Pages

Monday, 6 January 2014

சேலத்தில் ஊன்றப்பட்டது இயற்கை விவசாயத்தின் விதை

 நிகழ்வுகளை மக்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதுடன் முடிந்துவிடுகிறது செய்தியாளனின் கடமை. ஆனால் நேற்றைய நிகழ்வுகளுடன், இன்றைய அவலங்களையும், நாளைய அபாயங்களையும் தான் சார்ந்த சமூகத்துக்கு தெரிவிப்பதுடன், அவற்றை எதிர்கொள்ளவதற்காக கற்பிக்கும் பணியையும் தொடர்ந்து தனது தலையாய கடமையாக எண்ணி செய்து வருகிறது சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம். 


அந்த வகையில் இறுதி மூச்சு வரையிலும் இயற்கையுடன் இணைந்த விவசாயத்தை நேசித்தும், சுவாசித்தும் வந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார், விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து நடத்திட, அணி திரட்டும் பணியை கையில் எடுத்துள்ளது சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றம். அதன் ஒரு பகுதியாகவே இயற்கை விவசாயத்தைக் காக்க இனி..? என்ற தலைப்பில் கல்லூரி மாணவ-மாணவியருக்கான பேச்சுப் போட்டியை ஞாயிற்றுக்கிழமை (5.1.14) ஒருங்கிணைத்தது மன்றம். 

வழக்கமான பேச்சுப் போட்டிகளைப் போன்று அல்லாமல், போட்டியுடன் இணைந்த கருத்தரங்கு, பயிலரங்கைப் போலவே நடத்தப்பட்டதே இதன் சிறப்பு. போட்டியாளர் பேசி முடித்ததும் அவர் தனது பேச்சின்போது செய்த பிழைகளை நடுவர்கள் சுட்டிக் காட்டி, அடுத்த போட்டியின்போது இந்த பிழைகளைத் தவிர்த்து வெற்றி பெறவும் வழிகாட்டினர். வேளாண் தொழில் இழி தொழில் அல்ல, அது ஒரு உயிர் பிரச்சினை என்பதை மாணவர்கள் மூலம் நாகரிக சமுதாயத்துக்கு சுட்டிக் காட்டுவதையே நோக்கமாகக் கொண்டு நடைபெற்ற இந்த பேச்சுப் போட்டிக்கு சேலம் பெரியார் பல்கலைக்கழக இதழியல் துறை உதவிப் பேராசிரியர் ஆர்.சுப்பிரமணி, சேலம் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் ஜெ.சுந்தர், முன்னோடி விவசாயி அபிநவம் ஜெயராமன் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று, இயற்கை வேளாண்மைக்கான புதிய கருத்துகளை மாணவர்களிடம் இருந்து சேகரித்தனர். 


முன்னதாக பேராசிரியர் சுப்பிரமணி அவர்கள், தனது முன்னுரையில், தமிழர்கள் தாங்கள் இழந்துவிட்ட பாரம்பரியத்தை மீட்கும் போராட்டத்தைத் தொடங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்தார். தமிழினம் இயற்கையுடன் இணைந்து வாழ்ந்த இனம். 2 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான தொல்காப்பியத்திலும், 1,500 ஆண்டுகள் பழைமையான பரிபாடலிலும் நிலம் சீரமைப்பு, பயிர் வளர்ப்பு, இயற்கை உரமிடுவது குறித்த பாடல்கள் இடம் பெற்றுள்ளன. உலகின் வேறு எந்த இனத்தைக் காட்டிலும் தமிழர்களே ஒவ்வொரு நிலத்தின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப பயிர் செய்த முன்னோடிகள். ஒருவன் தனது வீட்டில் வளர்த்த மரத்தை வெட்டிவிட்டால் அவன் வீட்டுக்கு பெண் கொடுக்க மறுத்தவர்கள் நம் தமிழர்கள். நெல் அறுவடைக்கு முன்னதாக வயலில் கூடு கட்டியிருக்கும் சிறு பறவையினங்களும் தீங்கு நேரிடாத வகையில் பாதுகாப்பாக வெளியேற வேண்டும் என்ற எண்ணத்தில், அறுவடைக்கு சில குறிப்பிட்ட நாள்கள் இடைவெளியில் இசைக் கருவிகளை வாசித்து பறவைகளை வெளியேற்றும் பழக்கம் இருந்துள்ளது. நெல் அறுவடைக்குச் செல்லும் பெண்கள், அங்கு துள்ளி விளையாடும் மீன்களை வீடுகளுக்கு கொண்டு வரும் அளவுக்கு வளம் செழித்திருந்தது. கரிசலாங்கண்ணி ரத்தத்தை தூய்மையாக்கும், செம்பருத்தி இதயத்துக்கு நல்லது என்பது போன்ற சிறு வேளாண் தகவல்களையும் அறிந்து கொள்ளாத, எதற்கெடுத்தாலும் மாத்திரைகளையே உட்கொள்ளக் கூடிய பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது கணினி யுகம். இயற்கை சூழலில் இருந்து விலகி வந்ததற்கான விலையை நாம் ஒவ்வொருவரும் இப்போது கொடுத்துக் கொண்டிருக்கிறோம். வேளாண் தொழிலை மறந்து பொறியியல் போன்ற தொழில் கல்விகளை தேடிச் சென்ற மாணவர்களில் ஆண்டுதோறும் 1.50 லட்சம் பேர் வரை இப்போது வேலை வாய்ப்பின்றி ஏங்கி நிற்கின்றனர். பெண்கள் தங்களது கருப்பையை தாங்கக் கூடிய சக்தியை இழப்பதும், ஆண்கள் 30 வயதிலேயே மாரடைப்பால் இறப்பதும் வேதிப் பொருளால் விளைவிக்கப்பட்ட விளை பொருள்களால் விளையும் தீமைகள். தண்ணீரை விலைக்கு வாங்கும் இழி நிலையும், ஆக்சிஜனை பார்லர்களுக்குச் சென்று வாங்கும் அவலத்தையும் தடுக்க வேண்டும். வேளாண் தொழில் ஏற்றம் தரும் தொழில் என்பதை மாணவர்கள் உணர வேண்டும். ஏரினும் நன்றாம் எருவிடுதல் என்கிறது வள்ளுவம். இயற்கையுடன் இணைந்த உயிர் உரங்களைப் பயன்படுத்தி வேளாண் தொழிலை வளர்த்தெடுப்பதுடன், நமது பாரம்பரிய முறைகளையும் மீட்டெடுப்பதை ஒரு போராட்டமாகவே தொடங்க வேண்டும் என்றார் சுப்பிரமணி. 


இது வரையிலும் 25-க்கும் மேற்பட்ட மாவட்ட ஆட்சியாளர்களையும், கடந்த ஆண்டில் மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளி மாவட்ட விவசாயிகளையும், 8 வெளி நாடுகளின் ஆராய்ச்சியாளர் குழுக்களையும் தனது தோட்டத்துக்கு வரவழைத்து, அவர்களுக்கு ஒருங்கிணைந்த இயற்கை விவசாயம் குறித்து பாடம் நடத்தியுள்ள சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயியான அபிநவம் ஜெயராமன் அவர்கள் பேசும்போது, உழவன் கணக்கு பார்த்தால் உழக்கிற்கு கூட மிஞ்சாது என்ற பழமொழி உள்ளது. ஆனால் கணக்கு பார்த்து விவசாயம் செய்தால் மாணவர்களும் சாதிக்கலாம். விவசாயம் தன்னிறைவை அடைந்துவிட்டதாக புள்ளி விவரங்களும், விவசாயிகள் வேறு வேலைக்குச் செல்ல வேண்டும் என்று மன்மோகன்சிங் போன்ற மேதாவிகளும் கூறி வந்தாலும், தாய் தமிழகத்திலோ விவசாயத்தின் மீதான ஈர்ப்பு குறையவில்லை. தமிழரின் வாழ்வியல் முறை விவசாயம் இப்போது மாறத் தொடங்கி வணிக முறை விவசாயம் வளரத் தொடங்கியுள்ளது. பன்னாட்டுக் கம்பெனிகள் இந்தியாவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கிப் போட்டு வேளாண் தொழிலில் ஈடுபடுவது, வேளாண் தொழிலில் லாபம் இருப்பது என்பதாலும், இனி அடுத்து விவசாயமே பிரதான தொழிலாக இருக்கும் என்ற உண்மையினாலும்தான். எதிர்காலம் விவசாயம்தான் என்ற நிலையை உணர்ந்த, படித்த இளைஞர்கள் கணினி வேலைகளை விட்டுவிட்டு விவசாயத்தில் கால்பதிக்கத் தொடங்கியுள்ளனர். விதை கொடுத்தவனும், உரம் கொடுத்தவனும், உற்பத்தி பொருளை வாங்கி விற்பவனும் கோடீஸ்வரர்களாகிவிட்டனர். ஆனால் விளைவித்துக் கொடுப்பவன் மட்டும் அடிமைகளாகவே, அன்றாடம் காய்ச்சிகளாகவே உள்ளனர். இந்த நிலை விரைவில் மாறும். வேளாண் தொழிலுக்குள் நுழையும் இளைஞர்கள் உற்பத்தியை சந்தைப் படுத்தும் நுட்பத்தை அறிந்து கொள்வார்களேயானால், தான் விளைவிக்கும் பொருளுக்கு தான்தான் விலையை நிர்ணயிப்பேன் என்று கர்வம் கொள்வானேயானால் விவசாயியும் கோடீஸ்வரனாவான். அந்த காலம் வெகு தொலைவில் இல்லை என்றார் அவர். 


வேளாண் இணை இயக்குநராக இருந்தாலும் விவசாயம் தனக்கு சரிவர தெரியாது என்பதை நேர்மையுடன் ஒப்புக் கொண்ட ஜெ.சுந்தர் அவர்கள், ரசாயன உரங்களின் தீமைகளை அறிந்து கொண்டுள்ள அரசுகளும் படிப்படியாக அவற்றின் தேவையை குறைத்துக் கொள்ளத் திட்டமிட்டுள்ளன. எனவே இப்போது வேளாண் விற்பனை நிலையங்களில் 50 சதவீத அளவுக்கு இயற்கை உரங்கள், பூச்சிக் கொல்லிகள் இடம் பெறத் தொடங்கியுள்ளன. அதே நேரத்தில் வேளாண் தொழில் அழியாது. எங்களைப் போன்ற மாணவர்கள் புதிய தொழில் நுட்பத்தை அறிந்து அதை சிறப்புடன் ஏற்று நடத்துவோம் என்று இங்கு உறுதி ஏற்றிருப்பது நல்ல அறிகுறி என்றார். 

பேச்சுப் போட்டியில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் விவரம்: 

சேலம் அரசு இருபாலர் கலைக் கல்லூரி:- கி.மகாலட்சுமி (2-ம் ஆண்டு பி.எஸ்சி.), ஜெ.உஷாராணி (முதலாம் ஆண்டு எம்.காம்.), நா.ராஜா (2-ம் ஆண்டு பி.எஸ்சி.), ரா.கோவிந்தராசு (2-ம் ஆண்டு எம்.காம்.). அரசு மகளிர் கலைக் கல்லூரி:- த.யசோதா (2-ம் ஆண்டு எம்.ஏ. தமிழ்), லோ.துர்காதேவி (இரண்டாம் ஆண்டு பி.ஏ. தமிழ்), எம்.தீபிகா (முதலாம் ஆண்டு பி.எஸ்.சி. இயற்பியல்), சு.திவ்யா (இரண்டாம் ஆண்டு எம்.ஏ. ஆங்கிலம்). கணேஷ் கலை, அறிவியல் கல்லூரி:- ர.பிரகாஷ் (இரண்டாம் ஆண்டு பி.எஸ்சி. மின்னணுவியல்), ரா.திருநாவுக்கரசு (முதலாம் ஆண்டு பிசிஏ), அ.பழனிவேல், மா.அழகரசன் (இரண்டாம் ஆண்டு எம்.எஸ்சி. கணிதம். சக்தி கைலாஷ் மகளிர் கலை, அறிவியல் கல்லூரி:- ஜா.நூர்ஜஹான் பேகம், பா.சு.நந்தினி, ச.பர்ஜானா பேகம் (முதலாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம்), ஜோ.மேரி ஏஞ்சலா மெர்சி (மூன்றாம் ஆண்டு பி.ஏ. ஆங்கிலம்). ஜெயராம் கலை, அறிவியல் கல்லூரி:- ஆ.சுகன்யா, த.விக்னேஷ் (முதலாம் ஆண்டு பி.பி.ஏ.) , பெ.ராஜகணபதி (2-ம் ஆண்டு எம்.எஸ்சி. கணிதம்). வெற்றி பெற்றவர்கள் விவரம்:- முதல் பரிசு - சு.திவ்யா. 2-வது பரிசு - ஜோ.மேரி ஏஞ்சலா மெர்சி. 3-வது பரிசு - கி.மகாலட்சுமி, ஜா.நூர்ஜஹான் பேகம்.







பேச்சுப் போட்டியில் பேசிய பேச்சாளர்கள், தமிழக மேல்நிலைப் பள்ளிகளில் வேளாண் பாடப் பிரிவை கட்டாயம் ஏற்படுத்த வேண்டும். அனைத்து பாட நூல்களிலும் அவரவர் வயதுக்கு ஏற்ப வேளாண் கல்வியை ஒரு பாடமாக்க வேண்டும். விளைநிலங்களை மனைகளாக்குவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். குறிப்பிட்ட கால அளவு வரை மனைகள் காலியாக இருந்தால் அதில் மரங்கள் வளர்க்கவும், விதிகளை மீறினால் அபராதம் விதிக்கவும் வழிவகை செய்ய வேண்டும். கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டங்களில் மாற்றம் கொண்டு வந்து, விவசாய பண்ணைகளில் பணியாற்றவும், இயற்கை வேளாண் பண்ணைகளுக்கு தொழில் சுற்றுலா செல்லவும் வழிவகை செய்ய வேண்டும். பாரம்பரிய விதைகளை மீட்டெடுத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் மாவட்டம் தோறும் வேளாண்மைக் கல்லூரிகளைத் தொடங்க வேண்டும். பஞ்சகவ்யம், இயற்கை உரம் தயாரிப்பதை பள்ளிகளிலேயே செயல் வடிவில் கற்றுக் கொடுக்க வேண்டும். இயற்கை உரங்கள் தயாரிப்போருக்கு சலுகைகள் வழங்க வேண்டும். படித்த இளைஞர்கள் வேளாண் தொழிலில் ஈடுபட ஒப்பந்த அடிப்படையில் அரசு நிலங்களை வழங்க வேண்டும். விவசாயிகளின் குழந்தைகளுக்கு அரசு, தனியார் பள்ளிகள், வேலை வாய்ப்புகளில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகளை வலியுறுத்தினர். 


16 அடிக்கு பாய்ந்த புலி கல்லூரி மாணவர்களுக்கான இந்த போட்டியில் நக்கீரன் செய்தியாளரும் மன்றத்தின் துணைத் தலைவருமான சிவசுப்பிரமணியன் அவர்களின் மகனும் 8-ம் வகுப்பு மாணவனுமான நக்கீரன், இயற்கை விவசாயம் குறித்து 4 நிமிடம் ஆற்றிய ஆவேச உரை அரங்கை அதிரச் செய்தது. 


வர்ணம் தீட்டியவரும் எண்ணம் தீட்டியவரும் பேச்சுப் போட்டி நடைபெற்ற அதே நேரத்தில் பத்திரிகையாளர்களின் குழந்தைகளுக்கான பொங்கல் தின ஓவியப் போட்டியும் நடைபெற்றது. இதில் 23 குழந்தைகள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு ஓவியங்கள் வரைந்தனர். 

பேச்சுப் போட்டிக்கான ஒருங்கிணைப்பு பணிகளை மன்றத்தின் துணைச் செயலாளரும் புதிய தலைமுறை செய்தியாளருமான மோகன்ராஜ், மன்றத்தின் முன்னாள் செயலரும் மக்கள் தொலைக்காட்சி செய்தியாளருமான சரவணன் ஆகியோரும், ஓவியப் போட்டிக்கான ஒருங்கிணைப்புப் பணிகளை தி டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தியாளர் செந்தில் அவர்களும், தி ஹிந்து செய்தியாளர் எம்.கே.ஆனந்த் அவர்களும் செவ்வனே செய்திருந்தனர்.

No comments:

Post a Comment