Pages

Wednesday 4 September 2013

வெட்கம்! வெட்கம்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டச் செய்தியாளர்களுக்கும் ஆட்சித் தலைவர் கையொப்பமிட்ட செய்தியாளர் அடையாள அட்டை  அந்தந்த மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத் துறை அலுவலகம் மூலமாக ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வந்தது.


என்ன காரணத்தினாலோ தெரியவில்லை, இப்படி வழங்கப்பட்டு வந்த செய்தியாளர் அடையாள அட்டைக்கு கடந்த ஆண்டுடன் முற்றுப்புள்ளியை வைத்து விட்டது தமிழக அரசு! 

நடப்பு  ஆண்டான  2013இல் இருந்து தாங்கள் பணிபுரியும் பத்திரிக்கை அலுவலகங்கள் வழங்கியுள்ள செய்தியாளர் அடையாள அட்டையைக் காண்பித்தே செய்தியாளர்கள் செய்தி சேகரித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் தேவை இல்லாத குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.


இந்த  ஆண்டு  செய்தியாளர் அடையாள அட்டை அரசால்  நிறுத்தப்பட்டு விட்டது என்ற  விபரம் கூட அரசு அதிகாரிகள் பலருக்கும் தெரியவில்லை. இருந்த போதிலும்   அரசால் வழங்கப்படாத  செய்தியாளர் அடையாள அட்டையைக் கேட்டு இந்த அதிகாரிகள் செய்தியாளர்களை  மரியாதைக் குறைவாக நடித்தி வரும் சம்பவங்களுக்குக் கொஞ்சமும் பஞ்சமில்லை!

சேலத்தினைப் பொறுத்த மட்டில் இப்படிப்பட்ட சம்பவங்கள் கொஞ்சம் அதிகம்! கடந்த ஒரு வாரத்தில் மட்டும் இரண்டு சம்பவங்கள் செய்தியாளர்களை அவமானப்படுத்தப்படுவது போல நடந்துள்ளன. 

முதல் சம்பவம்: 

ஏற்காடு இடைத் தேர்தலுக்கான வாக்கு இயந்திரங்கள் சேலம் தேர்தல் அலுவலகம் வந்திறங்கியது பற்றி செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களிடத்தில்  அங்குள்ள பொறுப்பான அதிகாரிகள் அரசு தந்த அடையாள அட்டையைக் காட்டுபவர்களை மட்டுமே அனுமதிப்போம் என்று கறாராகக் கூறி உள்ளே நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர்.

இந்த ஆண்டு எங்களுக்கு அரசு செய்தியாளர் அடையாள அட்டையைத் தரவே இல்லை. எங்களுக்கு வழங்கப்படாத  அடையாள அட்டையை  எங்களிடம் கேட்டால் எப்படி என்று செய்தியாளர்கள் தரப்பில் கூற அதை அதிகாரிகள் தரப்பு ஏற்கவில்லை. தடித்த வார்த்தைகளால் தங்களின் அதிகாரத்தினைக் காட்டவே அவர்கள் முயன்றனர்.


பின்னர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் வந்து நிலைமையை விளக்கிய பிறகு மாவட்ட தேர்தல் அலுவலரால் அவரது அலுவலகத்துக்கு வந்து செல்ல தற்காலிகமாக அடையாளக் குறிப்பு ஒன்று அங்கிருந்த செய்தியாளர்களுக்கு வழங்கப்பட்டது.

இரண்டாவது சம்பவம்: 


கடந்த 03.09.2013 அன்று சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செய்தி சேகரிக்கச் சென்றிருந்த வின் டி.வி. செய்தியாளர் ஹரிஹரசுகன் அந்த அலுவலகத்தின் முகப்பினை படம் பிடித்துக் கொண்டிருந்த போ து அவரைத் தடுத்த காவலர்கள் அவரை தனிப்பிரிவு ஆய்வாளர் ராஜு முன்பாகக் கொண்டு போய் நிறுத்தி உள்ளனர்.


தன் முன்பாக நிறுத்தப்பட்ட செய்தியாளர் ஹரிஹரசுகனிடம் "நீ யார்? உன்னுடைய அடையாள அட்டை எங்கே?... "என்று ஒருமையில் ஒரு கிரிமினலை மிரட்டுவதைப் போல பேசி இருக்கிறார் ஆய்வாளர் ராஜு. அவருக்குத் துணையாக உதவி ஆய்வாளர் செல்வராஜ் தன் பங்கிற்கு தரக்குறைவான வார்த்தைகளைப் பகிர்ந்துள்ளார்.


தன்னுடைய அலுவலகம் தனக்கு வழங்கிய அடையாள அட்டையினை ஹரிஹரசுன்  காட்டிய போதிலும் அதை ஏறிட்டுக் கூடப் பார்க்க மறுத்த அந்த அதிகாரிகள் அரசால் வழங்கப்பட்ட அடையாள அட்டை இருந்தால் அதனைக் காட்டு... இல்லையானால் வெளியேறு என்று வலுக்கட்டாயமாக அங்கிருந்து அவரை வெளியேற்றி உள்ளனர்.

செய்தியாளர் ஹரிஹரசுகனைத் தெரியாதவர்கள் அல்ல இந்த அதிகாரிகள்! வந்தவர் செய்தியாளரா என்று உறுதி செய்து கொள்ள செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியினைத தொடர்பு கொண்டு கேட்டு இருக்கலாம். அல்லது சக செய்தியாளர்களிடத்தில் ஹரிஹரசுகனைப் பற்றி விசாரித்து இருக்கலாம். அப்படிச் செய்யாமல் ஆணவப் போக்கோடு அவர்கள் நடந்து கொண்டுள்ளனர்.


அரசியல்வா(வியா)திகளும். இடைத்தரகர்களும் தங்களது சொந்த வீட்டினைப் போல சர்வ சுதந்திரமாக   சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்குள் நடமாடிக் கொண்டிருப்பது இன்றளவிலும் நடந்து கொண்டுதான் உள்ளது.  அவர்களுக்கு இதே அதிகாரிகள் கூழைக்கும்பிடு போட்டு ராஜமரியாதை செய்வதும் அன்றாடம் நடக்கவே செய்கிறது. 

ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதைப் போல அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் செய்தியார்கள்தாம் இளைத்தவர்கள் போல! 

அதிகாரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் அல்லக்கைகளிடம் அதிர்ந்து கூட பேசத் திராணி இல்லாமல் அவர்களிடம் மண்டி இடும் உங்களது வீரத்தை எங்களிடம் கட்டுவதுதானா ஆண்மை? வெட்கம்!! வெட்கம்!!

இதுபோன்ற  அரசு அதிகாரிகளுக்கும் காவல்துறை அதிகாரிகளுக்கும் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் தன்னுடைய கண்டனங்களைத் தெரிவிக்கிறது. உயரதிகாரிகள் எதிர்வரும் காலங்களில் இதுபோன்ற சம்பவங்கள் நடவாமல் பார்த்துக் கொள்வதுடன் செய்தியாளர்களுடன் நல்லுறவினை கடைபிடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். 

அதேபோல ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் அங்கீகரிக்கப்பட்ட நாளிதழ்கள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களின் செய்தியாளர்களுக்கு  மீண்டும் அரசாங்கம் அடையாள அட்டையினை வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். 

தேவை இல்லாத குழப்பங்களுக்கு இதனால் முற்றுப் புள்ளியினை வைக்க முடியும். அதே சமயத்தில் போலி செய்தியாளர்களை இதன் மூலம் இனம் கண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கையினை எடுக்க அது பேருதவியாகவும் இருக்கும்!





No comments:

Post a Comment