புதுவை பாரதியார்
பல்கலைக்கூடத்தில் இசைத் துறையில் பேராசிரியராக பணியாற்றி வரும் பி.வி.போஸ்
என்பவர் மகாத்மா காந்தி பாடல்களைப் பாடுவது நேரத்தை வீணாக்குவது என்றும், மகாத்மா காந்தி, மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன் போன்ற தலைவர்களின்
சிலைகளுக்கு முன்பு பாடல்கள் பாடுபவர்கள் பிச்சைக்காரர்கள் என்றும், பாவேந்தர் பாரதிதாசன் எழுதிய தமிழ்த்தாய்
வாழ்த்து அரசு விழாக்களில் பாடுவதற்கு தகுதியற்றது என்றும் பல்கலைக்கூடத்தில்
இசைத்துறை தலைவர் அறையில் நடந்த கூட்டத்தில் கூறியுள்ளார்.
மேலும், செய்தி மற்றும் விளம்பர துறை சார்பில்
நடக்கும் தலைவர்களின் விழாக்களுக்குப் பாடல்கள் பாட மாணவர்களை அனுப்ப
மறுத்துள்ளார். மேலும், மாணவர்களுக்கு தமிழில் பாடம் நடத்தாமலும், தமிழ் மொழியைப் பழித்தும் எதிராகவும்
தொடர்ந்து பேசி வந்துள்ளார்.
இதுகுறித்து
பல்கலைக்கூட மாணவர்கள் போராட்டம் நடத்தி அரசு உயரதிகாரிகளுக்கு கொடுத்த புகாரின்
அடிப்படையில் கடந்த 29.11.2010 அன்று அவர் மீது துறை ரீதியான விசாரணக்கு
உத்தரவிடப்பட்டு, அவர் தற்காலிக பணிநீக்கம்
செய்யப்பட்டார். அப்போதைய கலைப் பண்பாட்டுத் துறைச் செயலர் கண்ணாஜி தலைமையில்
நடந்த விசாரணையில் தமிழறிஞர் மன்னர் மன்னன் உட்பட பல்கலைக்கூட பேராசிரியர்கள் 8 பேர் வாக்குமூலம் அளித்து சாட்சியம்
கூறியுள்ளனர். இதன் அடிப்படையில் கடந்த 07.02.2010 அன்று செயலர் கண்ணாஜி ‘எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் பணிநீக்கம்
செய்யப்படுவீர்’ என எழுத்து மூலம் அவருக்கு எச்சரிக்கை
மெமோ (Warning Memo) விடுத்துள்ளார். இந்நிலையில், கலைப் பண்பாட்டுத் துறைச் செயலராக பொறுப்பேற்ற மேத்யூ சாமுவேல் தலைவர்களை இழிவுப்படுத்திய போஸ் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக அவருக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை மெமோவை ரத்து செய்து கடந்த 06.05.2011 அன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த போஸ் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கி தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய
சுதந்திரத்திற்காகவும், சமூக விடுதலைக்காகவும், மொழி உரிமைக்காவும் அர்ப்பணிப்போடு
பணியாற்றிய தலைவர்களையும், தமிழையும் இழிவுப்படுத்தி பேசிய
பேராசிரியர் போஸ் மீதான நடவடிக்கையை ரத்து செய்ததன் மூலம் செயலர் மேத்யூ சாமுவேல்
வெளிப்படையாகவே தவறுக்கு துணைப் போனதோடு, சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டுள்ளார். மேலும், போஸ் தன் சொந்த மாநிலமான கேரளவை
சேர்ந்தவர் என்பதால்தான் அவரை காப்பாற்ற மேத்யூ சாமுவேல் முயற்சித்துள்ளார் எனத்
தெரிகிறது.
மேத்யூ சாமுவேலின் இந்த போக்கு வன்மையாக கண்டிக்கத தக்கது. எனவே, புதுச்சேரி அரசு இது குறித்து உடனடியாக தலைமைச் செயலர் தலைமையில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், குற்றமிழைத்த பேராசிரியர் போஸ் மீதான விசாரணையை நடத்தி அவரை பணிநீக்கம் செய்ய வேண்டுமெனவும், தவறுக்கு துணைப் போன செயலர் மேத்யூ சாமுவேல் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு சார்பில் கட்சி, இயக்கங்களுடன் இணைந்து தமிழார்வலர்கள் புதுவை அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment