Pages

Sunday, 26 February 2012

Rs.3250 விலையில் BSNL நிறுவனம் வெளியிட்டுள்ள டேப்லேட் கணினி!


பிரபல டெலிகாம் நிறுவனமான BSNL மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை வெளியிட்டுள்ளது. BSNL நிறுவனம் Pantel Technologies நிறுவனத்துடன் இணைந்து வெறும் Rs.3250 விலையில் இந்த மலிவு விலை கணினிகளை வெளியிட்டுள்ளது.

உலகிலேயே மிகக்குறைந்த விலை டேப்லேட் கணினிகளை ஆகாஷ் நிறுவனம் இந்தியாவில் வெளியிட்டது. சில பிரச்சினைகளால் இந்த கணினிகள் வருவதில் சிக்கல் ஏற்ப்பட்டுள்ளது. ஆகவே ஆகாஷ் கணினிகளுக்கு முன்பதிவு செய்து காத்திருக்காமல் அதே விலை உள்ள புதிய T-PAD IS701R கணினிகளை முன்பதிவு செய்து பெற்று கொள்ளுங்கள். மார்ச் 5 இருந்து இந்த கணினிகள் விற்பனைக்கு வருகின்றன.

Features:

* இணையத்தில் வேகமாக உலவலாம். யூடியுப் வீடியோக்களை கண்டு ரசிக்கலாம், மற்றும் ஈமெயில்கள் வசதிகளை உபயோகித்து கொள்ளலாம்.

* கூகுளின் Android 2.3 மென்பொருளை கொண்டு இயங்குவதால் லட்சக்கணக்கான இலவச மென்பொருட்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

* Wifi மற்றும் GPRS மூலம் இணைய வசதியை உபோகித்து கொள்ளலாம்.

* பிரபல சமூக தளங்களை சுலபமாக உபயோகித்து கொள்ளலாம்.

* மின் புத்தகங்களை படித்து கொள்ளலாம் மற்றும் பல வசதிகளும் உள்ளது.

Specification:

* CPU - IMAP210 1GHz
* O/S - Android 2.3
* RAM - DDR2 256MB
* FLASH - 2GB
* TF card - TF card support to 32G
* Wifi - 802.11b/g/n
* LCD resolution - 7” TFT, 16:9, 800*600
* Touch screen - resistive touch screen
* G-Sensor - Rotator screen, 3D games
* Camera - 0.3MP
* USB - USB x 1
* Battery - Li-ion 3000mah 5V2A
* Video - Max.1280*720 MKV(H.264 HP) AVI RM/RMVB FLV WMV9 MP4
* Flash Support - Adode Flash 10.3
* Email - Send/receive email online
* Audio - MP3/WMA/APE/FLAC/AAC/OGG/AC3/WAV

முன்பதிவு செய்ய:

* இந்த மலிவு விலை டேப்லேட் கணினிகளை முன்பணம் ஏதும் செலுத்தாமல் முன்பதிவு செய்யும் வசதி உள்ளது. அதற்க்கு முதலில் இந்த லிங்கில் PRE-BOOK NOW கிளிக் செய்து இந்த தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
* அதில் உள்ள PRE-BOOK NOW என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.

BSNL -ன் மிகக் குறைந்த விலை டேப்லெட்: பணம் செலுத்தாமல் முன்பதிவு செய்யலாம்!

* அடுத்து ஒரு Pop-up விண்டோ ஓபன் ஆகும் அதில் உங்களுடைய சரியான விவரங்களை கொடுத்து கீழே உள்ள Submit பட்டனை அழுத்தவும்.
* இப்பொழுது நீங்கள் முன்பதிவு செய்ததை உறுதி செய்யும் விதமாக உங்கள் bookking Id கொடுப்பார்கள் அதை குறித்து கொள்ளுங்கள்.


* அதிக பட்சமாக இரண்டு நாட்களுக்குள் உங்களை அந்த நிறுவனத்தினர் ஈமெயில் மூலமாகவோ அல்லது தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்வார்கள்.
* Delivery date மற்றும் பணம் செலுத்தும் முறை இரண்டையும் உங்களுக்கும் உறுதி படுத்துவார்கள்.

* மேலும் ஏதேனும் சந்தேகம் என்றால் கீழே அவர்கள் கொடுத்திருக்கும் தொலைபேசி எண் மூலமாகவோ, ஈமெயில் முகவரி மூலமாகவோ விசாரித்து கொள்ளலாம்.

Thanks- BSNL launches 3 Android tablets, price starts Rs.3250 Pre-Book Now [How-To]



பிப்ரவரி -27- இன்று - எழுத்தாளர் சுஜாதா அவர்களின் நினைவு நாள்.


சுஜாதா கையெழுத்தில் வந்த கடிதம்....


பல ஆண்டுகளுக்கு முன் அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் பற்றி மீண்டும் ஒரு முறை அந்த வரிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன். 


சுஜாதா கைப்பட எனக்கெழுதிய அந்த கடிதத்தை இம்முறை உங்கள் பார்வைக்கு தருகிறேன். சுஜாதா தீவிர ரசிகர்கள் இதனை மிக ரசிப்பார்கள் என நம்புகிறேன்.



நான் சட்ட கல்லூரியில் படித்து கொண்டிருக்கும் போது கல்கியில் மத்யமர் என்ற சிறுகதை வரிசை வந்து கொண்டிருந்தது. அதில் பல controversy ஆன கதைகள்.. இவை பற்றி பிரசுரமாகும் விமர்சனங்களுக்கு சுஜாதா கையெழுத்திட்ட மத்யமர் புத்தகம் அனுப்பப்படும் என்று அறிவித்திருந்தனர். சுஜாதா கையெழுத்திட்ட புத்தகம் வாங்கவே விமர்சனம் எழுதினேன். பிரசுரமும் ஆனது. புத்தகம் வந்த பின், சுஜாதாவிற்கு நன்றி சொல்லி இரு பக்க கடிதம் எழுதினேன்.


சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது.



அன்புள்ள மோகன் குமார்,

உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு நான் பெரும்பாலும் பதில்
கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான பல காரணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயரானதும் எனக்கு மீண்டும் எழுதுங்கள்

அன்புடன்

சுஜாதா

*******************
இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..



முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!

அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!

கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!

ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!

Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!

இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.

இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.

முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.

கல்யாண்ஜிக்கு அப்போது இதில் ரொம்ப வருத்தம். "சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவதானால் என்னிடம் ஏன் வாங்கணும்?" என கோபித்தார். "சுஜாதாவிடம் நாங்களாக போகலை; அவரே கேட்டு வாங்கி எழுதி தந்தார்" என்றால், அவர் நம்ப தயாராய் இல்லை. "உங்கள் எழுத்தை முன்பும் அவருடையதை பின்னரும் வெளியிட்டோம்; புத்தகம் துவக்கத்தில் நன்றியில் கூட உங்கள் பெயரை தான் முன்னர் போட்டோம்" என்ற போதும் அவருக்கு கோபம் குறையலை.

புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்). என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்

எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.

சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. அவர் இறந்த நிலையில் அவரை சென்று பார்க்க மனம் விரும்ப வில்லை.
அந்த பிம்பம் என் மனதில் பதிய மனம் ஒப்பு கொள்ள வில்லை. சுஜாதா, சுஜாதாவாகவே என்னுள் இருக்கட்டும் !   

நன்றி: வீடு திரும்பல். மோகன்குமார் 

கூகிளின் புதிய சேவை கூகிள் டிரைவ்!




கூகுள் தனது அடுத்த முயற்சியாக கூகுள் டிரைவ் (Google Drive) வசதியை ஆரம்பிக்கப்போகிறது. இது தான் தற்போது இணையத்தில் உலவிக்கொண்டு இருக்கும் செய்தி. அதெல்லாம் சரிங்க! கூகுள் ஓகே… கூகுள் டிரைவ்னா என்ன?
இதை தெரிந்து கொள்ளும் முன் இதற்கு முன்னோடியாக இருக்கும் Dropbox பற்றி தெரிந்து கொள்வோம்.

Dropbox வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]

தற்போது இணையம் அனைவரிடையே மிக வேகமாக பிரபலமாகி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. எப்போதுமே ஒரு விஷயம் பிரபலம் ஆகிறது என்றால் அதனோடு தொடர்புடைய விசயங்களும் வளர்ச்சியடைந்து வரும். எளிமையாக கூறுவதென்றால் நம் அனைவருக்கும் தெரிந்த திரைப்படங்களையே எடுத்துக்கொள்ளலாம் முதலில் எப்படி படங்கள் வந்தது தற்போது எந்த அளவிற்கு அதனோடு தொடர்புடைய தொழில்நுட்பங்கள் வளர்ச்சி அடைந்து இருக்கிறது என்பதை அறிவோம்.. எடுத்துக்காட்டாக அனிமேஷன் 3D கிராபிக்ஸ் என்று ஏகப்பட்ட விஷயங்கள் உள்ளது. இவை எல்லாம் வரும் என்று கருப்பு வெள்ளை காலங்களில் யாரும் சூடம் கொளுத்தி சத்தியம் செய்தாலும் நம்பி இருக்க மாட்டார்கள்.

இது போல இணையத்திலும் கணக்கில் அடங்கா தொழில்நுட்பங்கள் வந்து கொண்டு இருக்கின்றன. இன்றைய புதிய வசதி ஒரு வருடத்தில் பழையதாகி விடுகிறது அந்த அளவிற்கு வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது இணையத்தில் பிரபலமாகி வரும் ஒரு தொழில்நுட்பம் தான் “Cloud computing”

Cloud Computing என்றால் என்ன?

இது பற்றி ரொம்ப விளக்கினால் புதிதாக கேள்விப்படுகிறவர்களுக்கு குழப்பமாக இருக்கும் என்பதால் சுருக்கமாகக் கூறுகிறேன். Cloud Computing என்பது நமது தகவல்களை ஒரு இடத்தில் வைத்துக்கொண்டு அதை நாம் எந்த இடத்தில் இருந்தும் இணையம் அல்லது வழக்கமான நமது நெட்வொர்க் மூலம் பயன்படுத்தும் ஒரு வசதியாகும். இதன் மூலம் எந்த இடத்தில் இருந்து  வேண்டும் என்றாலும் நாம் தகவல்களை பெற முடியும்.


Cloud Computing வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]

இன்னும் சுருக்கமாக நமது மின்னஞ்சலை எங்கே இருந்து வேண்டும் என்றாலும் நம்மால் எந்த வித சிக்கலும் இல்லாமல் பயன்படுத்த முடியும். எப்படி? காரணம் நமது தகவல்கள் யாஹூ ஜிமெயில் ஹாட்மெயில் போன்ற வழங்கிகளில் (Server) உள்ளது இதனால் இணையம் மூலம் நம்மால் எளிதாக எந்த சிக்கலும் இல்லாமல் பார்க்க முடிகிறது.

இதையே இன்னும் கொஞ்சம் பெரிய அளவில் யோசித்துப்பாருங்கள் அதாவது உங்கள் ஹார்ட் டிஸ்கில் உள்ள தகவல்கள் அனைத்தும் இது போன்ற இடத்தில் இருந்தால்!… இது தான் Cloud Computing. உங்கள் தகவல்கள் அனைத்தும் எடுத்துக்காட்டாக கூகுள் வழங்கியில் இருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள் உங்களால் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் இணையம் இருந்தால் போதும் உங்கள் தகவல்களைப் பெற முடியும் அதாவது உங்கள் வீட்டில் இருக்கும் போது தான் இதை பயன்படுத்த முடியும் என்கிற கட்டுப்பாடு இல்லை, எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் Excel கோப்பை அப்டேட் செய்ய முடியும்.

உங்களில் ஒரு சிலர் சில முக்கிய கோப்புகளை மின்னஞ்சல்களிலோ அல்லது வேறு தளங்களிலோ சேமித்து வைத்து இருப்பீர்கள். எதற்காக? அவசரமாக தேவைப்படும் போது பயன்படுத்த. உதாரணத்திற்கு உங்கள் பிறப்பு சான்றிதல் அவசரமாக தேவைப்படுகிறது ஆனால் அதனுடைய கோப்பு (File) உங்கள் வீட்டு கணினியில் இருக்கிறது ஆனால் வீட்டிற்கு சென்று எடுத்து வரும் அளவிற்கு நேரமில்லை அல்லது நீங்கள் தொலைவில் இருக்கிறீர்கள் என்ன செய்வது? இதை நீங்கள் கூகுள் பிகாசாவிலோ அல்லது வேறு இடத்திலோ சேமித்து வைத்து இருந்தால் உடனடியாக உங்களால் அருகில் உள்ள ஏதாவது ஒரு பிரவுசிங் சென்டர் சென்று பிரிண்ட் செய்து பயன்படுத்த முடியும். எவ்வளவு நேரம் மிச்சம்! அதோடு வேலையும் விரைவாக முடியும்.

முன்பு இணையத்தின் வேகத்தின் அளவு மிக மிக மெதுவாக இருந்தது ஆனால் தற்போது இதன் வேகம் அதிகரித்து இருக்கிறது எனவே இது போன்ற வசதிகள் உருவாகி வருகின்றன.

இனி Dropbox என்றால் என்ன? என்று பார்க்கலாம்

Dropbox என்பது ஒரு தளம். இதில் இலவசமாக நமக்கு 2 GB இடம் தருகிறார்கள் மற்றும் சில போட்டிகளில் வெற்றி பெற்றால் இன்னும் சில MB களை பெற முடியும். பணம் கட்டினால் மேலும் நமக்கு தேவையான அளவு இட வசதியைப் பெற முடியும்.

இது எப்படி வேலை செய்கிறது என்றால் இவர்கள் தரும் ஒரு மென்பொருளை உங்கள் கணினியில் நிறுவ வேண்டும் (வீட்டுக்கணினி அலுவலக கணினி என்று எங்கு தேவையோ அங்கு) இதை நிறுவியவுடன் உங்களுடைய பயனர் கணக்கு மற்றும் கடவுச்சொல்லை கொடுத்து உள்ளே நுழைந்து கொண்டால் உங்களது கணினியில் Dropbox என்ற பெயரில் ஒரு ஃபோல்டர் வந்து விடும். இதில் நீங்க என்ன வேண்டும் என்றாலும் உங்களுக்கு கொடுக்கப்பட்ட அளவு வரை சேமிக்கலாம். எடுத்துக்காட்டாக உங்கள் வீட்டு கணினியில் JPG கோப்பை சேமிக்கிறீர்கள் பின் அலுவலகம் வந்து உங்கள் கணினியை ஆன் செய்தவுடன் நீங்கள் வீட்டுக் கணினியில் சேமித்த கோப்பு இங்கேயும் வந்து விடும். இணையம் அவசியம் என்பதை மனதில் நிறுத்துங்கள்.

இணையம் இல்லாமலும் உங்கள் கணினியில் உள்ள தகவல்களைப் பார்க்க முடியும் ஆனால் அப்டேட் செய்தால் இங்கே மட்டுமே அப்டேட் ஆகும் மற்ற இடங்களில் ஆகாது காரணம் இணைய இணைப்பு இல்லாதது.

அதே போல நீங்கள் ஒரு Text கோப்பை அடிக்கிறீர்கள் அதை வேறு கணினியில் அப்டேட் செய்தால் உங்கள் வீடு அலுவலகம் என்று அனைத்து இடத்திலும் அப்டேட் ஆகி விடும் காரணம் உண்மையாக அந்த கோப்பு இருக்கும் இடம் Drobox வழங்கி ஆகும். நீங்கள் இதைப் பயன்படுத்த கண்டிப்பாக இணையம் அவசியமாகும். iPhone Android என்று தொலைபேசிகளிலும் இந்த வசதி உள்ளது. எனவே இணையம் இருந்தால் எங்கே இருந்து வேண்டும் என்றாலும் உங்கள் தகவல்களை பார்க்க முடியும். இது மிக மிக அருமையான சேவை.

இதை Windows , Mac , Linux மற்றும் Mobile ல் பயன்படுத்தலாம். உங்கள் ஹார்டிஸ்க் செயலிழந்து விட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை உங்கள் தகவல்கள் மற்ற இடங்களில் பாதுகாப்பாக இருக்கும், இதுவும் இந்த சேவையின் மிக முக்கிய பயன்.

மைக்ரோசாப்ட் கூட இது போல தருகிறது ஆனால் இது போல மென்பொருள் வைத்தல்ல… அதனால் 25 GB இடம் கொடுத்தும் பிரபலம் ஆகாமல் கடை காற்று வாங்கிக்கொண்டு இருக்கிறது icon smile வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing] சென்ற வருடம் iOS 5 மூலம் Cloud storage வந்த ஆப்பிள் நிறுவனம் குறுகிய காலத்தில் 100 மில்லியன் பயனாளர்களைப் பெற்று இந்த தொழில்நுட்பத்தில் முதல் இடத்தில் இருக்கிறது அதிலும் கடைசி 15 மில்லியன் பயனாளர்களை 21 நாட்களில் பெற்று இருக்கிறது.



கூகுள் டிரைவ்

google drive வருகிறது கூகுள் டிரைவ்     [Cloud Computing]

இந்த Dropbox வசதியைத் தான் கூகுள் தரப்போகிறது. கூகுள் ஏற்கனவே தனது Google Docs என்ற வசதி மூலம் இதை தருகிறது ஆனால் Dropbox போன்று இதற்கு என்று தனியாக மென்பொருள் வைத்து அல்ல. தற்போது இதற்கு வரவேற்பு அதிகமாவதை உணர்ந்து இந்த வசதியைத் தர திட்டமிட்டுள்ளதாக கூறுகிறார்கள்.

இனி வரும் காலங்களில் நமது கணினிகளில் ஹார்ட் டிஸ்க் இயங்கு தளத்திற்கு (OS) மட்டுமே பயன்படும் என்று கருதப்படுகிறது நம் தகவல்கள் எல்லாம் Cloud Computing முறையில் வந்து விடும் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள் ஆனால் இந்தியாவிற்கு இது போல வர பல வருடங்கள் ஆகும் காரணம் இணைய வேகம் தான். தென் கொரியா அமெரிக்கா சிங்கப்பூர் ஜப்பான் போன்ற இணைய வசதி சிறப்பாக உள்ள நாடுகள் இதில் முதலில் வர வாய்ப்பு உள்ளது. அதோடு நமது நாட்டில் இன்னும் இணையம் செலவு மிக்கதாகவே உள்ளது. Unlimited வசதி இருந்தால் மட்டுமே இதைப் பயன்படுத்த முடியும் இல்லை என்றால் மிகுந்த செலவு பிடிக்கும் விசயமாக இருக்கும்.

நன்றி: கிரிவலைப்பூ

Wednesday, 22 February 2012

சாலையில் அமர்ந்து போராடும் பெண்கள் சாதிக்க மாட்டார்கள்!....மாணவர்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்திய சேலம் ஆட்சியர் மகரபூஷணம்!


சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.), பி.எஸ்சி. கணிதம் (சி.ஏ.), பி.காம்.
(சி.ஏ.) ஆகிய பட்டப்படிப்புகளை சுமார் 37 ஆயிரம் மாணவ-மாணவிகள்
படித்துள்ளனர். மேலும் பலர் அந்தப் பாடப் பிரிவுகளில் தற்போது பயின்றும் வருகின்றனர்.



ஏற்கெனவே இந்த பட்டப் படிப்புகளை முடித்து பின்னர் ஆசிரியர் பணிக்காக பி.எட். பட்டம் பெற்ற  சிலருக்குக் கடந்த 2010-ம் ஆண்டில் ஆசிரியர் பணியும் கிடைத்தது.  அவர்களது சான்றிதழைச் ஆசிரியர் தேர்வு வாரியம் பெரியார் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் மேற்கண்ட படிப்புகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் இல்லை என்று கூறியதுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட  பணியை ரத்து செய்துவிட்டது.

இது குறித்து மாணவர்கள் விசாரித்தபோது பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் இல்லாத இது போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு தமிழகம் உள்பட எங்கும் அரசு வேலை கிடைக்காது என்றும் தெரிய வந்தது. தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் தங்களது படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள், இவர்களுடன் படிப்பை முடித்த பட்டதாரிகள் போராட்டத்தில்  குதித்தனர்.  சேலம் ஆட்சியர் மகரபூஷணமும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.

ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த 22ந் தேதி புதன்கிழமை காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டனர்.   பின்னர் ஆட்சியர் மகரபூஷணத்தின் அறைக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது பிரச்னை குறித்து விளக்கி, மனு அளித்தனர்.

மனு அளிக்கச் சென்ற தங்களிடம் கோபமுற்ற ஆட்சியர் மகரபூஷணம் ஆட்சேபிக்கத் தக்க வகையில் பேசியதாகவும் குறிப்பாக பெண்களை இழித்துப் பேசியதாகவும் மாணவர் குழு வெளியில் வந்து தங்கள் சகாக்கள் மத்தியில் தெரிவிக்க அவர்களிடையே கொந்தளிப்பு தோன்றியுள்ளது.



இது குறித்து மாணவர்கள் கூறும்போது....

ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு அளித்துவிட்டு, உங்களது குழந்தையைப் போல நினைத்து எங்களுக்கு உதவுங்கள் என்று கூறினோம். ஆனால் ஆட்சியரோ, இத்தனை பேர்களைப் பெற்றிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்று கிண்டலாகக் கூறினார்.

 மேலும் எங்களுடன் வந்திருந்த மாணவிகளைப் பார்த்து, இந்த மாணவர்களுடன் சுற்றிக் கொண்டு, கொடி பிடித்து போராடிக் கொண்டிருந்தால் உங்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்றும் நீங்கள் படித்து ஆசிரியராகி என்ன சாதிக்கப் போகின்றீர்கள்? என்றும் கேட்டார்.

இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஒரு மாணவனிடம்  நீ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா சொல் என்று கேட்டு அதிர வைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் மேலும் பேசாது அங்கிருந்து வெளியேறிவிட்டோம்" என்று மாணவர்கள் விவரித்தனர்.



 பெண்களைப் பற்றி ஆட்சியர் தவறாகப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரைக் கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விரைவில் போராட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

 இந்த சம்பவம் குறித்து அறிந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் ஆட்சியர் மகரபூஷணத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பெண்களை
அவமானப்படுத்தும் நோக்கில் பேசியுள்ள சேலம் ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 பெண்கள் படிப்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக
எழுந்த பிரச்னை தொடர்பாக ஆட்சியர் மகரபூஷணம் கூறும்போது....



"இந்த பிரச்னை தொடர்பாக நான் உத்தரவு போட முடியாது. இது குறித்து
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. அதிகாரிகளிடம் பேசியாகிவிட்டது என்றேன்.
அப்போது குறுக்கிட்ட ஒரு மாணவி, இலக்கியம் படித்தவர்கள் ஆசிரியர்
பணியைத் தவிர வேறு என்ன செய்வது என்று கேட்டார். நானும் இரண்டு
இலக்கியங்களும் படித்தவன்தான். எனவே உங்களை சரிவர தயார்படுத்திக்
கொண்டால் பெரிய பதவிகளை அடைய முடியும்.

மாறாக சாலையில் அமர்ந்து போராடினால் அதைப் பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு நபர் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டார். எனவே சாலையில் அமர்ந்தால் திருமணம் நடக்காது என்றுதான் கூறினேன்.
என்னை சந்திக்க வந்தவர்களுக்கு அறிவுரை மட்டுமே
சொன்னேன். ஆனால் அது அவர்களுக்கு கசப்பாக இருக்கிறது" என்றார் மகரபூஷணம்

Friday, 10 February 2012

பெண்களே கவனம்! - ஐ போனில் அரங்கேறியுள்ள அயோக்கியத்தனம்!

த‌கவல் தொழில் நுட்பத்தின் அபார‌ வளர்ச்சியின் காரணமாக இன்று மனித சமுதாயம் பல அரிய கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்துள்ள‍து. 


தகவல் தொழில் நுட்பத்தின் மூலமாக நாம் பெறும் நன்மைகள் பல என்றாலும், அதன் மூலம் வரும் பிரச்சனைகளும் கூடிக் கொண்டேதான் போகிறது. அந்த வகையில் இப்போது வந்துள்ள மென்பொருளால் பெண்களுக்கு ஏற்படப்போகும் விபரீத விளைவுகள் ஏராளம் என்றே சொல்ல‍லாம்.




ஜபோனில் ஒரு வித மென்பொருளை நிறுவி, அந்த போனின் காமிரா மூலம் படம் பிடிக்கும் போது ஆடையணிந்திருப்பவர்களைக் கூட ஆடையற்றவர்களாக துகில் உரித்துக் காட்டுகிறது என்ற அதிர்ச்சிகரமான தகவல் தற்போது வெளியாகி உள்ளது.




இது ஐபோன் செய்து கொடுத்துள்ள வசதி அல்ல என்பதும் இது வொரு பிரத்தியேக மென்பொருள் என்பதும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. ஆகையால் பெண்களே! நீங்கள் சற்று எச்ச‍ரிக்கையுடன் இருப்ப‍து நல்ல‍து.


நன்றி: நிலவைத் தேடி

Wednesday, 1 February 2012

முதல்வர் ஜெயலலிதா - எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் சட்டப்பேரவையில் நேரடி மோதல் - காணொளி

இன்று தமிழக சட்டப் பேரவையில் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது முதல்வர் ஜெயலலிதா - எதிர்கட்சித் தலைவர் விஜயகாந்த் ஆகியோருக்கிடையே நேரடியாகக் கடும் மோதல் ஏற்பட்டது.

இரு கட்சித் தலைவர்களும் பரஸ்பரம் கடுமையான விமர்சனங்களையும் சாவல்களையும் விடுத்தக் கொண்டனர். இந்த நிகழ்வையடுத்து அ.தி.மு.க. - தே .மு.தி.க ஆகிய கட்சிகளுக்கிடையேயான தேர்தல் கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது.

சட்டசபையில் நடந்தது என்ன என்பது பற்றிய ஒரு காணொளி இதோ:


நன்றி: சன் தொலைக்காட்சி