்கப்பட்ட கணினியைத் தான் மேலுள்ள படத்தில் நீங்கள் காண்கிறீர்கள்.  ஏதோ அரவை ஆலை ஒன்றினைப் போல நீங்கள் காண்பது ஒரே ஒரு கணினியை மட்டுமே.

இன்றைக்கு அந்த இடத்தில் ஒரு கணினி விற்பனை நிலையத்தையே தாராளமாக அடக்கி விடலாம்... விஞ்ஞான விந்தைகளின் முன்பாக எல்லாம் சாத்தியம்.