சேலம் மாவட்ட வனத்துறை, பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்டம், மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம் ஆகியவை இணைந்து உலக வன நாள் விழாவை புதன்கிழமை கொண்டாடின.
இதையொட்டி சேலம் சேர்வராயன் தெற்கு வனச் சரகர் அலுவலகத்தில் இருந்து கோரிமேடு வரை கல்லூரி மாணவ-மாணவிகளின் பேரணி நடைபெற்றது. மண்டல வனப் பாதுகாவலர் அ.வெங்கடேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட வன அலுவலர் சுகிர்தராஜ் கோயில் பிள்ளை
முன்னிலை வகித்தார்.
பேரணியை சேலம் மாவட்ட ஆட்சியர் க.மகரபூஷணம், பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் கி.முத்துச்செழியன் ஆகியோர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அ.வெங்கடேஷ் கூறியது:
ஆண்டு தோறும் இரவும் பகலும் சம கால அளவில் இருக்கும் மார்ச் 21-ம் தேதி
உலக வன நாள் கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம் வனங்களின் பரப்பளவை அதிகப்படுத்துவதும், பாதுகாப்பதும், பராமரிப்பதும் ஆகும். மனித குலம் வேரூன்றி வாழ மண்ணில் மரங்கள் அவசியம் என்பதை அனைவரும் உணர வேண்டும். அதற்காக ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட நல்ல நாள்களில் மரக் கன்றுகள் நட வேண்டும்.
உலக பல்லுயிர் பெருக்கத்தின் பிறப்பிடம் வனங்கள். புவி வெப்பமயமாதலில்
இருந்து நம்மைக் காப்பதும் மரங்கள்தான். பொதுமக்கள், வாகனங்கள்
வெளியேற்றும் கார்பன்-டை-ஆக்ஸைடு போன்ற கரியமில வாயுக்களை எடுத்துக் கொண்டு மனிதர்களுக்காக ஆக்சிஜனை கொடுக்கும் மரங்களை நாம் போற்ற வேண்டும். இந்திய வனக் கணக்கெடுப்பு அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடு முழுவதும் உள்ள வனப் பரப்பளவை கணக்கெடுத்து அறிவிக்கும். கடந்த 2009-ம் ஆண்டு அறிக்கையின்படி நாட்டில் சுமார் 200 சதுர கிலோ மீட்டர் அளவுக்கு வனப் பரப்பு கூடியுள்ளது தெரிய வந்துள்ளது.
அதே போலவே 2011-ம் ஆண்டு அறிக்கையிலும் வனப் பரப்பு கூடியிருப்பது தெரிய வந்துள்ளது. அதன் விரிவான அறிக்கை விரைவில் வெளியாகும். தமிழகத்தில் 22,877 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் காடுகள் உள்ளன. இது மொத்த நிலப் பரப்பில் 17.59 சதவீதம் ஆகும். சேலம் மாவட்டத்தின் மொத்த பரப்பளவான 5,205 சதுர கிலோ மீட்டரில் 1,254.3 சதுர கிலோ மீட்டர், அதாவது 24.09 சதவீதம் காடுகள் உள்ளன. இது மாநில சராசரியைக் காட்டிலும் அதிகம். நாட்டில் பல்வேறு மாநிலங்களில் வனப் பரப்பு குறைந்துள்ள சூழலில், தமிழகத்தில் மட்டும் ஆண்டுதோறும் காடுகள் பெருகியே வருகின்றன. வனத்தைப் பெருக்குவதில் தமிழகம் நாட்டுக்கே முன்னோடி
மாநிலமாக உள்ளது.
இருப்பினும் நிலப் பரப்பளவில் மூன்றில் ஒரு பங்கு அளவு காடுகள் இருக்க
வேண்டும் என்பதால் 33 சதவீத வனப் பரப்பு என்ற இலக்கை எட்ட வேண்டியுள்ளது. இதற்காக பல்வேறு திட்டங்கள் மூலம் மரக் கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. சேலம் பெரியார் பல்கலைக்கழகத்துடன் இணைந்து ஏற்காடு உள்ளிட்ட மலைப் பிரதேசங்களில் பிளாஸ்டிக் ஒழிப்பு களப் பணியில் வனத்துறை ஈடுபட உள்ளது என்றார் வெங்கடேஷ்.
மேட்டூர் மண்வள பாதுகாப்பு அலுவலர் ஜி.லோகநாதன், பத்திரிகையாளர் மன்றத்தலைவர் வை.கதிரவன், இடைப்படு காடுகள் கோட்ட வன அலுவலர் தனராஜூ, பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ஏ.முத்துசாமி உள்ளிட்டோர் விழாவில் கலந்து கொண்டனர்.
உலக வன நாளை முன்னிட்டு வனத்துறை அலுவலக வளாகத்தில் சேலம் பெரியார் பல்கலைக் கழகத் துணை வேந்தர் திரு. முத்துச் செழியன் மரக்கன்று நடும் காட்சி!
பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தர் திரு.முத்துச் செழியனுடன் சேலம் ஆட்சியர். திரு.மகரபூஷணம்
கொடியசைத்தலைத் தொடர்ந்து தொடங்குகிறது பேரணி!