Pages

Friday, 23 August 2013

பெண் பத்திரிகையாளருக்கு நேர்ந்த துயரம்!

கடந்த டிசம்பர்  மாதம் டெல்லியில் ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவி ஒருவரைப் பலர் கற்பழித்த காட்டுமிராண்டிதானத்தை நினைவுபடுத்தும் வகையில் அதே போன்று மற்றும் ஒரு சம்பவம் மும்பையில் கடந்த இருபத்தியிரண்டாம் தேதி நடந்ததுள்ளது.


இந்த முறை பாலியல் வன்முறைக்கு ஆளானவர் மும்பையில் இருந்து வெளியாகும் பிரபல ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் புகைப்படச் செய்தியாளராகப் பணியாற்றி வந்த இருபத்தியிரண்டே  வயதான துடிப்பான ஒரு இளம்பெண். அந்தப் பத்திரிகையில் துணிச்சலான பல தொடர் கட்டுரைகளைப் புகைப்படங்களுடன் தந்து பிரபலமானவர்.

கடந்த 22ந்  தேதி  மாலை 7 மணிக்கு மும்பை மகாலட்சுமி ரெயில் நிலையத்தையொட்டியுள்ள பழங்கால கட்டடமான சக்தி மில் பற்றி கட்டுரை எழுதுவதற்காக அந்தக்  கட்டடத்தை படம் பிடிக்கச் சென்றார். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத பகுதி என்பதால் அவருக்கு உதவியாக அவரது அலுவலகத்தைச் சேர்ந்த ஆண் நண்பர் ஒருவரும் உடன் சென்றுள்ளார்.


அந்த சமயத்தில் அங்கு வந்த இரண்டு பேர் கட்டடத்தின் உள்ளே படம் எடுக்க சிறப்பு அனுமதி தேவை என்றும் போட்டோ எடுக்க அனுமதி வாங்கித் தருவதாகவும் சொல்லி  அவர்களை அந்தப்  பழைய கட்டிடத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர்.  அவர்கள் அங்கு சென்ற கொஞ்ச நேரத்துக்குள்ளாக திடீர் என்று மேலும் மூன்று பேர் அங்கு வந்துள்ளனர். அவர்கள் அனைவ ரும் குடிபோதையில் இருந்தனர். அதன் பிறகு நிலைமை அப்படியே மாறிப் போனது.

ஐந்து பேருமாக ஒன்று சேர்ந்து பெண் போட்டோகிராபரின் நண்பரைத் தனியே இழுத்து அடித்து தாக்கி கட்டிப் போட்டனர். பின்னர் அந்த பெண்ணை கட்டிடத்தின் உள்ளே இழுத்துச் சென்று கற்பழித்தனர்.  அந்த மனித மிருகங்களின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அவர் தனது  வலிமையைத் திரட்டிக் கடுமையாகப் போராடியும்  எடுபடவில்லை. கூச்சல் போட விடாமல் அவரது வாயையும் அடைத்து வன்புணர்வு நடந்தது.


பின்னர் இருவரையும் அங்கேயே போட்டு விட்டு ரெயில் தண்டவாளம் வழியாக தப்பி ஓடி விட்டனர். அதன்பிறகு ஆண் நண்பரும் அந்தப் பெண்ணும் தட்டுத்தடுமாறி வெளியே வந்தனர். உடனே இருவரையும் ஜஸ்லோக் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் போலீசில் புகார் செய்ப்பட்டது. கும்பல் தாக்குதலில் நண்பருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதே போல் அந்த பெண்ணுக்கு உள்காயமும், அதிகமான ரத்தப்போக்கும் ஏற்பட்டுள்ளது.

இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.  பாதிக்கப்பட்ட பெண் பத்திரிகையாளர் என்பதால் மும்பையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜோஷி மார்க் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீஸ் படை விரைந்து சென்று பார்வையிட்டது. மும்பை போலீஸ் கமிஷனர் கூறுகையில், கற்பழிப்பு கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்ததேகிக்கப்படும்  8 பேரைப் பிடித்து அவர்களிடம் விசாரணை செய்து வருகிறோம்.  விரைவில் குற்றவாளிகள்  பிடிபடுவார்கள் என்று தெரிவித்தார்.


பெண் போட்டோகிராபர் தெரிவித்த அடையாளங்களை வைத்து 5 குற்றவாளிகளின் உருவப்படத்தை வரைந்து போலீசார் வெளியிட்டுள்ளனர். இவர்களை போலீசார் 18 தனிப்படை அமைத்து தேடுகிறார்கள். மராட்டிய உள்துறை மந்திரி ஆர்.ஆர்.பட்டீல் ஆஸ்பத்திரிக்கு சென்று பெண் போட்டோகிராபரை பார்த்து ஆறுதல் கூறினார்.

 பெண்கள் வசிக்கப் பாதுகாப்பற்ற நாடு என்று தொலைகாட்சி ஒன்றில் வெளியான தகவல் உண்மைதான் என்பதுபோல நடந்துள்ள இந்தச் சம்பவம் தெற்கு ஆசிய நாடுகளில் அதிர்ச்சிப் பேரலைகளை உருவாக்கி உள்ளது. 


இந்தச் சம்பவத்துக்கு சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றமும் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.