Pages

Monday, 18 August 2014

அனைவரும் வருக!


World Photography Day 2014


எங்களின் 
மூன்றாம் ஆண்டு விழாவுக்கு 
அனைவரையும் வரவேற்பதில் 
பெருமை அடைகிறோம்.


Tuesday, 25 March 2014

வருந்துகிறோம்.....

சேலம் விநாயகா மிஷன்ஸ் கல்வி நிறுவனங்களின் தலைவரும் மற்றும் சேலம் விநாயகா மிஷன்ஸ் பல்கலைக் கழக வேந்தருமான 
திரு. சண்முகசுந்தரம் அவர்கள் 2014ஆம் ஆண்டு மார்ச் 25ந் தேதி மாலையில் இயற்கை எய்தினார்.

அருட்கொடையாளர், ஆன்மீகச் செம்மல் என்று பலவாறும் புகழப்பட்ட திரு சண்முகசுந்தரம் ஒரு பத்திரிகையாளராகவும் இலக்கியவாதிகளால் அறியப்பட்டவர். விண்நாயகன் என்ற இதழ் இவரால் தொடங்கி நடத்தப்பட்டது.

பத்திரிகையாளர்களின் மீது அளவற்ற அன்பைக் கொண்டவரான திரு. சண்முகசுந்தரம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது இயங்கி வரும் செய்தியாளர் வாளாகத்தின் உள் அரங்கக் கட்டுமானத்தினைப் பெரும் பொருட் செலவில் உருவாக்கித் தந்து சேலம் பத்திரிகையாளர்கள் மனதில் நீங்காத இடத்தினைப் பெற்றவர்.


திரு. சண்முகசுந்தரம் அவர்களின் மறைவு சேலம் செய்தியாளர் குடும்பத்துக்குப் பேரிழப்பாகும். அன்னாரது மறைவுக்கு சேலம் பத்திரிகையாளர்கள் சார்பிலும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் சார்பிலும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

Tuesday, 14 January 2014

ஊடகப் பொங்கல் குடும்ப விழா 2014 - புகைப்படத் தொகுப்பு....































ஊடகப் பொங்கல் குடும்ப விழா 2014!

உழவு இல்லாவிட்டால் உணவில்லை. உணவு இல்லையென்றால் உயிர்கள் இல்லை. எனவேதான் உணவு கொடுத்தவரை உயிர் கொடுத்தவர் என்கிறது வள்ளுவம். உலகில் உள்ள மற்ற எல்லா உழைப்பாளர்களையும் விட உழவனே உயர்ந்தவன். தனது உழைப்பால் விளைந்த பொருள்களைக் கண்டு அவனது இதயத்தில் பொங்கும் உவகையே பொங்கல்.


மனிதனும் விலங்கும் ஒன்றுபட்டு வாழ்ந்தால் சமுதாயம் முன்னேறும் என்பதையும், ஆண்டு முழுவதும் உழைத்து நமக்கு உணவை அளித்துவிட்டு தாளினை மட்டும் தமக்கான உணவாக்கிக் கொள்ளும் மாடுகளுக்கு நாம் கடமைப்பட்டவர்கள் என்பதையும் உணர்த்தும் நாளே மாட்டுப் பொங்கல். ஐந்தறிவு உயிரையும் ஆறறிவு உயிரையும் இணைக்கும் உன்னதத் திருவிழா அது. காணும் பொங்கல், பழைய பகையை மறந்து நட்பினைப் புதுப்பித்துக் கொள்ளும் நாள், கரி நாள் உழவுக்கு உதவிய கதிரவனைத் தொழுதிடும் நாள்.

எந்த ஒரு மதத்துக்கும் தொடர்பில்லாமல் உழைப்புக்கும், இயற்கைக்கும் மட்டுமே நன்றி சொல்லும் நல்ல நாளான பொங்கலை, வெறும் விடுமுறை நாளாக மட்டும் இனி வரும் சந்ததியினர் கருதிவிடக் கூடாது என்பதற்காகவே சிறப்பாகக் கொண்டாட முடிவு செய்தது சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம். 


சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஊடகப் பொங்கல் குடும்ப விழாவின் ஒரு பகுதியாக கடந்த சனவரி 5ந் தேதி கல்லூரி மாணவர்க்கான இயற்கை விவசாயம் குறித்த பேச்சுப் போட்டியும், குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும்  சேலம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள செய்தியாளர் அரங்கத்தில் நடத்தப்பட்டது. 

இந்தப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா, ஊடக பொங்கல் குடும்ப விழா ஆகியவை ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 12) சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள செய்தியாளர் வளாகத்தின் எதிரில் நடைபெற்றன. சேலம் மாநகர காவல் ஆணையாளர் திரு.கே.சி.மஹாலி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ்.சக்திவேல் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகக் கலந்து கொண்டனர். 


சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்ற  உறுப்பினர் செந்தில் வரவேற்புரை நிகழ்த்தினார். தலைமையுரையினை மன்றத்தின் தலைவர் கதிரவனும், தொடக்கவுரையினை துணைத் தலைவர் சிவசுப்பிரமணியனும் ஆற்ற விழா இனிது தொடங்கியது.  காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையிலும் நடைபெற்ற இந்த நிகழ்வில், சேலத்தைச் சேர்ந்த பெரும்பாலான பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் தங்களது குடும்பத்துடன் கலந்து கொண்டனர். 

இளைய தலைமுறையினர் அறிந்து கொள்ளும் விதமாக தமிழர்களின் பாரம்பரிய நெல் ரகங்களான அரிய வகை நெல் ரகங்கள் மற்றும் விதைகள் ஆகியவற்றின் கண்காட்சி நடைபெற்றது. 7 அடி உயரம் வரை வளர்ந்திருந்த மாப்பிள்ளைச் சம்பா என்ற அரிய ரக நெற்பயிரும் காட்சியில் இடம் பெற்றிருந்தது.



பொங்கல் திருவிழாவின் சிறப்புகளைப் பற்றி பேசிய இரு சிறப்பு விருந்தினர்களும், பாரம்பரிய நெல் ரகங்களைக் காப்பாற்றி, அதை பல்கிப் பெருக்கி அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினர். 



"தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் வட மாநிலங்களில் சங்கராந்தி போன்ற பெயர்களில் கொண்டாடப் பட்ட போதிலும், பொங்கல் கொண்டாடப்படும் விதமும் உழைப்புக்குத் துணை நின்ற இயற்கை, கால்நடைகள் உள்ளிட்ட அனைத்துக்கும் நன்றி தெரிவிக்கும் உயரிய விழாவாகக் கொண்டாடப் படுவது போற்றுதற்குரியது" என்றார் சேலம் மாநகரக் காவல் ஆணையாளர் மஹாலி. "பொங்கலோ பொங்கல் என்ற பதத்தின் பொருள் என்ன?" என்றும் ஆர்வத்துடன் கேட்டுத் தெரிந்து கொண்டார்.



இந்த பொங்கல் விழா தனது இளமைப் பருவத்தை நினைவுபடுத்துவதாகக் கூறிய சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் , தன்னை மீண்டும் விவசாய மாணவனாக மாற்றிய பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவித்தார். பொங்கல் போன்ற பொருள் பொதிந்த விழாக்களின் சிறப்பை தற்போதையத் தலைமுறையினருக்கு  உணர்த்துவதற்காக அவர்களை இந்த விழாவின் போது கிராமத்துக்குக் கட்டாயம் அழைத்துச் செல்ல வேண்டும் என பெற்றோர்களை அவர் கேட்டுக் கொண்டார்.


இதனைத் தொடர்ந்து கல்லூரி மாணவர்க்கானப் பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளையும் ஓவியப் போட்டியில் பங்கேற்ற குழந்தைகளுக்கான பரிசுகளையும் சிறப்பு விருந்தினர்கள் வழங்கிச் சிறப்பித்தனர். 







 ஊடகவியலாளர்களின் இல்லத்தரசிகள் சமைத்த பொங்கலையும், செங்கரும்பையும் ருசித்தபடி, பெண்கள், குழந்தைகளின் விளையாட்டுப் போட்டிகளை ரசித்தபடி, நெஞ்சில் நீங்காமல் நிறைவாக அமைந்தது ஊடகப் பொங்கல் 2014.