சுஜாதா கையெழுத்தில் வந்த கடிதம்....
பல ஆண்டுகளுக்கு முன் அவரிடமிருந்து எனக்கு வந்த கடிதம் பற்றி மீண்டும் ஒரு முறை அந்த வரிகளை இன்று உங்களுடன் பகிர்கிறேன்.
சுஜாதா கைப்பட எனக்கெழுதிய அந்த கடிதத்தை இம்முறை உங்கள் பார்வைக்கு தருகிறேன். சுஜாதா தீவிர ரசிகர்கள் இதனை மிக ரசிப்பார்கள் என நம்புகிறேன்.
சுஜாதா பதில் எழுத மாட்டார் என்பது பொதுவாய் அனைவரும் அறிந்தது. ஆனால் நம்ப முடியாமல் சில நாளில் பதில் வந்தது.
அன்புள்ள மோகன் குமார்,
உங்கள் கடிதம்; வாசகர்களுக்கு நான் பெரும்பாலும் பதில் கடிதம் எழுதுவதில்லை; ஆனால் அதற்கான பல காரணங்களை ஒத்திப் போட்டுவிட்டு, உங்களுக்கு பதில் எழுத தூண்டியது உங்கள் கடிதத்தில் விரவியிருந்த ஸ்நேகம். நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயரானதும் எனக்கு மீண்டும் எழுதுங்கள்
அன்புடன்
சுஜாதா
*******************
இந்த கடிதத்தை எத்தனை முறை வாசித்திருப்பேன்!! சில வரிகளில் பல விஷயம் உணர்த்தினார் வழக்கம் போல்..
முதல் வரியை கவனித்தீர்களா? " உங்கள் கடிதம்" அவ்வளவு தான் "கிடைத்தது" இல்லை!! வார்த்தை சிக்கனம்!!
அடுத்த வரியில் யாருக்கும் எழுதாத நான் உனக்கு எழுதுறேன் என என்னை மகிழ வைத்து விட்டார்!!
கடைசி வரி தான் மிக முக்கியம்.. "நன்றாக படித்து முன்னுக்கு வந்து பெரிய லாயர் ஆனதும் .." இப்போ படிப்பது தான் உன் வேலை என எவ்வளவு அழகாய் சொல்லிட்டார்! இது என ஆதர்சம் மூலம் வந்ததால், நான் சீரியாசாகவே எடுத்து கொண்டேன்!
ஆனால் சுஜாதா சொன்னது போல் நான் லாயர் ஆகலை.. படிக்கும் போதிலிருந்தே கம்பனிகளில் லீகல் அட்வைசர் ஆக செல்லும் எண்ணம் தான்.பின் கூடவே Company Secretary course-ம் படித்து விட்டு வேலைக்கு வந்தேன். துவக்கத்தில் இருந்த கம்பெனியிலேயே சுஜாதா ஒரு Director!!
Company Secretary-தான் Board Meeting-கள் நடத்த வேண்டும். இதற்கான நோட்டீஸ் அனுப்புவது, மீட்டிங்குகளில் எடுக்கப்படும் முடிவுகளை (Minutes) பதிவு செய்வது இவை Company Secretary வேலையில் அடங்கும். எனவே சுஜாதாவை Board Meeting-கில் அருகிலிருந்து பார்க்க போகிறேன் என ஆர்வமாக இருந்தேன். ஆனால் நான் வேலை பார்த்த கம்பனிகளில், இந்த ஒரு கம்பனியில் மட்டும் தான் Company Secretary-ஐ வெளியே வைத்து விட்டு Board meeting நடத்துவார்கள்!! நான் இல்லாத மீட்டிங்கில் என்ன நடந்தது என நான் வெளியே இருந்து Minutes எழுத வேண்டும்!!
இந்த காலங்களில் அவருடன் Board meeting குறித்து போனில் பேசியிருக்கிறேன். அவர் எங்கள் கம்பெனி வந்து, நேரே மீட்டிங் ரூம் செல்வதை பார்த்துள்ளேன். அவ்வளவு தான்.
இதே காலத்தில் நண்பன் லக்ஷ்மணன் இறந்த பின் அவனது கவிதைகளை தொகுத்து புத்தகமாக போடும் முயற்சியில் நண்பர்கள் இறங்கினோம். ஒவ்வொருவரும் ஒரு வேலை செய்தோம். நான் புத்தகதிற்கான முன்னுரை, அட்டை படம் போன்றவை பிரபல எழுத்தாளர்/ ஓவியர்களிடம் வாங்கும் வேலையில் இருந்தேன்.
முன்னுரைக்கு கல்யாண்ஜியை அணுகி இருந்தோம். அவரும் எழுதி தந்திருந்தார். இந்நிலையில் சுஜாதா இருக்கும் அதே flat-ல் இருந்த வெங்கடேஷ் என்ற எனது Colleague, அவரிடம் நாங்கள் நண்பன் இறந்த பிறகு அவனது கவிதைகளை தொகுத்து வெளியிடுவது பற்றி கூறியிருக்கிறார். சுஜாதா மிக ஆர்வமாகி "அந்த கவிதைகளை வாங்கி வாருங்கள்; படிக்கணும்" என கூறியிருக்கிறார். வெங்கடேஷ் மூலம் லக்ஷ்மணன் கவிதைகள் சுஜாதாவை அடைந்தன. சுஜாதா சும்மா படிக்க தான் கேட்கிறார் என நினைத்திருக்க, அவரோ அற்புதமாக இரு பக்கம் கவிதைகள் பற்றி எழுதி அனுப்பி விட்டார். ஒரு பக்கம் அதை படித்து மகிழ்ச்சி. மறு பக்கம் கல்யாண்ஜியிடம் வேறு வாங்கி உள்ளோமே என குழப்பம். கல்யாண்ஜி தந்ததை முன்னுரையாக போட்டு விட்டு சுஜாதா தந்ததை கடைசியில் வெளியிட்டோம்.
கல்யாண்ஜிக்கு அப்போது இதில் ரொம்ப வருத்தம். "சுஜாதாவிடம் முன்னுரை வாங்குவதானால் என்னிடம் ஏன் வாங்கணும்?" என கோபித்தார். "சுஜாதாவிடம் நாங்களாக போகலை; அவரே கேட்டு வாங்கி எழுதி தந்தார்" என்றால், அவர் நம்ப தயாராய் இல்லை. "உங்கள் எழுத்தை முன்பும் அவருடையதை பின்னரும் வெளியிட்டோம்; புத்தகம் துவக்கத்தில் நன்றியில் கூட உங்கள் பெயரை தான் முன்னர் போட்டோம்" என்ற போதும் அவருக்கு கோபம் குறையலை.
புத்தகத்தை நேரில் தந்து நன்றி சொல்ல சுஜாதா இல்லம் சென்றேன். சுஜாதாவை நேரில் சந்தித்து பேசியது ஒரே முறை அது தான். புத்தகம் வாங்கி கொண்டு, " இந்த வார குங்குமத்தில் லக்ஷ்மணன் கவிதைகள் பத்தி எழுதிருக்கேன்; படிங்க" என்றார். " சரி" என்றேன். சட்ட கல்லூரியில் படிக்கும் போது அவரிடிமிருந்து வந்த கடிதம், அவர் மீதான எனது பிரேமை எதுவும் சொல்ல தோன்ற வில்லை. இதற்கு முன் பால குமாரனை பார்த்து மனம் நொந்த பிறகு பிடித்த எழுத்தாளரை நேரில் பார்த்து பேச கூடாது என்ற எண்ணம் அதிகமாகி இருந்தது (இது பற்றி பின் தனியே எழுதுகிறேன்). என்றாலும் எதுவும் எதிர் பார்க்காமல் அவர் தந்த முன்னுரைக்கு நேரில் நன்றி சொல்வதே மரியாதை என்பதால் சென்றிருந்தேன்
எங்களுக்குள் பேசி கொள்ள ஏதுமில்லாதது போல் இருந்தது அந்த சில நிமிடங்கள்...உடன் கிளம்பி வந்து விட்டேன்.
சுஜாதா இறந்த போது இரு நாட்கள் திரும்ப திரும்ப மனதில் பல நினைவுகள். அவர் இல்லம் மாறி விட்டதா என தெரிய வில்லை. அவர் இறந்த நிலையில் அவரை சென்று பார்க்க மனம் விரும்ப வில்லை.
அந்த பிம்பம் என் மனதில் பதிய மனம் ஒப்பு கொள்ள வில்லை. சுஜாதா, சுஜாதாவாகவே என்னுள் இருக்கட்டும் !
நன்றி: வீடு திரும்பல். மோகன்குமார்
நல்ல பதிவு.
ReplyDeleteதிரு சுஜாதாவின் கையெழுத்து பார்த்தது மகிழ்ச்சி. என்னிடமும் 3.5.80 நாள் கடிதம் இருக்கிறது. அதை தக்க தருணத்தில் வெளியிடுகிறேன்.
நன்றி.