Pages

Monday 8 April 2013

"தேர்ந்தெடுத்து எழுதுங்கள்!" - பெ.கருணாகரன்

படித்ததில் பிடித்தது.....

தேர்ந்தெடுத்து எழுதுங்கள்!
 
(இளம்தலைமுறை பத்திரிகையாளர்களுக்கு
ஆனந்த விகடன், குமுதம் பத்திரிகைகளில் பணியாற்றிய அனுபவப் பத்திரிகையாளர் கருணாகரன் சொல்லும் அட்வைஸ்!)


நான் மாணவப் பத்திரிகையாளனாய் இருந்த காலம் பொற்காலம். அப்போது, இப்போது இருப்பதுபோல் சேனல்களின் ஆதிக்கம் இல்லை. அரசியல் பத்திரிகைகளும் அதிகம இல்லை. ஜூனியர் விகடனில் ஒரு கட்டுரை எழுதப்பட்டால் அரசு நடவடிக்கை நிச்சயம் உண்டு என்று மக்கள் நம்பிய காலம் அது. ஏறக்குறைய அது உண்மைதான். பல அரசு அலுவலகங்களில் என் விசிட்டிங் கார்டை கொடுத்தாலே பவ்யம் காட்டுவார்கள்.
 
நான் எழுதிய கட்டுரைகளுக்கு மேலதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பலரது பிரச்சினைகள் தீர்ந்திருக்கிறது. அதுகுறித்த மனத்திருப்தி எனக்கு இப்போதும் உண்டு. ஆனால், தொண்டையில் சிக்கிக் கொண்ட மீன் முள்போல், ஒரு கட்டுரை மட்டும் இருபதாண்டுகளுக்குப் பிறகும் இன்றும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிறது.
 
முதல்வர் எம்ஜிஆர் மறைந்தபிறகு, 1988ல் கவர்னர் பி.சி. அலெக்ஸாண்டரின் ஆளுகையில் இருந்தது தமிழ்நாடு. அரசு இயந்திரம் படு சுறுசுறுப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது. மீடியாவில் நல்ல பெயர் வாங்கிவிட வேண்டும் என்பதற்காக எந்தப் பத்திரிகையிலேனும் ஏதேனும் சிறிய குறைகள் சுட்டிக்காட்டப்பட்டாலும் அதற்குப் பாய்ந்து பாய்ந்து நடவடிக்கை எடுத்துக் கொண்டிருந்தார்கள். இந்தச் சூழ்நிலையில்தான் நான் அந்தக் கட்டுரையை எழுதினேன்.
 
இப்போது யோசிக்கும்போது, அந்தக் கட்டுரையை எழுதியே இருக்க வேண்டாம் என்றுதான் தோன்றுகிறது.
 
விளையாட்டுத்தனமாய் நான் அப்போது எழுதிய கட்டுரை வில்லங்கமாகி பலரது வாழ்வில் வில்லனாகிவிட்டது.

அந்த ஆண்டின் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகள் 14.3.88 அன்று தொடங்கின. அது கவர்னர் ஆட்சி என்பதால் சூப்ரவைஸிங் மிகக் கடுமையாக இருக்கும் என்று எனக்குத் தெரிந்த கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறியிருந்தார். அப்படி என்னதான் கடுமையாக நடவடிக்கை எடுக்கிறார்கள் என்று பார்த்துவிடலாம் என்ற ஆர்வத்தில், சாதாரண பார்வையாளனாகவே முன்பு நான் படித்த அந்த அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் சென்றிருந்தேன்.
 
பள்ளியின் முன்புறம் நிசப்தமாக இருந்தது. கரும்பலகையில் தேர்வுகள் தொடர்பான குறிப்புகள் ஒட்டப்பட்டிருந்தன. பள்ளிக்குள் நுழைய அனுமதி இல்லாததால் பள்ளியின் உட்புறமாக வேடிக்கை பார்த்துக்கொண்டே சுற்றுச் சுவரையொட்டி நடந்து கொண்டே இருந்தேன்.
 
கிழக்குப்புற சுற்றுச்சுவருக்கு வந்த நான் அதிர்ந்துவிட்டேன். காரணம், அங்கே சுமார் 30 மாணவர்கள் கும்பலாக நின்றுகொண்டு, உள்ளே பிட் போட்டுக் கொண்டிருந்தனர்.
 
பொருத்துக, கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற கேள்விகளுக்கு விடைகளை உரக்கக் கத்திச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். சில நிமிடங்கள் கழிந்ததும் சிலர் நோட்ஸ்களிலிருந்து விடைப்பக்கங்களைக் கிழித்துக் கொண்டு, தலைக்குக் கோணியைச் சுற்றிக்கொண்டு காம்பௌண்ட் சுவரைத் தாண்டிச் சென்று தேர்வறைக்கே சென்று மாணவ, மாணவிகளுக்கு பிட் வழங்கிவிட்டு வந்தனர். தேர்வுக் கண்காணிப்பாளர் இந்தக் காட்சியைப் பார்த்தும் ‘சீக்கிரம் கிளம்பு...’ என்று பிட் கொடுக்கச் சென்ற மாணவர்களை விரட்டினாரே தவிர, பிட் அடிப்பவர்களைத் தடுக்கவே இல்லை.
 
சிறிது நேரத்தில் பிட் போடுவதில் மாணவர்களுக்குள் கொஞ்சம் தள்ளு முள்ளு. கைகலப்பு நடக்கும் சூழல். கொஞ்சம் செல்வாக்கான மாணவன் ஒருவன்போய் குண்டாக, பெரிய மீசை வைத்திருந்த ஒருவனை கூட்டி வந்தான். குண்டானவன் தகராறு செய்தவன் முதுகில் ரெண்டு தட்டு தட்டி, ‘சத்தம் போடாமல் ஒற்றுமையாய் பிட் போடணும்...’ என்று இரண்டு பேரிடமும் மத்தியஸ்தம் பேசி இருவரையும் கைகுலுக்கிக் கொள்ள வைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினான்.
 
இதையெல்லாம் பார்த்த எனக்கு அதிர்ச்சி. வீட்டுக்கு வந்தேன். கடகடவென்று கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டேன். சீரியஸான அந்த விஷயத்தை ஜாலியாக எழுதினேன். அதன் விளைவுகள் என்னவாக இருக்கும் என்று யூகிக்காமலே. அடுத்த சிலதினங்களில் திங்கட்கிழமையன்று ஜூனியர் விகடன் வெளிவந்தது. அதில் ‘எஸ்.எஸ்.எல்.சி. கண்றாவித் தேர்வு’ என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியாகியிருந்தது.


அவ்வளவுதான். அன்றிலிருந்து மாணவர்களுக்கு ஏழரை ஆரம்பம். தினமும் பறக்கும்படை பள்ளியை முற்றுகையிட்டு மாணவர்களை களேபரப் படுத்தியது. தினமும் யாரேனும் சிலர் பிட் அடித்துப் பிடிபட்டு தேர்வெழுதத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். நன்றாகப் படிக்கும் மாணவர்களாலும் பறக்கும் படையின் கெடுபிடிகளால் கவனமாகத் தேர்வெழுத முடியவில்லை. இதனிடையே மாணவர்கள் என் மீது கோபமாய் இருப்பதாகவும், என்னை அடித்துக் கை, காலை உடைக்கப் போவதாகச் சிலர் சபதம் செய்திருப்பதாகவும் நண்பர்கள் மூலம் தகவல் வந்து கொண்டிருந்தது. எனக்கு அது குறித்த அச்சமில்லை. கவலையில்லை. ஆனால், நான் எழுதிய கட்டுரை குறித்து எனக்குள் பெரிய உறுத்தல் ஏற்பட்டிருந்தது.
 
அந்தக் கட்டுரை ஒன்றும் பெரிய சமூக மாற்றத்தை ஏற்படுத்திவிடப் போவதில்லை. இங்கு கல்வியின் அடிப்படையே சரியில்லாதபோது, அதுகுறித்த ஆய்வுகள், தீர்வுகள் பற்றி எழுதாமல் பிட் அடிக்கிறார்கள் என்று பொத்தாம்பொதுவாய் கட்டுரை எழுதியது அபத்தமே. கல்வி முறையின் குறைகளைக் களைதலே முதல் கடமையாக இருக்க வேண்டும். விளையாட்டுத் தனமாய் நான் எழுதிவிட்ட அந்தக் கட்டுரை பலரது வாழ்க்கையின் பாதையையே மாற்றிவிட்டது என்றால் மிகையல்ல. தேர்வுகள் முடிந்தன. அந்த ஆண்டு அந்த மேல்நிலைப் பள்ளியின் தேர்வுத்தாள்கள் மிகக் கடுமையாகத் திருத்தப்படுவதாகக் கூறினார் கல்வித் துறையைச் சேர்ந்த என் நண்பர். அந்தப் பள்ளி பிட் சென்டராக கணக்கில் கொள்ளப்பட்டு, விடைத்தாள்கள் திருத்தப்பட்டன என்றும் தகவல் கிடைத்தது.
 
தேர்வு முடிவுகள் வெளிவந்தபோது, 18 சதவிகிதம் (என்று நினைவு) மாணவர்கள் மட்டுமே தேறியிருந்தனர். என் தெருவிலேயே நன்றாகப் படிக்கும் சில மாணவர்களும் கூட பார்டர் மதிப்பெண்ணில் தேறியிருந்தனர். சிலர் என்னிடம் நேரில் வந்து ‘அண்ணே... போண்ணே... நீ இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லே... என்று வருத்தம் தெரிவித்தனர். அவையெல்லாம் என் உறுத்தல்களை அதிகரித்த விஷயங்கள்.
 
பல மாணவர்கள் தோல்வியடைந்து விட்டதால் அவர்கள் வாழ்வில் ஓராண்டு பின் தங்கிவிட்ட நிலை. நன்றாகப் படிக்கும் மாணவர்கள் பலருக்கு மதிப்பெண் குறைந்து விட்டதால் தாங்கள் விரும்பிய குரூப்புக்குச் செல்ல முடியாத நிலை.
 
தேர்வு சமயத்தைவிட, அதன் முடிவுகள் வந்தபோதுதான் மாணவர்கள் என் மீது இன்னும் அதிகக் கோபமடைந்தார்கள். வீட்டுக்கே கூட ஒருமுறை சிலர் தேடி வந்தார்கள். அவர்களைச் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தேன். அது ஒரு கட்டுரையல்ல. என்னைப் பொருத்தவரை பாடம். அதன்பிறகு, கிடைத்த செய்திகளையெல்லாம் எழுதி விடுவதில்லை. எதை எழுத வேண்டும் என்று தேர்ந்தெடுத்து எழுத ஆரம்பித்தேன்.
 
பயிற்சிப் பத்திரிகையாளன் வாழ்க்கையில் இதெல்லாம் சாதாரணம்தான்.
 
ஆனால், பாதிக்கப்படுபவர்களின் வாழ்க்கையில் அது, சாதா, ரணமல்ல, பெரிய ரணம்.
 
இனிவரும் பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் இதையே சொல்வேன்.
 
 தேர்ந்தெடுத்து எழுதுங்கள். தேவையானதை மட்டும் எழுதுங்கள்.
 
*

1 comment: