பத்திரிகையாளர்கள்: மேலும் இரண்டு தே.மு.தி.க
எம் எல் ஏக்கள் ஜெயலலிதாவை சந்திச்சிருக்காங்களே?
’’
விஜயகாந்த்: போடா..போடா நாயே..எங்கிட்ட கேள்வி கேட்கத்தான் உனக்கு உன் பத்திரிகைல சம்பளம் தராங்களா? இல்ல உன் பத்திரிகையாடா எனக்கு சம்பளம் தருது நாயி....? ஜெயலலிதாகிட்ட போயி இந்த கேள்வியெல்லாம் கேளு....’’
மேலே குறிப்பிடப்பட்டுள்ள அநாகரீகமான வசவு இன்று சென்னையில் தன்னைக் கேள்வி கேட்ட பத்திரிக்கையாளரிடத்தில் அரசியல் நடிகர் விஜயகாந்தால் அள்ளி விடப்பட்டு இருக்கிறது.
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல அண்மைக்காலமாகப் பத்திரிக்கையாளர்கள் என்றால் அரசியல்வாதிகள் அனைவருக்குமே இளப்பம் ஆகி வருகிறது. நேர்காணலின்போது பத்திரிகையாளர்கள் சந்திக்கும் அவமானங்கள் தொடர்கதை ஆகி வருகிறது......
தேர்தல் நேரத்தில் "அண்ணே! செய்தியப் போட்டு எங்களை மக்களிடம் ப்ரொமோட் பண்ணுங்க...." என்று கெஞ்சும் இதே அரசியல் வியாதிகளுக்கு தேர்தலில் வெற்றி கிடைத்த மாத்திரத்தில் தானாகக் கொம்புகள் முளைத்து விடுகின்றன. ஏற்றி விட்ட ஏணியை நன்றி மறந்தவர்களாக எட்டி உதைக்கும் அளவுக்கு இவர்களின் மனம் அதிகாரம் அல்லது புகழ் போதையினால் மரத்துப் பொய் விடுகிறது. அதற்கு விஜயகாந்தும் விதிவிலக்கல்ல....
அண்மைக்காலமாக நிதானமிழந்தவராக அனைவரிடமும் பேசித் திரியும் அரசியல் நடிகர் விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் தற்போது தன்னுடைய சுயரூபத்தினை மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர் அவமானப்படுதப்பட்டதோடல்லாமல் அவர் முன்னிலையில் தாக்குதலுக்கும் ஆளாகியிருக்கின்றனர். அவரை சேலம் மாவட்டப் பத்திரிக்கையாளர் மன்றம் வன்மையாகக் கண்டிக்கிறது.
பத்திரிகையாளர்களைப் பகைத்து எந்த அரசியல்வாதியும் உயர்ந்தார் என்ற வரலாறு இல்லை என்பதை உணர்ந்து இனியாவது தன்னை அவர் திருத்திக் கொள்ள வேண்டும். இது இப்படியே தொடர்ந்தால் அடுத்த தேர்தலில் அவர் செல்லாக்காசு என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
விஜயகாந்துக்கு சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. அவர் மீது உரிய நடவடிக்கையை உடன் எடுக்கும்படி தமிழக அரசை சேலம் மாவட்ட பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
******************************************************************************
சென்னை விமான நிலையத்தில் மூத்த பத்திரிகையாளர் மீது தாக்குதல் சென்னை பத்திரிகையாளர் மன்றம் கடும் கண்டனம்!
இன்று (27-10-2012) சனிக்கிழமை காலை மதுரை செல்ல தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுடன் விமான நிலையம் வந்திருந்தார் தே மு தி க தலைவரும் தமிழக சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான திரு . விஜயகாந்த் . தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் தொடர்ந்து தமிழக முதல்வரை சந்தித்துள்ள அர சியல் சூழலில் திரு.விஜயகாந்திடம் கேள்விகளை கேட்க பத்திரிகையாளர்கள் முயன்றுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற விஜயகாந்த் தன்னிலை மறந்து பத்திரிகையாளர்களை கடுமையாக தரக்குறைவாகவும் அச்சுறுத்தியும் பேசியுள்ளார். விஜயகாந்துடன் வந்திருந்த சட்டமன்ற உறுப்பினர் திரு. முருகேசன் மூத்த பத்திரிகையாளர் பாலு வை தாக்கியுள்ளார். நிலை தடுமாறி கீழே விழுந்த திரு. பாலு, நடந்த சம்பவம் குறித்து மீனம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பத்திரிகையாளர்களை தரக்குறைவாகவும் அச்சுறுத்தியும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் பொறுப்பில் உள்ள விஜயகாந்த் பேசியிருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது ....
பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல்கள் ஜனநாயகத்துக்கும் ஊடக சுதந்திரத்திற்கும் விடப்படும் சவாலாகவே சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கருதுகிறது. நடந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் , திரு.விஜயகாந்த் பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு சம்பவங்களில் காவல் துறையினராலும். சமுக விரோதிகளாலும் , அரசியல்வாதிகளாலும் , சமீபத்தில் சென்னை ஐ ஐ டி பேராசிரியராலும் பத்திரிகையாளர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் தொடர்கின்றது. பத்திரிகையாளர்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்கிட தமிழக அரசு உறுதி செய்வதுடன் , இன்று நடைபெற்ற சம்பவத்தில் சட்டப்படி உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழக அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்துகிறது.
பாரதிதமிழன்
இணை செயலாளர்
No comments:
Post a Comment