சேலம் மாவட்ட ஆட்சியர் திரு.மகரபூஷணத்தாலும், நிழல் ஆட்சியராக அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பதாகத் தன்னை கருதிக் கொண்டு செயல்பட்டு வரும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பழனிசாமியாலும் சேலம் மாவட்டச் செய்தியாளர்களுக்கான உரிமைகள் முற்றிலுமாக மறுக்கப்பட்டு தொடர்ந்து அவர்களைக் கேவலப்படுத்தி வரும் அவலம் குறித்து நமது முந்தைய பதிவுகளில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.
நாலு காணி நிலத்தையா பத்திரிகையாளர்கள் கேட்டு விட்டார்கள்?
அப்படித் தர முடியாதவாறு அவர்களால் கேட்கப்பட்டது தான் என்ன? என்ற வினாக்கள் இந்தத் தருணத்தில் எழுவது நியாயம்.......
ஒவ்வொரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையார்களுக்கென தனி அறை ஒதுக்கப்படுவதும் அரசாங்கத்தால் அதில் மின்விசிறி, குடிநீர், தொலைபேசி போன்ற அத்தியாவசிய வசதிகள் செய்து தரப்படும். சேலம் பழைய ஆட்சியர் அலுவலகத்தில் இந்த வசதிகள் செய்து தரப்பட்டிருந்தன.
சேலம் பழைய ஆட்சியர் அலுவலகம் இடிக்கப்பட்டு அந்த இடத்தில் புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டப்பட்ட போதே அதன் வரைபடத்தில் பத்திரிகையாளர்களுக்கான அறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டு குறிக்கப்பட்டது.
புதிய கட்டடம் கட்டி முடிக்கப்படும் வரையும் சற்றுத் தள்ளி உள்ள நாட்டாண்மைக் கழகக் கட்டடத்தில் கார் செட்டின் ஒரு ஓரமாக அறை தடுக்கப்பட்டு அதைப் பத்திரிகையாளர்களுக்கென தற்காலிகமாக ஒதுக்கீடு செய்தனர். அரசுக்குச் சொந்தமான இந்த அறையின் மின்சாரக் கட்டணம் இது நாள் வரையில் பத்திரிகையாளர்களாலேயே கட்டப்பட்டு வருகிறது. அவர்களே காசு கொடுத்துக் குடிநீரையும் வாங்கிக் கொண்டுள்ளனர். இது போன்ற கொடுமை வேறு எந்த ஊரிலும் இல்லை.
புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பின்பும் அதில் பத்திரிகையாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட அறையைத் தராமல் இழுத்தடித்து ஹிம்சை செய்து வருகின்றனர் ஆட்சியரும், பி.ஆர்.ஓ.வும். "எங்களுக்கான அறையை எங்களிடம் ஒப்படையுங்கள்"என்று கேட்பதுதான் பத்திரிகையாளர்கள் செய்த முதல் குற்றம்.
ஆண்டு தோறும் மார்ச்31க்குள் புதுப்பித்து வழங்கப்பட்டு விடும் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டையை அக்டோபர் மாதம் வரையில் இன்னமும் வழங்கப்படவே இல்லை. இதை உடனடியாத் தாருங்கள் என்று கேட்பது குற்றம் நம்பர் டூ.
சேலத்தில் பெருகி விட்ட போலி பத்திரிகையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியது மூன்றாவது குற்றம்.
இவைகள்தாம் நாங்கள் செய்த குற்றங்கள்.
எங்களது நியாயமான மூன்று கோரிக்கைகளை நிறைவேற்ற சேலம் மாவட்ட ஆட்சியரிடம் இதுவரையில் எங்களால் மூன்று மனுக்கள் நேரிலேயே தரப்பட்டன. நான்காவதாக ஒரு மனு மக்கள் குறை கேட்பு நாளில் பிரஜைகளில் ஒருவராக வரிசையில் நின்று எங்களால் தரப்பட்டது.
பி.ஆர்.ஓ.விடமும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் தரப்பட்டன. ஆனால் அதை அவரும் கண்டு கொள்ளவே இல்லை.
இதனால் வெறுத்துப் போன நாங்கள் அண்மையில் கருப்புப் பட்டையினை சட்டையில் புகைப்படத்துடன் குத்திக் கொண்டு ஆட்சியர் அழைத்திருந்த செய்தியாளர் சந்திப்புக்குப் போனோம். அங்கும் எங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்பதை நேருக்கு நேரே சுட்டிக் காட்டினோம்.
அனைத்துத் துறை அதிகாரிகள் முன்னினையில் ஏற்பட்ட இந்த நெருக்கடியால் ஆட்சியருக்கு எங்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பதைத் தவிர வேறு வழி இல்லாது போனது. போலி பத்திரிகையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்.பி.க்கும் மாநகர் போலீஸ் கமிஷனருக்கும் உத்தரவிட்டார் ஆட்சியர்.
இந்த அறிவிப்பை அனைத்து ஊடகங்களிலும் வெளியிட வைத்த பி.ஆர்.ஓ.வால் அதன் தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்பதை இன்னமும் பத்திரிகைகளுக்கு தர முடியாத பரிதாபத்தில் இருக்கிறார்.
காரணம்....?
போலி பத்திரிகையாளர்கள் மீது இந்த நாள் வரையில் போலீஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.... ஒரு மண்ணும் இல்லை..... அவர்கள் தங்கள் மாமூல் வாழ்க்கை பாதிக்கப் படாதவர்களாக இது குறித்து எந்தவிதமான கவலையுமே படாதவர்களாக உள்ளனர்.
தனது உத்திரவு
போலீசால்
அலட்சியப்படுத்தப்பட்டது பற்றி
சேலம் ஆட்சியர்
கவலைப்பட்டதாகவேத்
தெரியவில்லை.
அடுத்ததாக உள்ளாட்சித் தேர்தல் முடிந்த அடுத்த நாளில் செய்தியாளர்களுக்கான அடையாள அட்டையும், 24ந் தேதியன்று புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பத்திரிகையாளர்களுக்கென அறையினை ஒதுக்கீடு செய்து தருவதென்றும் ஆட்சியராலும் பி.ஆர்.ஓவாலும் அறிவிக்கப்பட்டது.
சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களை மட்டம் தட்டும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையினை மறுத்து வினோதமான ஒரு காரணத்தைச் சொல்லி அதை எழுத்துப் பூர்வமாகவும் கையெழுத்திட்டு அசட்டுத் துணிச்சலுடன் தந்திருக்கிறார் பி.ஆர்.ஓ. பழனிசாமி...!
சென்னையில்
செய்தியாளர்களாக
மதிக்கப்படுபவர்களை
இந்தக் கொம்பர்கள்
சேலத்தில்
அகதிகளைப் போல
ஒதுக்குவார்களாம்.....
என்னாங்கடா நியாயம் இது...?
உள்ளாட்சித் தேர்தல் முடிந்து ஒரு வாரமாகி விட்டது. தேதி 27 ஆகி விட்டது. ஆனால், ஆட்சியராலும் பி.ஆர்.ஓ.வாலும் தரப்பட்ட வாக்குறுதிகள் என்னவாயிற்று?
வழக்கம் போல மீண்டும் ஒருமுறை சேலம் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியரும், பி.ஆர்.ஓ.வும் இணைந்து பட்டை நாமம் சாத்தி விட்டனர் என்பதே உண்மை !
சேலம் பத்திரிகையாளர்கள் இனாம் கேட்டு கை ஏந்தி நிற்கும் இரவலர்கள் அல்ல.......
என்பதை நாம் அவர்களுக்கு உணர்த்தியாக வேண்டும்.
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு....
ஆனால், இங்கோ.....
எத்தனை முறை சுட்டாலும் உறைக்க மாட்டேன் என்கிறது.
அடுத்து நாம் என்ன செய்யலாம் தோழர்களே.....?
யோசியுங்கள்...
விரைவில் கூடி முடிவெடுப்போம்.