பத்திரிகையாளர்களே – மிக்சர் சாப்பிடவா சங்கம், காது குடையவா பேனா ?
சன் நியூஸ் தொலைகாட்சியின் ஆசிரியர் ராஜா, செய்தி வாசிப்பாளர் அகிலாவுக்கு கொடுத்த பாலியல் தொந்தரவு குறித்தும், இதற்கு எதிராக துணிவுடன் அகிலா நடத்திவரும் போராட்டம் குறித்தும் அறிந்திருப்பீர்கள். சன் சாம்ராஜ்ஜியத்தின் சக்கரவர்த்திகளில் ஒருவராக 15 ஆண்டு காலமாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிய ராஜா, புழல் சிறையில் சில நாட்களை கழித்துவிட்டு, நிபந்தனை பிணையில் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தினசரி கையெழுத்துப் போட்டுக்கொண்டிருக்கிறார். ராஜாவுக்குப் புரோக்கர் வேலைப் பார்த்த வெற்றிவேந்தன் என்ற நிருபர் இன்னமும் காவல்துறையால் தேடப்பட்டுவருகிறார். இது அகிலா என்ற தனியொரு பெண்ணின் பிரச்னை இல்லை. சன் டி.வி. என்ற தனியொரு நிறுவனத்தின் பிரச்னையும் அல்ல. தமிழ் ஊடகங்களின் அவலநிலைக்கு அகிலா ஓர் துலக்கமான உதாரணம்.
ராஜா போன்ற ஊடகப் பொறுக்கிகளுக்கு எதிராக வெளிப்படையாக களமிறங்கியிருக்கும் இந்தப் பெண்ணுக்கு அமைப்பு ரீதியாகவும், தனி நபர் என்ற அளவிலும் சிலர் உதவி வருகின்றனர். ஆனால் இதற்காகத் திரண்டு போராடியிருக்க வேண்டிய கடப்பாடுள்ள பத்திரிகையாளர் சங்கத்தில் இருந்து இதுவரையிலும் ஒரு சவுண்டும் இல்லை. இந்தப் பிரச்னை எங்கேயோ சிங்கப்பூர் பக்கம், தாய்லாந்து பக்கம் நடப்பதைப் போலவே மௌனமாக இருக்கிறார்கள். இது அருவெறுப்பான மௌனம்; அச்சம் தரும் அமைதி. தங்கள் சொந்த வலிக்காகக் கூட போராடத் திராணியற்ற இவர்கள்தான் ஜனநாயகத்தின் நான்காவது தூண்களாம். ஊருக்கு நியாயம் சொல்கிறார்களாம். மக்களுக்கு உண்மைகளை உரக்கச் சொல்கிறார்களாம். என்ன வேடிக்கை இது?
சென்னையில் மட்டும் ஏழெட்டு பத்திரிகையாளர் சங்கங்கள் செயல்படுகின்றன. சென்னை பத்திரிகையாளர் மன்றம், பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டு, மெட்ராஸ் யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் உள்ளிட்ட இந்த சங்கங்களுக்கு சென்னையின் பிரதானமான இடங்களில் அலுவலகங்கள் இருக்கின்றன. அதற்கு நிர்வாகிகள் இருக்கிறார்கள். குறைந்தது சென்னையில் மட்டும் 500 பத்திரிகையாளர்கள் இருப்பார்கள். மாநிலம் முழுவதும் கணக்கிட்டால் மாவட்டத்துக்கு ஒரு சங்கம் என வைத்துகொண்டாலும் இந்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைத் தாண்டும். இந்த சங்கங்கள் மத்தியிலிருந்து இதுவரை ஈனஸ்வரத்தில் கூட ஒரு எதிர்ப்புக் குரல் எழவில்லை. ஏன்?
சன் டி.வி. என்ற பிரமாண்டம் இவர்களை அச்சுறுத்துகிறதா? ஏதாவது பேசினால் எதிர்கால வாய்ப்புகள் மறுக்கப்படும் என்று அஞ்சுகிறார்களா? வாய் திறந்தால் இருக்கும் வேலையும் பறிபோய்விடும் என்று அடங்கிக் கிடக்கிறார்களா? விடை எதுவாயினும், கேள்வி ஒன்றுதான். சொந்தத் துறையில், உடன் பணிபுரியும் ஒரு பெண் மீதான பாலியல் வன்கொடுமைக்கு எதிராக சிறுகுரல் கூட எழுப்ப முடியவில்லை என்றால், காது குடையவா பேனாமுனை? மிக்சர் சாப்பிடவா சங்கம்?
பத்திரிகையாளர்களுக்குத் தன்மானம் இல்லையா?
சில மாதங்களுக்கு முன்பு விஜயகாந்துக்கும், ‘ஏர்போர்ட்’ பாலு என்ற பத்திரிகையாளருக்கும் மீனம்பாக்கம் ஏர்போர்ட்டில் பஞ்சாயத்து ஆனது. பாலுவை ‘நாய், நாய்’ என்று திட்டிய விஜயகாந்த், ‘நீங்களா எனக்கு சம்பளம் தர்றீங்க?’ என்று கோபமாக கேட்டார். அதைத் தொடர்ந்து விஜயகாந்துக்கு சம்பளம் கொடுக்கும் போராட்டம் நடத்தினார்கள் பத்திரிகையாளர்கள். அதற்கும் முன்பாக தினமலரில் சினிமா நடிகைகளை தவறாக சித்தரித்து ஒரு கட்டுரை எழுதினார்கள். அதற்காக சினிமாக்காரர்கள் ஒரு கண்டனக் கூட்டம் நடத்தினர். அதில் பேசிய நடிகர் விவேக் பத்திரிகையாளர்களை அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சித்தார். உடனே ஊடக உலகமே சேர்ந்து அதற்கு ஆவேச கண்டனம் தெரிவித்தது.
மிக அண்மையில் சென்னை ஐ.ஐ.டி.யில் ஒரு பத்திரிகையின் புகைப்படக்காரர் தாக்கப்பட்டார். அதற்காக வெகுண்டெழுந்த பத்திரிகையாளர் சங்கத்தினர் சாலை மறியல் செய்து நீதி கேட்டனர். கடந்த வாரம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. அப்போது ‘புதிய தலைமுறை’ தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பு வாகனத்தை தள்ளி நிறுத்துமாறு காவல்துறையினர் சொல்ல, அது தொடர்பாக இரு தரப்புக்கும் வாய்த் தகராறு மூண்டது. உடனே அங்கேயே பத்திரிகையாளர்கள் சாலை மறியல் செய்தனர். ‘தூத்துக்குடியில் நடந்த பிரச்னைதானே’ என சென்னை பத்திரிகையாளர் மன்றம் மௌனம் காக்கவில்லை. அதை கண்டித்து கண்டன அறிக்கை வெளியிட்டது.
பத்திரிகையாளர் மன்றம் சும்மா இருக்கிறது என்று நாம் “அபாண்டமாக” குற்றம் சாட்ட முடியாத அளவுக்கு அவர்கள் மேற்கண்ட வேலைகளை செய்திருக்கிறார்கள்தான். ஆனால் யாருக்காக? மேற்கண்ட கண்டனங்களும், போராட்டங்களும் பத்திரிகையாளர்களின் உரிமையை நிலைநாட்டுவதற்காக நடத்தப்பட்டவையா? வேலை கெட்டு முதலாளிக்கு நஷ்டம் வந்துவிடக்கூடாது, பத்திரிகையுலக முதலாளிகளின் கெத்துக்கு பங்கம் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டிருக்கின்றன. இவை பேனாமுனையின் வலிமையை நிரூபிக்கும் போராட்டங்களா, பத்திரிகை முதலாளிகளின் வலிமையை ஒரு அரசியல்வாதிக்கும், நடிகருக்கும், போலீசுக்கும் நிரூபித்துக் காட்டும் போராட்டங்களா?
வேறு மாதிரி சொன்னால், வேலை செய்வதில் வெளியார்களால் இடையூறு நேரும்போது கூக்குரல் எழுப்பும் சங்கங்கள், தங்களை வேலையையே முதலாளிகள் பறிக்கும்போது பொத்திக்கொண்டு இருக்கின்றன. ஒவ்வொரு ஊடக நிறுவனத்தில் இருந்தும் கொத்து, கொத்தாக பலர் வெளியேற்றப்படுகின்றனர். நீக்கத்துக்கான நியாயமான காரணம் எதுவும் சொல்லப்படுவது இல்லை. முறையான நோட்டீஸ் தரப்படுவதில்லை. ஒரு டீக்கடைக்காரர் தன்னிடம் வேலைபார்க்கும் டீ கிளாஸ் பையனை வேலையை விட்டு நிறுத்துவதாக இருந்தால் கூட நூறு ரூபாயை கையில் கொடுத்து அனுப்புவார். அந்த கருணைகூட ஊடக முதலாளிகளுக்கு கிடையாது. திடீர் என்று ஒருநாள் வேலை பறிபோகும் அவலம் இங்குதான் நடக்கும்.
எல்லோருக்கும் இது பொருந்தும்; பர்மனன்ட், காண்ட்ராக்ட், புரோபேஷனர்.. என்பதெல்லாம் சும்மா பெயருக்குத்தான். தானாக வேலையை விட்டுப் போனாலும் அதுவரையிலான பிடித்தத் தொகையை முறையாக தருவதில்லை. வேறு நிறுவனத்தில் வேலையில் சேர விடாமல் போட்டுக்கொடுக்கிறார்கள். இந்தக் கேடுகெட்ட நிலைக்கு எதிராக என்றைக்கேனும் பத்திரிகையாளர் சங்கங்கள் பேசியதுண்டா? கொடிபிடித்து கோஷம் போடவேண்டாம். குறைந்தபட்சம் லேபர் கோர்ட்டுக்குப் போகும் திராணியாவது உண்டா? இல்லை. தொழிலாளர்கள் வேலையை விட்டு நீக்கப்படும்போது தனக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாததுபோல் நடந்து கொள்ளும் சங்கம், முதலாளியின் தொழில் பாதிக்கப்படும்போது மட்டும் கிளர்ந்தெழுகிறது என்றால், அதற்குப் பெயர் தொழிற்சங்கமா?
தங்கள் தொழிலையும் வணிகத்தையும் காப்பாற்றிக் கொள்வதற்காக பல்வேறு துறைகளிலும் முதலாளிகள் சங்கம் வைத்திருக்கிறார்கள். டெலிகாம், ஆட்டோமொபைல் போன்ற கார்ப்பரேட் பெருந்தொழில் முதலாளிகளில் தொடங்கி, கோயம்பேடு சந்தையின் காய்கனி வியாபாரிகள் வரையிலான அனைவருக்கும் இது பொருந்தும். பத்திரிகை முதலாளிகள் மட்டும்தான் தங்களுடைய தொழிலைக் காப்பாற்றும் பொறுப்பை பத்திரிகையாளர்களிடம் விட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது.
கோயம்பேடு முதலாளி தக்காளி விற்கிறார். பத்திரிகை முதலாளி கருத்தை அல்லவா விற்கிறார்! தக்காளி கூடை உடைந்தால், “நசுங்குவது முதலாளியின் இலாபம்தான்” என்று படிப்பறிவில்லாத லோடு மேனுக்குக் கூடத் தெரிந்திருக்கிறது. ஆனால் பத்திரிகையாளர்கள் படித்தவர்கள் என்பதால், நசுக்கப்படுவது கருத்து என்றும், அதனால் ஏற்படும் இழப்பு தங்களுடையது என்றும் நம்புகிறார்கள். அல்லது அப்படி நம்பிக் கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கிறது என்றும் கொள்ளலாம்.
சென்னையிலும் சரி, இதர மாவட்டங்களிலும் சரி… நடைமுறையில் பத்திரிகையாளர் சங்கங்கள் என்னதான் செய்கின்றன? லைசன்ஸ் இல்லாமல் வண்டி ஓட்டி பிடிபட்டால் போலீஸுக்குப் போன் செய்து விடுவிப்பது, குடித்துவிட்டு வம்பு செய்தால் சிபாரிசுக்குப் போவது, பிரபலங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுக்கு ஓ.சி. பாஸ் வாங்குவது, புதுப்பட ரிலீஸ் அன்று கியூவில் நிற்காமலேயே டிக்கெட் வாங்குவது, அரசு அலுவலகங்களில் ‘பிரஸ்’ என்று சொல்லி குறுக்கு வழியில் காரியம் சாதித்துக்கொள்வது, போலீஸ் ஸ்டேஷனில் கட்டப்பஞ்சாயத்து செய்வது… இவற்றையெல்லாம் செய்யாத ஒரு சங்கமேனும் உண்டா?
சம்பளத்தை குறைவாகக் கொடுத்துவிட்டு ‘கவர்’ வாங்குவதை கண்டுகொள்ளாமல் விடுவது பத்திரிகையாளர்களுக்கு கொடுக்கப்படும் சலுகை அல்ல. அது சுய மரியாதையை மழுங்கச் செய்வதற்கான ஏற்பாடு. “சிரிப்பு போலீசு” போல “சிரிப்பு பத்திரிகையாளன்” என்ற காரெக்டர் இன்னும் சினிமாவில் வரவில்லை. அவ்வளவுதான். அப்படியே வந்தாலும் அதற்காக யாரும் அசரப்போவதில்லை.
கடந்த கருணாநிதி ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் பத்திரிகையாளர்களுக்கு அரை கிரவுண்ட் நிலம் கொடுத்தார். அதை வாங்குவதற்கு நீ, நான் என அடித்துக்கொண்டார்கள். இப்படி அரசு சலுகைகளை நேர்வழியிலும், குறுக்குவழியிலும் பெறுவதில் மட்டும்தான் அக்கறை காட்டுவோம் என்றால் அதற்கு பெயர் சங்கமா?
சென்னை ஓமாந்தூரார் அரசினர் தோட்டத்தில் பிரமாண்ட கட்டடத்தில் ‘எஸ்.ஆர்.எம். மாளிகை’ என்ற பெயரில் சென்னை பத்திரிகையாளர் மன்றம் செயல்படுகிறது. இதைக் கட்டிக்கொடுத்தது ‘புதிய தலைமுறை’ முதலாளியும், கல்வி வியாபாரியுமான பச்சைமுத்து. அந்த நன்றி விசுவாசத்தை காட்டவேனும் சன் டி.வி. ராஜா கைது குறித்து பேசியிருக்கலாம். ஆனால் பேசவில்லை. அருகிலேயே இன்னொரு கட்டடடத்தில் இயங்கும் பிரஸ் ரிப்போர்ட்டர்ஸ் கில்டும் கமுக்கமாக இருக்கிறது. ரிச்சி தெருவில் செயல்படும் எம்.யு.ஜே.வும் சைலண்ட் மோடுதான்.
சரி, சங்கங்கள்தான் இப்படி… தனிப்பட்ட வகையில் (ஓரிரு விதிவிலக்குகள் தவிர்த்து) பத்திரிகையாளர்கள் மௌனமாக இருக்கிறார்களே எதனால்? சன் டி.வி.யில் பணிபுரியும் ஒருவர் அந்தப் பெண்ணுக்காக பரிந்துபேசினால் அவரது வேலைக்குப் பிரச்னை வரும; அதனால் அங்கிருப்போர் பேசமுடியாது. மற்ற தொலைகாட்சிகள், செய்தித்தாள்கள், வார இதழ்களில் இருந்தும் சத்தமில்லை. பேசினால் சன் டி.வி.யில் இருந்து அழுத்தம் தந்து வேலையில் இருந்து நீக்கிவிடுவார்களா? நடக்கலாம். சன் டி.வி.யின் தலையீடே கூடத் தேவையில்லை. தான் ஆடாவிட்டாலும் தசையாடும் என்பதைப் போல, என்ன தான் போட்டியாளனாக இருந்தாலும், சக முதலாளிக்காக வர்க்க பாசத்துடன் முதலாளிகள் இப்படிப்பட்ட ஊர் நாயம் பேசும் நபர்களை களையெடுக்கலாம். அது முதலாளிகளின் வர்க்க உணர்வு. பத்திரிகையாளர்களிடம் இல்லாமல் போய்விட்ட உணர்வு.
பல பத்திரிகையாளர்களின் மூளை, ‘இவற்றை பேசினால் நமக்கு ஆபத்து’ என்று “டிஃபால்ட்டாக” சுய தணிக்கை செய்துகொள்கிறது. ‘தன்னளவில் நேர்மையாக இருப்பது’ என்ற குறைந்தபட்ச அம்சம் கூட இப்போதைய பத்திரிகையாளர்களுக்கு இல்லை. ‘என்னால இந்த நியூஸை எல்லாம் எழுத முடியாது’ என எடிட்டரின் முகத்துக்கு நேரே சொல்லும் துணிவு இன்று யாருக்கும் இல்லை. ‘இந்தப் பிரச்னையை இந்த கோணத்தில் இருந்து அணுகக்கூடாது. இது ஒரு சார்பானது’ என ஆசிரியர் குழு கூட்டத்தில் குரல் உயர்த்தி விவாதிப்பதெல்லாம் அந்தக் காலத்து சினிமாக் காட்சிகளாகிவிட்டன. தனக்கென்று சொந்த கருத்து இருந்தாலும் கூட, அதை அலுவலக வாயில் டீ கடையில் அதிருப்தியாகப் பேசி கலைகிறார்களே தவிர அறவுணர்ச்சியுடன் சண்டையிடுவதில்லை. பத்திரிகையாளர்கள் என்பவர்கள் நிர்வாகத்தின் வசனத்துக்கு வாய் அசைக்கும் நடிகர்களாக மாறி வருகின்றனர்.
அலுவலகத்துக்கு வெளியே ‘நாங்கெல்லாம் பிரஸ்ஸு’ என்று வீராப்புக் காட்டும் இவர்கள், அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததும் ஓர் அடிமையின் உடல்மொழிக்கு மாறிவிடுகின்றனர். கிட்டத்தட்ட ஒரு போலீசு கான்ஸ்டபிளின் காரெக்டர்தான். உயர் அதிகாரிகள் கெட்ட வார்த்தைகளால் திட்டினாலும் சகித்துக்கொள்கிறார்கள்.
”நீ எல்லாம் இந்த வேலைக்கு வரலன்னு எவன் அழுதான்? ஊர்லயே மாடு மேய்க்க வேண்டியதானே?”, ”நீ எல்லாம் டீ கிளாஸ் கழுவதான் லாயக்கு”, ”இதை விட வேற என்ன புடுங்குற வேலை?” – இவை எல்லாம் தொலைகாட்சி, பத்திரிகை அலுவலகங்களில் ‘எடிட்டர் சார்’களால் நிருபர்களை நோக்கி, உதவி ஆசிரியர்களை நோக்கி வீசப்படும் வார்த்தைகள். அறிவு இருக்கிறதோ இல்லையோ… தன்மானமும், சுய மரியாதையும் உள்ள யாரும் இந்த வார்த்தைகளை பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். வேறொரு துறையில் ஒரு ஊழியரைப் பார்த்து மேலதிகாரி இப்படிப் பேசினால் அடுத்த நொடி அதே வார்த்தையில் அந்த ஊழியர் பதிலடி கொடுப்பார் அல்லது அடி கொடுப்பார். இதற்கு படித்திருக்க வேண்டும்; அரசியல் அறிவு இருக்க வேண்டும் என்று அவசியமெல்லாம் இல்லை. தன்மானமும், சுய மரியாதையும் கொண்டவர்களால் இவ்விதம்தான் வினைபுரிய முடியும்.
நீலாங்கரை துப்புவுத் தொழிலாளர் போராட்டம்
சமீபத்தில் சென்னை, கிழக்கு கடற்கரை சாலை வழியாக முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை சென்றார். அப்போது மாநகராட்சியின் 185-வது வார்டு துப்புறவுப் பணியாளர் மல்லீஸ்வரி, தீனைய்யா ஆகியோர் குப்பை அள்ளும் பணியில் ஈடுபட்டிருந்தனர். முதல்வர் அம்மாவின் கண்களில் குப்பை பட்டுவிட்டால் கண்கள் அவிந்துவிடும் என பதறிய நீலாங்கரை காவல்துறை ஆய்வாளர் புகழேந்திக்கு டென்ஷன். உடனே அகற்றச் சொல்லி கெட்ட வார்த்தைகளால் அர்ச்சிக்க… தீனைய்யா ‘‘அப்படி எல்லாம் பேச வேண்டாம்” என ஆய்வாளரை கண்டித்தார். ‘‘என்னையே எதிர்த்துப் பேசுறியா?” என்று தீனைய்யாவை அடித்து, உதைத்து போலீஸ் ஸ்டேஷனுக்குக் கொண்டு சென்று அங்கும் அடித்து உதைத்து அனுப்பப்பட்டார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி செங்கொடி தொழிலாளர் சங்கம் சார்பாக நீலாங்கரை உதவி கமிஷனரிடம் புகார் அளிக்கப்பட்டது. பத்து நாட்களாகியும் நடவடிக்கை எதுவுமில்லை. ஆத்திரமடைந்த துப்புறவுப் பணியாளர்கள் 500 பேர் ஒன்று சேர்ந்து தங்களது குப்பை லாரிகள் மற்றும் டிரை சைக்கிள்களுடன் நீலாங்கரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டார்கள். மூன்று மணி நேரம் அந்த பகுதியே ஸ்தம்பித்தது. ‘குப்பை அள்ளுரவனுங்கதானே?’ என இளப்பமாக எடைபோட்ட அந்த போலீஸ் பொறுக்கிக்கு தங்கள் வர்க்கத்தின் போராட்டக் குணத்தைக் காட்டினார்கள் தொழிலாளர்கள்.
தீனைய்யாவிடம் ஆள் அம்பு சேனை இல்லை. தெரிந்தவர்கள் செல்வாக்கான பதவியில் இல்லை. பணம் இல்லை. ஆனால் தன்னை அசிங்கப்படுத்தி பேசுபவன் போலீஸாகவே இருந்தாலும் முகத்துக்கு நேரே எதிர்த்துப் பேசும் தைரியமும், சுய மரியாதையும் அவரிடம் இருந்தது. ‘இப்போ அவசரப்பட்டு கோபப்பட்டுப் பேசினா நாளைக்கு இந்த இன்ஸ்பெக்டர் தொந்தரவு கொடுப்பானே?’ என்று எதிர்காலம் குறித்து காரியவாதமாக அவர் கவலைப்படவில்லை. ஆனால் பத்திரிகையாளர்களோ ‘எதிர்த்து பேசினால் வேலைபோய்விடும்’ என்று அஞ்சுகிறார்கள். அவர்களுடைய அச்சம் பொய்யானது என்று நாம் சொல்லவில்லை. அநீதியானது, நேர்மையற்றது என்கிறோம்.
கிராமப்புறங்களில் ஆதிக்க சாதி வெறியை எதிர்த்துப் பேசும்போது, “நீங்கபாட்டுக்கும் சாதி, அது இதுன்னு பேசிட்டு போயிடுவீங்க. ஊருக்குள்ள இருக்கப்போறது நாங்கதானே?” என்று ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த முதியவர்கள் பேசுவார்கள்.
அதுபோல “நீங்கபாட்டுக்கும் வெளியே இருந்துகிட்டு என்ன வேணும்னாலும் பேசலாம், எழுதலாம். உள்ளே இருந்துகிட்டு அதையெல்லாம் பண்ண முடியுமா? நாங்க இங்கே தொடர்ந்து வேலைப் பார்க்கனும்ல” என்று பத்திரிகையாளர்கள் சிலர் கேட்க கூடும்.
இதை எப்படி புரிந்துகொள்வது? இவர்களுக்குள் நடுக்கத்துடன் துடித்துக்கொண்டிருக்கும் நற்குணத்தை பாராட்டிவிட்டு நகர்ந்து செல்வதா? ‘வேறு எதுவும் செய்ய முடியாத கையறு நிலை’ என இதை ஓர் அவலமாக எண்ணி கடந்து செல்வதா? இரண்டும் இல்லை. வெளிப்படையாகப் பேசினால் வரும் இன்னல்களை எதிர்கொண்டு, நேருக்கு நேர் மோதித்தான் இதை தீர்க்க முடியும். இரண்டில் ஒன்று… பொறுக்கி ராஜா… பாதிக்கப்பட்ட பெண்… இருவரில் யாருக்கு ஆதரவு என்று வெளிப்படையாக முடிவெடுக்க வேண்டும். மதில் மேல் பூனையாக இருந்து கொண்டு, “வெளியில் இருந்து ஆதரவு” தருவதற்கு இது ஒன்றும் மன்மோகன் சிங்கின் அமைச்சரவை அல்ல. அல்லது தார்மீக ஆதரவு தருகிறோம் என்று தலைமுழுகும் ஓட்டுக்கட்சிகளின் நாடகம் அல்ல.
இது சிந்திக்க வேண்டிய தருணம். மற்ற துறைகளை போலவே ஊடகங்களிலும் ஆட்குறைப்பு அதிவேகமாக நடக்கிறது. மின்னணு ஊடகத்தின் வளர்ச்சி, அச்சு ஊடகங்களின் ஊழியர் எண்ணிக்கையை காவு கேட்கிறது. காட்சி ஊடகங்களில் இளமைத்துடிப்பும், உத்வேகமும் இருக்கும் நாற்பதுகளின் முன்பகுதி வரையிலும் வேலைக்கு வைத்துக்கொண்டு, அதன்பிறகு துரத்தி அடிக்கப்படுகின்றனர். எப்ப்டி சமாளிப்பது இதை? ஒரே வழி சங்கம். ஒரு நேர்மையான, சுயமரியாதையுள்ள, சமரசமற்ற, போர்க்குணம் மிக்க ஊடகவியலாளர் சங்கம்தான் இன்றைய உடனடித் தேவை.
பொறுக்கி ராஜாக்கள் சட்டங்களுக்குப் பயப்படமாட்டார்கள். “சங்கம் இருக்கிறது” என்ற அச்சம் மட்டுமே பொறுக்கி ராஜாக்களை தடுக்கும். வேலை உத்திரவாதமின்மை எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெண் ஊழியர்கள் மீது மேலாளர்களின் பாலியல் தொந்திரவுகள் தீவிரமடையும். ஆண் ஊழியர்கள் மத்தியில் அடிமைகளும் அதிகரிப்பார்கள்.
இன்று பெரும்பாலான பத்திரிகை அலுவலகங்களில் அச்சகப் பிரிவில் உறுதியான சங்கங்கள் செயல்படுகின்றன. ஒவ்வோர் ஆண்டும் அவர்கள் நடத்தும் ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையின் பலன்தான் பத்திரிகையாளர்களுக்கு கிடைக்கிறது. அந்த நெல்லுக்குப் பாயும் தண்ணீர் இல்லை எனில் இந்த புல்லுக்கும் எதுவும் கிடைக்காது. அந்த அச்சக ஊழியர்களிடம் இருக்கும் ஒற்றுமையும், உறுதியும் பத்திரிகையாளர்களிடம் ஏன் இல்லாமல் போனது என்று சிந்திக்க வேண்டும்.
ஒரு ஆலைத் தொழிற்சங்கப் போராட்டம் அந்த ஆலைத்தொழிலாளிகளுக்கு மட்டுமே உரிமைகளை பெற்றுத் தரும். பத்திரிகையாளர்களுடைய போராட்டம் வேறு வகையானது. கருத்துரிமை, ஜனநாயகம் என்ற முகமூடிகளின் பின்னே ஒளிந்து கொண்டிருக்கும் முதலாளிகளின் முகவிலாசத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதன் மூலம், மக்களிடம் உருவாக்கப்பட்டிருக்கும் பிரமைகளை இது உடைக்க முடியும்.
ராஜாவின் மீது புகார் கொடுத்த காரணத்தினால், வேறு பொய்க் குற்றங்களை ஜோடித்து, அகிலாவை தற்காலிகப் பணி நீக்கம் செய்திருக்கிறது சன் நிர்வாகம். இழப்புகளை சந்திக்காமல் தொழிலாளர்களின் உரிமைகள் எங்கும் நிலைநாட்டப்பட்டதில்லை. எப்படி யோசித்துப் பார்த்தாலும் கடைசியில் இதுதான் உண்மை. சண்டையில் கிழியாத சட்டை எந்த ஊர்ல இருக்கு?
அடிவாங்கி அடிவாங்கியே கிழியிற சட்டை, ஒரு வாட்டி சண்டை போட்டுத்தான் கிழியட்டுமே!
நன்றி: வினவு