Pages

Saturday 31 March 2012

'அவார்டு' சுதாகருக்கு மேலும் ஒரு விருது!



கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியா அண்மையில் நடத்திய வலைவாசல் ஊடகப் போட்டியில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்ற மூத்த உறுப்பினரும், சேலம் டைம்ஸ் ஆப் இந்தியா புகைப்படக் கலைஞருமான திரு.ஏ.எம்.சுதாகர் அவர்கள் மூன்றாவது பரிசை வென்றுள்ளார்.




தமிழர்களின் கலை, கலாசாரம், பாரம்பரியப் பெருமைகளை மற்ற நாட்டினரும், பிறமொழிகளைத் தாய் மொழியாகக் கொண்டுள்ளவர்களும் அறியச் செய்வதற்காக இந்தப் போட்டி நடத்தப்பட்டது. இந்தப் போட்டியில் சுமார் 30 ஆயிரம் புகைப்படங்கள் பங்கேற்றன.


புகைப்படக் கலையில் பல அகில இந்திய மற்றும் சர்வதேச விருதுகளைக் குவித்துள்ள திரு.ஏ.எம்.சுதாகர் அவர்களின் சேவல் சண்டை படம் 3-வது பரிசை வென்றுள்ளது.




மேலும், சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உதவிப் பேராசிரியர் திரு. மா.தமிழ்ப்பரிதி அவர்களுக்கு இதே போட்டியில் தொடர் பங்களிப்பாளருக்கான பரிசு கிடைத்துள்ளது.




2012-ம் ஆண்டின் விருது வேட்டையை விக்கிப்பீடியா ஊடகப் போட்டியில் இருந்து தொடங்கியுள்ள ஏ.எம்.சுதாகர் அவர்களுக்கும், ஆசிரியர்
மா.தமிழ்ப்பரிதி அவர்களுக்கும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சியடைகிறது.

Thursday 29 March 2012

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!! என்றெல்லாம் அரசு அலுவலகங்களில் நியான் போர்டுகள் வைத்தாலே போதும், தமிழ் தானாக வளரும் என்பதாகவே அரசு அதிகாரிகளின் எண்ணம் இருக்கிறது.

ஆங்கிலத்தில் எழுதும் போது இம்மி இடறினாலும் கொலைக் குற்றம் புரிந்ததைப் போல பதறும் இந்த அதிகாரிகளின் பார்வையில் தமிழ் எவ்வளவு அசிங்கப்படுத்தப் பட்டாலும் கவலை இல்லை என்பதே இன்றைய நிலை.

A Apple என்று எழுதினால் வானத்துக்கும் பூமிக்கும் தாவிக் குதித்து An apple  என்று அதனை மாற்றி எழுத வைக்கும் இவர்களால் தமிழ் எப்படியெல்லாம் சின்னா பின்னம் ஆக்கப்படுகிறது என்பதைப் பார்ப்போமா....

சேலம் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலரால் அண்மையில்  அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பப் பட்டுள்ள ஒரு மின்னஞ்சலில் அனுப்பப்பட்டுள்ள படத்துக்கான அடிக்குறிப்பைச் சற்று கவனமாகப் படித்துப் பாருங்கள்....


சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனம் திருந்திய மதுவிலக்குக் குற்றவாளிகள் 13 நபர்களுக்கு தலா ரூ. 30.000 வீதம் ரூ.90,000க்கான காசோலையினை ஆட்சித் தலைவர் திரு.க.மகரபூஷணம் இ.ஆ.ப. அவர்கள் வழங்கினார் என்று அந்த அடிக்குறிப்பில் காணப்படுகிறது.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனம் திருந்திய மதுவிலக்குக் குற்றவாளிகள் 13 நபர்களுக்கு.... என்று குறிப்பிட்டுள்ளது ஏதோ அங்கு வேலை பார்த்த 13 மதுவிலக்குக் குற்றவாளிகள் மனம்  திருந்தினார்கள் என்பது போன்ற மயக்கமான பொருளையல்லவா தருகிறது?

மனம் திருந்திய மதுவிலக்குக் குற்றவாளிகள் 13 நபர்களுக்கு தலா ரூ. 30.000 வீதம் ரூ.90,000க்கான காசோலையினை ஆட்சித் தலைவர் திரு.க.மகரபூஷணம் இ.ஆ.ப. அவர்கள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து வழங்கினார் என்று குறிப்பிட்டு இருந்தால் அது சரியாக இருந்து இருக்கும். அதன் பொருளும் குழப்பமில்லாமல் புரிந்து கொள்ளப்பட்டு இருக்கும்.

மக்களுக்குக் கொண்டு சேர்க்கும் செய்தியில் சற்று கவனத்தைக் காட்டி இருக்க வேண்டும் சேலம் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள்...


Wednesday 28 March 2012

வாழ்க மணமக்கள்!

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் சேலம் செய்தியாளரும், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்ற இணைச் செயலருமான திரு.மோகன்ராஜ் அவர்களுக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 25) திருமணம் இனிதே நடந்தேறியது.


வாழ்க மணமக்கள்!                         வாழிய பல்லாண்டு!!

Thursday 22 March 2012

உலக வன நாள் விழா பேரணிக் காட்சிகள்!

சேலம் மாவட்ட வனத்துறை, பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவை இணைந்து உலக வன நாள் விழாவை புதன்கிழமை கொண்டாடின. 

இதையொட்டி சேலம் சேர்வராயன் தெற்கு வனச் சரகர் அலுவலகத்தில் இருந்து கோரிமேடு வரை கல்லூரி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. மண்டல வனப் பாதுகாவலர் அ.வெங்கடேஷ் தலைமை தாங்கினார்.  மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை 
முன்னிலை வகித்தார். 

பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கி.முத்துச்செழியன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

 இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அ.வெங்கடேஷ் கூறியது:

ஆண்டு தோறும் இரவும் பகலும் சம கால அளவில் இருக்கும் மார்ச் 21-ம் தேதி
உலக வன நாள் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் வனங்களின் பரப்பளவை அதிகப்படுத்துவதும், பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆகும். மனித குலம் வேரூன்றி வாழ மண்ணில் மரங்கள் அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்காக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நல்ல நாள்களில் மரக் கன்றுகள் நட வேண்டும்.

 உலக பல்லுயிர் பெருக்கத்தின் பிறப்பிடம் வனங்கள். புவி வெப்பமயமாதலில்
இருந்து நம்மைக் காப்பதும் மரங்கள்தான். பொதுமக்கள், வாகனங்கள்
வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற கரியமில வாயுக்களை எடுத்துக் கொண்டு மனிதர்களுக்காக ஆக்சிஜனை கொடுக்கும் மரங்களை நாம் போற்ற வேண்டும். இந்திய வனக் கணக்கெடுப்பு அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள வனப் பரப்பளவை கணக்கெடுத்து அறிவிக்கும். கடந்த 2009-ம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் சுமார் 200 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு கூடியுள்ளது தெரிய வந்துள்ளது.

 அதே போலவே 2011-ம் ஆண்டு அறிக்கையிலும் வனப் பரப்பு கூடியிருப்பது தெரிய வந்துள்ளது. அதன் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும். தமிழகத்தில் 22,877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இது மொத்த நிலப் பரப்பில் 17.59 சதவீதம் ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5,205 சதுர கிலோ மீட்டரில் 1,254.3 சதுர கிலோ மீட்டர், அதாவது 24.09 சதவீதம் காடுகள் உள்ளன. இது மாநில சராசரியைக் காட்டிலும் அதிகம். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வனப் பரப்பு குறைந்துள்ள சூழலில், தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் காடுகள் பெருகியே வருகின்றன. வனத்தைப் பெருக்குவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடி
மாநிலமாக உள்ளது.

 இருப்பினும் நிலப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு அளவு காடுகள் இருக்க
வேண்டும் என்பதால் 33 சதவீத வனப் பரப்பு என்ற இலக்கை எட்ட வேண்டியுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு களப் பணியில் வனத்துறை ஈடுபட உள்ளது என்றார் வெங்கடேஷ்.

 மேட்டூர் மண்வள பாதுகாப்பு அலுவலர் ஜி.லோகநாதன், பத்திரிகையாளர் மன்றத்தலைவர் வை.கதிரவன், இடைப்படு காடுகள் கோட்ட வன அலுவலர் தனராஜூ, பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.முத்துசாமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.

உலக வன நாளை முன்னிட்டு வனத்துறை அலுவலக வளாகத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. முத்துச் செழியன் மரக்கன்று நடும் காட்சி!


பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.முத்துச் செழியனுடன்   சேலம் ஆட்சியர். திரு.மகரபூஷணம் 


கொடியசைத்தலைத் தொடர்ந்து தொடங்குகிறது பேரணி!