Pages

Saturday 15 June 2013

எனக்குக் கொடுத்தார்கள், நீங்களும் சாப்பிடுங்கள்!


'ஆனந்த விகடன்'தான் என் தாய் வீடு! 'விகடன்' என்ற பத்திரிகைப் பல்கலைக் கழகத்தில் பாடம் பயின்றவன் என்பதில் எனக்கு எப்போதும் பெருமை உண்டு.

எனக்குக் கொடுக்கப்பட்ட பாடங்கள் என் தொழிலுக்கு மட்டும் அல்ல, வாழ்க்கைக்கும் நிறைய இனிப்பு சேர்த்திருக்கின்றன். இதோ ஒரு பருக்கைச் சோறு...

அப்போது நான் இளமைத் துடிப்புள்ள மாணவப் பத்திரிகையாளன். விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் புதுச் சேர்க்கை.

பொறியியல் பட்டப்படிப்பின் நான்காவது(இறுதி) வருடம் பயிலும்போதுதான் இந்த வாய்ப்புக் கிடைத்தது. அதனால் பகுதி நேரப் பத்திரிகைப் பணிக்கு அதிக நேரம் செலவிட முடியாமல் போய் விட்டது(அப்படியும் விகடன் தேர்வில் OUTSTANDING STUDENT REPORTER ஆக தேர்ச்சிபெற்றுவிட்டதால் அந்த பொறியியல் பட்டதாரி அத்தோடு தொலைந்தான்!!).

கிடைக்கும் சொற்ப நிமிட அவகாசங்களில் பிரசுரிப்புக்குத் தேறும் செய்திகளை சேகரிக்கப் 'பர பற'ப்பேன். மூன்று கற்களில் இரண்டு மாங்காய் - இதுதான் நான் அப்போது எனக்கு வகுத்துக் கோண்டிருந்த ஃபார்முலா. அதாவது மூன்று மேட்டர்கள் எழுதிஅனுப்பினால் அதில் இரண்டாவது பிரசுரமாகிவிட வேண்டும்!

ஒரு சில மாணவ நிருபர்களுக்கே கிடைத்த அந்த அதிர்ஷ்டம் எனக்கும் கிடைத்தது. தொடர்ச்சியாக என் கட்டுரைகள் பிரசுரமாகி வந்தன.

இந்த சுயபுராணமெல்லாம் எதற்காக என்றால்... ஒரு கட்டுரை எழுதினால் அது பிரசுரமாகிவிட வேண்டும் என்பது எனக்கு எவ்வளவு அத்தியாவசியமானதாக இருந்தது என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதால்தான்.

சரி விஷயத்துக்கு வருகிறேன், புதிய ஊரில் ஒயின் ஷாப் தேடி அலையும் வெளியூர் குடிகாரன் மாதிரி செய்திக்காக நான் தேடலில் மும்முரமாயிருந்த ஒரு நாள்... ஒரு பொழுது..

"எப்படியும் இருபது முப்பது பேராவது இருக்கும்... அத்தனை பேர்கிட்டயும் அவங்க நிலப்பத்திரங்களை அடகு வாங்கிக்கிட்டு, எல்லோரையும் கொத்தடிமைகளா வச்சிருக்காரு ஒரு பெரிய மனுஷன்" என்ற அதிர்ச்சிகரத் தகவல் சொன்னார் ஒரு நண்பர். சிகப்புச் சட்டைக்காரர் அவர்.

அவர் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் பல செய்திகளை கட்டுரையாக்கி இருக்கிறேன். நம்பத் தகுந்த 'துப்புக் கொடுப்பாளர்'.

'ஆஹா.. சில்லறை மீனுக்கு ஆசைப்பட்டால் சுறா மீனே வந்து விழுந்திருக்கே!' என சந்தோஷப்பட்டேன்.

இந்த இடத்தில் ஒரு இடைச் செருகல்... பத்திரிகையாளன் அதுவும் புலனாய்வுப் பத்திரிகையாளன் என்றால் இப்படித்தான்! கெட்டசெய்தி எதுவும் கேள்விப்பட்டால் 'ஐயோ இப்படி நடந்துடுச்சே' என வருத்தப்படுவதற்கு முன்னால் 'சூப்பரான நியூஸ் கிடைச்சுருச்சு' என்ற சந்தோஷம் முந்திக் கொண்டு வந்து நிற்கும்.

எனக்கும் அப்படியே! நின்றது!!

காலேஜுக்கு கட் அடித்துவிட்டு செய்தி சேகரிக்கப் புறப்பட்டேன். கொடைக்கானலுக்குப் பக்கத்தில் இருக்கும் ஒரு மலைக்கிராமத்துக்குப் பயணம்.

மொத்தம் இருபத்தி நான்கு தொழிலாளர்கள், அத்தனை பேரும் சுதந்திரக் காற்றைச் சுவாசித்து இரண்டு வருடங்களாகி இருக்கும். அனைவரும் கொத்தடிமைகள்! பஞ்சம் பிழைப்பதற்காக வீடு, வாசல், வயக்காடுகளை அந்தப் பெரிய மனிதரிடம் அடகு வைத்தவர்கள். குபு குபு'வெனக் குட்டி போடும் வட்டியைக்கூட கட்ட முடியாமல் தடுமாறியதால், அவர்களை கூலியில்லாத வேலைக்காரர்களாக தனது பண்ணைத்தோட்டத்தில் பயன்படுத்திக் கொண்டிருந்தார் அந்தப் பெரிய மனிதர்.

தடி மீசை அடியாட்கள், கொலை வெறியோடு அலையும் வேட்டை நாய்கள், இத்யாதி இத்யாதி பாதுகாப்பு வளையங்களையெல்லாம் மீறி அப்பாவி அடிமைகள் அனைவரிடமும் பேசினேன்.

'போட்டோ புடிக்க வேண்டாம்' என்று முரண்டு பிடித்தவர்களை சமாளிக்க வேண்டியிருந்தது. 'நம்புங்கள்... பத்திரிகையில் போட்டோ போட மாட்டோம். ஆனால் இப்படி ஒரு விஷயம் நடப்பதை எங்கள் எம்.டி.(அப்போதைய ஆனந்த விகடன் ஆசிரியரான எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களை அலுவலகத்தில் எல்லோரும் இப்படித்தான் குறிப்பிட்டார்கள். கேள்விப்பட்டுக் கேள்விப்ப்ட்டு அந்தப் பழக்கம் எனக்கும் தொற்றிக் கொண்டது. இப்போதும்கூட 'எம்.டி' என்ற வார்த்தையைக் கேட்டதுமே எங்கிருந்தாலும் என் நினைவுக்குவரும் முதல் முகம் அவருடையதுதான்) நம்ப வேண்டும் அல்லவா! அதற்காக கட்டாயம் நான் போட்டோ அனுப்பியாக வேண்டும்' என்று கூறி சமாதானப் படுத்தினேன். வேண்டியமட்டும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டேன்.

அக்கம் பக்கத்தில் எல்லாம் விசாரித்துவிட்டு, மலையிறங்கினேன்.

அடுத்ததாக விஷயத்தின் வில்லனையும் நேரில் சந்தித்தாக வேண்டும். அதாவது அந்தப் பெரிய மனிதரை!

நிஜமாகவே ஊருக்குள் பெரிய மனிதர்தான். மரம் கடத்தல், டூப்ளிகேட் மதுபாட்டில், அடிதடி... என பல விஷ விஷயங்களில் அவரது பெயர் பிரபலம். அப்போதைய ஆளும் கட்சியின் செல்வாக்கு பெற்ற மனிதர். எம்.எல்.ஏ. ஒருவரின் நெருங்கிய உறவினர்.

இத்தனை 'அட்டாச்மெண்ட்கள்' இருந்ததால் அவர் முன் நின்று பேசவே நடுங்குவார்களாம் உள்ளூரில் பலரும். எனக்கென்ன நான்தான் வெளியூராச்சே!

அந்த (அ)சிங்கத்தை அதன் குகையிலேயே சந்திக்கக் கிளம்பினேன். அடுத்த நாளும் காலேஜுக்கு கட்.

அந்த ஆளின் வீட்டுக்கு வழி கேட்டபோது ஊருக்குள் ஏற இறங்கப் பார்த்தபடியேதான் கை காட்டினார்கள். பயமில்லை என்றாலும் சின்னதாக தயக்கம் எனக்குள் முளைத்திருந்தது.

வேறு வழியே இல்லை, கட்டுரையை எழுதி முடிக்க வேண்டுமென்றால் அவரை பேட்டி எடுத்தே ஆக வேண்டும். அதுதான் விகடன் சம்பிரதாயம். 'ஒரு தரப்புச் செய்தியை மட்டும் வெளியிடக் கூடாது. எதிர் தரப்பிலும் கேட்டு எழுதியாக வேண்டும்' என எங்களுக்கு படித்துப் படித்து சொல்லிக் கொடுத்திருந்தார்கள். வியர்த்திருந்த உள்ளங்கையை கைக்குட்டையால் துடைத்துக் கொண்டு விடுவிடுவென 'பெரிய' வீட்டுப் படியேறிவிட்டேன்.

நல்ல விஷயத்துக்காக யாராவது நல்ல மனிதர்களைச் சந்தித்தால் 'ஆனந்த விகடன் நிருபர்' என் அறிமுகம் செய்து கொள்வோம். இப்போது அது தேவையில்லை...

"ஜூனியர் விகடன்ல இருந்து வர்றேன். சார்கிட்ட கொஞ்சம் பேசணும்."

உட்காரச் சொன்னார்கள். முரட்டு வீட்டை வேடிக்கை பார்த்தபடியே நான் இருக்க... ஓரிரு நிமிடங்களில் 'அவர்' வந்துவிட்டார். அந்த அவகாசத்தில் எனக்கு கொஞ்சம் தெனாவெட்டு வந்துவிட்டது.

''வாங்க தம்பி'' என்றார். என் விசிட்டிங் கார்டை எடுத்து நீட்டினேன்.

வாங்கியவர் அதை அலட்சியமாகப் பார்த்தார். என்னையும் ஏற இறங்கப் பார்த்தார்.

அதில் 'STUDENT REPORTER - TRAINEE' என இருந்தது. அதைப் பார்த்துத்தான் அவ்வளவு அலட்சியம் காட்டுகிறார் என நானே நினைத்துக் கொண்டேன். 'வைக்கிறேண்டி உனக்கு ஆப்பு' என மனதில் கறுவிக்கொண்டே பேச ஆரம்பித்தேன்...

"கொடைக்கானல் மலைப்பக்கம் இருக்க உங்க தோட்டத்துல இருபத்திநாலு பேரை கொத்தடிமையா வச்சிருக்கீங்களே! அதப் பத்தி உங்ககிட்ட பேசணும்"

பேசியபடியே அவர் முகத்தையே உற்றுப் பார்த்தேன். ரியாக்சனுக்கு ஏற்ற எதிர்க் கேள்வியை எடுத்துவிட வேண்டுமே!

"நீங்கதான் நேத்து அங்க போயி விசாரிச்ச ஆளா?" என்றார்.

அடப்பாவி! ரகசியமாக விசாரணை செய்ததாக நான் நினைத்துக் கொண்டிருக்க, அது இந்த ஆளுக்கும் தெரிந்திருக்கிறதே!

"ஆமா சார்" சொன்னேன்.

கண்களை மூடி தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தார். கையோடு கொண்டு போயிருந்த ஆட்டோஃபோகஸ் கேமராவை பாக்கெட்டிலிருந்து வெளியே எடுத்தேன்.

"தம்பி, கேமராவ முதல்ல உள்ள வைங்க'' என்றார் அவர்.

"இல்ல சார்... அது வந்து..." என் ஏதோ பேச ஆரம்பிக்க நான் முயல... தொண்டையை செருமிக் கொண்டு பேசலானார் அவர்.

''தம்பி இளம் கன்று பயமறியாதுன்னு சொல்வாங்கள்ல அதான் தைரியமா இந்த பிரச்னைல இறங்கியிருக்கிங்க. சரி, நாம ஒரு டீலுக்கு வருவோம். அந்த இருபத்திநாலு பேர்கிட்டயும் அவங்கவங்க பத்திரத்தையெல்லாம் திருப்பிக் கொடுத்துர்றேன். வாங்குன கடனையும் தள்ளுபடி செஞ்சுர்றேன். பிரச்னய இத்தோட விட்ருங்க. புக்ல மேட்டர போட்றாதீங்க.''

வெலவெலத்து விட்டேன் நான். இதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை!

என்னாது.... சின்னப்புள்ளயாட்டம்?!

அவர் தனது முடிவில் உறுதியாக இருந்ததால் அலுவலகத்தில் பேசி முடிவு சொல்வதாகக் கூறிவிட்டுப் புறப்பட்டேன். மனது முழுக்க குழம்பிப் போயிருந்தேன். எனது இரண்டு நாள் உழைப்பு அது. செய்தி வெளியானால் எனக்கு நிச்சயம் நல்ல பெயர் கிடைக்கும். OUTSTANDING REPORTER ஆக தேர்வாக இந்தக் கட்டுரை கை கொடுக்கும்.

வழியிலேயே எஸ்.டி.டி. பூத்துக்குள் புகுந்து சென்னைக்குப் போன் போட்டேன்.

மறு முனையில் விகடன் அலுவலகம். நடந்ததையெல்லாம் விலாவாரியாகச் சொன்னேன்.

அரை மணி நேரம் கழித்து மறுபடியும் போன் பண்ணச் சொன்னார் சுபா. அவர்தான் நான் உட்பட மதுரைப்பக்கம் இருக்கும் அந்த வருடத்து மாணவ நிருபர்களையெல்லாம் வழி நடத்தியவர்(இப்போது ராடன் டி.வி.யின் க்ரியேடிவ் ஹெட்).

அடுத்த முப்பத்தொன்றாவது நிமிடம் மறு போன் போட்டேன். என் காதுகளும் பதைபதைப்போடு காத்திருந்தன.

''அந்த மேட்டர எழுதவேணாம்னு எம்.டி. சொல்லிட்டாரு.."

என் தலையில் இடி இறங்கியது. என் உழைப்பெல்லாம் வேஸ்ட்!

என் அமைதியை யூகித்துவிட்ட சுபா தொடர்ந்து பேசினார்.. ''எம்.டி. என்ன ஃபீல் பண்றார்னா... நாம செய்தி வெளியிடுறதோட நோக்கமே அதப் பார்த்து அரசு அதிகாரிகள் யாராச்சும் அந்த கொத்தடிமைகளை மீட்கணும்ங்கிறதுதான். செய்தி வெளியாகுறதுக்கு முன்னாடியே அது நடந்துடுச்சுன்னா சந்தோஷம்தானே! ''

"அப்ப அந்த ஆளை...?''

'' தப்பு செஞ்சவர்தான். ஆனா தப்பை உணர்ந்து திருந்திட்டார்ல. அதனால அவரப்பத்தி எழுத வேணாம்ங்கிறார் எம்.டி. ஆனா அந்த ஆள் சொன்னமாதிரி அத்தனை பேருக்கும் பத்திரங்களையெல்லாம் திருப்பிக் கொடுத்து அவங்களை விடுவிக்கிறாரான்னு கூட இருந்து உறுதி செஞ்சுக்கங்க. உங்களால இருபத்திநாலு அப்பாவிகளுக்கு நல்லது நடக்கப் போகுது... கங்ராட்ஸ்!''

சந்தோஷப் பெருமையோடு போனை வைத்தேன். தான் செய்த தவறை உணர்ந்துகொண்டு யாரரவது ''ஸாரி'' சொன்னால் மன்னிக்கும் மனப்பக்குவம் கொஞ்சமேனும் எனக்கு வந்தது அதற்குப் பிறகுதான்!

நன்றி: ஜி.கவுதம், சென்னை. 

Saturday 1 June 2013

மனித உறவுகள் மேம்பட.....


1. தானே பெரியவன்,தானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள். (Ego)

2. அர்த்தமில்லாமிலும்,தேவையில்லாமிலும் பின் விளைவு அறியாமலும் பேசுக் கொண்டேயிருப்பதை விடுங்கள். (Loose Talks)

3. எந்த விசயத்தையும் பிரச்சனையும் நாசூக்காகக் கையாளுங்கள். (Diplomacy)

4. விட்டுக் கொடுங்கள். (Compromise)

5. சில நேரங்களில் சில சங்கடங்களைச்  சகித்துதான் ஆகவேண்டும் என்று உணருங்கள். (Tolerate)

6. நீங்கள் சொன்னதே சரி செய்வதே சரி என்று கடைசிவரை வாதாடதீர்கள். (Adamant Arguments)

7. குறுகிய மனப்பான்மையை விட்டொழியுங்கள். (Narrow Mindedness)

8. உண்மை எது பொய் எது என்று விசாரிக்காமல் இங்கே கேட்டதை அங்கே சொல்வதையும் அங்கே கேட்டதை இங்கே சொல்வதையும் விடுங்கள். (Carrying Tales)

9. மற்றவர்களை விட உங்களையே எப்போதும் உயர்த்தி நினைத்து கர்வபடாதீர்கள். (Superiority Complex)

10. அளவுக்கு அதிகமாய்,தேவைக்கு அதிகமாய் ஆசைப்படாதீர்கள். (Over Expectation)

11. எல்லோரிடத்திலும் எல்லா விசயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ இல்லையோ சொல்லிகொண்டிருக்காதீர்கள்.

12. கேள்விப்படுகிற எல்லா விசயங்களையும் நம்பிவிடாதீர்கள்.

13. அற்ப விசயங்களையும் பெரிதுபடுத்தாதீர்கள்.

14. உங்கள் கருத்துகளில் உடும்புப்பிடியாய் இல்லாமல், கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள். (Flexibility)

15. மற்றவர் கருத்துக்களை, செயல்களை நடக்கின்ற நிகழ்ச்சிகளைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள். (Missunderstanding)

16. மற்றவர்களுக்கு உரிய மரியாதையைக் காட்டவும், இனிய இதமான சொற்களை பயன்படுத்தவும் தவறாதீர்கள். (Courtesy)

17. புன்முறுவல் காட்டவும், சிற்சில அன்புச் சொற்களைச் சொல்லவும்கூட நேரமில்லாதது போல நடந்து கொள்ளாதீர்கள்.

18.பேச்சிலும், நடத்தையிலும் திமிர்த்தனத்தையும், தேவையில்லாத மிடுக்கையும் காட்டுவதைத் தவிர்த்து அடக்கத்தையும், பண்பாட்டையும் காட்டுங்கள்.

19. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து அளவளாவுங்கள். (Frankness)

20. பிணக்கு ஏற்படும்போது, அடுத்தவர் முதலில் இறங்கி வரவேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள். (Initiative)

21. தேவையான இடங்களில் நன்றியையும், பாராட்டையும் சொல்ல மறக்காதீர்கள். பாராட்டுக்கு மயங்காத மனிதனே இல்லை. அதுவே உங்களுக்கு வெற்றியாக அமையும்.

ஆங்கிலத்தில் ரிலாக்ஸ் ப்ளீஸ் Relaxplzz

நன்றி: கலைமகள் செல்வகுமார்