Pages

Monday, 10 October 2011

ஆட்சியர் மற்றும் பி.ஆர்.ஓ. இருவரது கால்களிலும் உதைபடும் பந்தா சேலம் செய்தியாளர்கள்?


சேலத்தில் மட்டும்தான் மாவட்ட நிர்வாகத்தால் செய்தியாளர்கள் கேவலப்படுத்தப்படும் அவலம் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. 

நாம் மாவட்ட நிர்வாகத்திடம் வைத்த கோரிக்கைகள் மூன்று. முதலாவது கோரிக்கை செய்தியாளர்களுக்கான அடையாள அட்டை. ஏப்பிரல் முதல் வாரத்தில் வழங்கி முடிக்கப்பட்டிருக்க வேண்டிய அடையாள அட்டை அக்டோபர் மாதமாகியும் இன்னும் வழங்கப்படவில்லை. தற்போது சேலம் ஆட்சியராக இருக்கும் மகரபூஷனத்திடம் மூன்று முறை நாம் எடுத்துச் சொல்லி எழுத்துப் பூர்வமாக அதனை மனுவாகவும் தந்துள்ளோம். இதனை அவரும் கண்டு கொள்ளவில்லை.


செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி என்று சொல்லப்படுகிற பி.ஆர்.ஓ. பழனிசாமியும் கண்டு கொள்ளவில்லை. செய்தியாளர்களுக்கான செலவினங்கள் என்று கணக்கில் காட்டிவிட்டு செய்தியாளர்களுக்கு அது போன்ற எதையும் செய்யாத மக்கள் தொடர்பு அலுவலகம் 2011 - 2012வது ஆண்டுக்கான அடையாள அட்டையைச் செய்தியாளர்களுக்குப் பெற்றுத் தந்திருக்க வேண்டிய அத்தியாவசியப் பணியைக் கூடச் செய்யாமலிருப்பது வெட்கம்!


இது பற்றி பி.ஆர்.ஓ. பழனிசாமியிடமும் மூன்று முறை வாய்மொழியாக வும், இருமுறை மனுவாகவும் தந்திருக்கிறோம். செய்தியாளர்களின் சிரமங்களைக் களைவதற்காகவே சேலத்துக்குத் தான் அனுப்பப்பட்டவன் என்பதைப் போலக் காட்டிக் கொள்ளும் இந்த பி.ஆர்.ஓவுக்கு இதைவிடவும் வேறு அத்தியாவசிய அலுவல்தான் என்ன? இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே சேலத்துச் செய்தியாளர்களின் விவரக் குறிப்புகள் மற்றும் புகைப்படங்கள் நேரிலேயே அவரிடம் ஒப்படைக்கப்பட்டும் இது பற்றி அவர் சிறிது கூட கண்டு கொள்ளவேயில்லை. 


கடைசியாக இரண்டு வாரங்களுக்கு முன்பாக செய்தியாளர் அடையாள அட்டை பற்றி நாம் வலியுறுத்தி அவரிடம் கேட்டபோது நமது அமைப்பில் முக்கியப் பொறுப்பில் உள்ள வாரமிருமுறை பத்திரிகைகளின் செய்தியாளர்களை மட்டம் தட்டுவதைப் போல தினசரிகளுக்கு மட்டும்தான் அடையான அட்டை வழங்கப்படும் வாரமிருமுறைகளுக்கு வழங்கக் கூடாது என அரசுவிதிமுறை இருக்கிறது என்று கூறினார்.

இதற்கு முன்பு சேலத்தில் இருந்த பி.ஆர்.ஓக்களும் பிற மாவட்டங்களில் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையை வழங்கியிருக்கும் பி.ஆர்.ஓக்களும், இதற்கு முன்பாகக் கடந்த எட்டு ஆண்டுகளாகச் சேலத்தில் அடையாள அட்டையையை வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களுக்கு வழங்கியிருந்த பி.ஆர்.ஓக்களும், ஆட்சியர்களும் விபரம் இல்லாதவர்கள். அவர்கள் செய்த தப்பை நான் செய்ய முடியாது என்று எகத்தாளமாகக் கூறி அதிர வைத்தார்.

செய்தியாளர்களைப் பிரித்துக் கூறு போடும் பழனிசாமியின் தந்திரம் புரிந்தபோதிலும் அது பற்றி பெரிதும் அலட்டிக் கொள்ளாமல் வாரமிருமுறைகளுக்கு தரமறுப்பதன் காரணத்தை எழுதி அந்த விண்ணப்பங்ளைத் திரும்பத் தந்து விடுங்கள்; நீங்கள் சொல்வது போல தினசரிகளுக்காவது அடையாள அட்டையை உடனே தாருங்கள் என்று செய்தியாளர்களால் சொல்லப்பட்டது. அடுத்தநாளே தருவதாக வாய்ச்சொல் வீரம் காட்டியவர் அதன் பிறகு அதன் மீது எந்தவிதமான நடவடிக்கையையும் எடுக்கவில்லை. 

அதேபோல போலியாக பிரஸ் என்று தங்கள் வாகனங்களில் எழுதிக் கொண்டு அலைபவர்கள் மீது மிகக்கடுமையான நடவடிக்கையை இரண்டே நாட்களில் எடுப்பதாக அவர் சொன்னவிதம் தேர்தல் வாக்குறுதியைத் தரும் அரசியல்வாதியையும் தோற்கடிக்கும் ரகம். போலி செய்தியாளர்கள் மீது இதுவரையில் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.

தமிழ்நாட்டிலேயே 
செய்தியாளர்களுக்கென
ஆட்சியர் அலுவலகத்தில்
தனியறை ஒதுக்கப்படாத அவலம் 
சேலத்தில் மட்டுமே உள்ளது. செய்தியாளர்களுக்கான அறை என்று ஒதுக்கீடு செய்யப்பட்டதையும் இழுத்துப் பூட்டி,
எங்களை வதைத்து வீதியில் நிற்க வைத்து இன்பம் காண்பது ஏனோ?


இதற்காகவும் பலமுறை ஆட்சியரிடம் மனுக்கள் சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றத்தினரால் தரப்பட்டது. நேரிலும் சொல்லப்பட்டது. இதையும் ஆட்சியர் மகரபூஷனம் கண்டு கொள்ளவில்லை. "செய்தியாளர் அறையை உங்களுக்கு ஒதுக்கி பி.ஆர்.ஓ. பழனிசாமியிடம் ஒப்படைத்து விட்டேன். நீங்கள் அவரிடம் கேட்டுக் கொள்ளுங்கள்" என்று பி.ஆர்.ஓ.வை நோக்கிக் கையைக் காட்டிவிட்டு ஒதுங்கிக் கொண்டார். 

பி.ஆர்.ஓ. பழனிசாமியோ "கலெக்டர், செய்தியாளர்களுக்கு அறை எதையும் இப்போதைக்குத் தர வேண்டாம் அரசுத்துறை அலுவலங்களுக்கு அது தேவைப்படுகிறது என்று என்னிடம் சொல்லிவிட்டு ஏன் இப்படி உங்களிடம் சொன்னார் என்பது எனக்குத் தெரியவில்லை" என்று அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு கூறுகிறார். 

ஆட்சியர் மற்றும் பி.ஆர்.ஓ. இருவரது காலிலும் உதைபடும் பந்தாக சேலம் செய்தியாளர்கள் நடத்தப்படுகிறார்கள்.

 இதைக் கண்டித்து சேலம் செய்தியாளர்கள் சார்பில் அக்டோபர் 11ந் தேதி முதல் ஒரு வாரம் கறுப்பு ரிப்பன் அணிந்து செய்தி சேகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சேலம் பி.ஆர்.ஓ.பழனிசாமி பற்றிய நமது முந்தைய இடுகையில் இருந்து ஒரு பகுதி.... 

"ஊழல்களை தட்டிக் கேட்கும் சேலம் செய்தியாளர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தி அதன் மூலம் தனக்குப் பிடிக்காத ஏ.பி.ஆர்..வையும் சேர்த்துப் பழிவாங்கும் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார் பி.ஆர்..
அரசு கொள்கைகளுக்கு எதிரானது என முடக்கப்பட்டு விட்ட கேபிள் டிவி செய்திகளுக்கு அன்னார் அதி தீவிர ஆதரவாளர்.கேபிள் நியூஸ் செய்தியாளர்களுக்கு தர முடியாத அடையாள அட்டையை மற்ற செய்தியாளர்களுக்கு மட்டும் தருவதா? என்ற நல்லெண்ணத்தில் தராமல் அதனை முடக்கி வைத்து விட்டார். ஏப்ரல் முதல் வாரத்திலேயே வழங்கப் பட்டிருக்க வேண்டிய செய்தியாளர்களுக்கான அடையாள  அட்டை ஆகஸ்ட் மாதம் வரையில் இன்னும் வழங்கப்படவே இல்லை என்பது வெட்கக் கேடான விஷயம்! அரசு கொள்கைக்கு எதிரான போக்கை இவர் இனியாது திருத்திக் கொள்ள வேண்டும் என்பதே சேலம் செய்தியாளர்களின் ஒருமித்த எண்ணம்"

முந்தைய இடுகையை விரிவாகப் படிக்க....

No comments:

Post a Comment