Pages

Saturday, 28 January 2012

கல்லூரி மாணவர்களின் மனித நேயத் தொண்டு!




கோவை அரசு மருத்துவமனை பிணவறையில் கேட்பாரற்றுக் கிடந்த 9 அநாதைப்  பிணங்களை (அதில் ஓன்று குழந்தை) கடந்த 22ந் தேதியன்று கோவைபுதூர் கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த எட்டு மாணவர்கள் நல்லடக்கம் செய்து மனித நேயத் தொண்டு புரிந்துள்ளனர்.







இரண்டாம் ஆண்டு MSW பயிலும் மாணவியர் மாலினி, சுருதி, முதலாமாண்டு Bsc பயிலும் வினித், ஸ்ரீராம், மூன்றாமாண்டு Bsc பயிலும் நிர்மல், நந்தகுமார், இதயனாதன், மற்றும் முதலாமாண்டு BBM பயிலும் தீபக் ஆகிய இந்த 8 பேர்களும், தன்னார்வு தொண்டு நிறுவனமான தோழர் அறக்கட்டளையுடன் இணைந்து அந்த அநாதை உடல்களை நல்லடக்கம் செய்தனர்.




கோவை அரசு பொது மருத்துவமனையில் 2004 ஆண்டு மார்ச் முதல் இந்த நாள்வரை 1530 ஆதரவற்ற உடல்களை தோழர் அறக்கட்டளை மனித நேயம் கொண்டோரின் உதவியுடன் உரிய மரியாதையுடன் அடக்கம் செய்துள்ளது.


அந்த வகையில் தோழர் அறக்கட்டளை நிர்வாகி சாந்தகுமாருடன் இணைந்து கிருஷ்ணா கல்லூரி NSS மாணவ, மாணவியர்கள் அந்த 9 உடல்களை கோவை, பாலக்காடு சாலையில் அமைந்துள்ள ஆத்துப்பாலம் மின் மயானம் கொண்டு சென்று எரியூட்டினர். 


உயிர் நீத்தார்க்கு உறவுகள் இருந்தால் எப்படி மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுமோ அதைப்போல அந்த உடல்களுக்கு மாலை அணிவித்து மரியாதைசெய்து எரியூட்டினர். 


இந்த மனித நேயமிக்க செயலை செய்த மாணவ மாணவியரை சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் மனதாரப் பாராட்டுகிறது, 


இது பற்றிய காணொளி....




எமது அஞ்சலி!


இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளரான ஹோமாய் வ்யாரவாலா தனியார் மருத்துவமனையில் ஜன,4ந் தேதியன்று காலமானார். அவருக்கு வயது 98.





1913 டிசம்பர் 9 ல் பிறந்தவர் ஹோமாய். பார்சி குடும்பத்தைச் சேர்ந்த இவர் மும்பையில் வளர்ந்தார். 1942ல் சுதந்திரப் போராட்ட நிகழ்வுகளைப் படம்பிடித்த இவர், பிரிட்டிஷ் இன்பார்மேஷன் சர்வீஸில் பணியில் இருந்தார்.



கடந்த சில தினங்களுக்கு முன்னர் படுக்கையில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த அவர் பின்னர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.





ஜூன் 3ல் இந்தியப் பிரிவினை குறித்து நடந்த ஓட்டெடுப்பு, 1947 ஆக.15 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் கொடியேற்று வைபவம், மௌண்ட் பேட்டன் பிரபு விடைபெறும் நிகழ்வு, மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் இறுதிச் சடங்கு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை தத்ரூபமாகப் படம்பிடித்தவர் இவர்.



ஹோமாய்க்கு பத்ம விபூஷன் விருது கடந்த ஜனவரியில் வழங்கப்பட்டது. இவரது கணவர் மானெக்‌ஷா வ்யாரவாலா 1970ல் இறந்துவிட்டார்.



இந்தியாவின் முதல் பெண் புகைப்படப் பத்திரிகையாளரான ஹோமாய்க்கு சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றத்தின் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்..

ஹோமாய் எடுத்த காலத்தை வென்று நிற்கும் படங்களில் சில...











சாலையைப் பற்றித் தெரிந்திருக்க வேண்டிய இன்றியமையாத தகவல்கள்!


 வாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை. தெரிந்திருக்க வேண்டிய இன்றியமையாத தகவல்களில் சில...

* பகலில் முகப்பு விளக்குகளை
எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.

* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லது வாகனம் பழுதாகி நிற்கும்போதோ,  பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.

* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து  விளக்குகளையும் எரியவிடக் கூடாது.

* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.

* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருத  ண்டும்.

* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்த அழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.

* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.

* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே "டிம்' செய்ய வேண்டும்.

* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு "இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்' என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேசாக அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.

* கார்களில் செல்வோர் "சீட் பெல்ட்' அணியும்போது
சட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.

* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது. இது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் "அப்சர்வ்' செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.

* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் "சிக்னல்' இல்லாத இடங்களிலும், மொபைலின் "கீ லாக்' செய்யப்பட்ட நிலையிலும், ஏன் "சிம்கார்டு'  இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.மொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.

தகவல் உதவி: சே.த.இளங்கோவன்