சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இணைவுக் கல்லூரிகளில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் பி.ஏ. ஆங்கிலம் (சி.ஏ.), பி.எஸ்சி. கணிதம் (சி.ஏ.), பி.காம்.
(சி.ஏ.) ஆகிய பட்டப்படிப்புகளை சுமார் 37 ஆயிரம் மாணவ-மாணவிகள்
படித்துள்ளனர். மேலும் பலர் அந்தப் பாடப் பிரிவுகளில் தற்போது பயின்றும் வருகின்றனர்.
ஏற்கெனவே இந்த பட்டப் படிப்புகளை முடித்து பின்னர் ஆசிரியர் பணிக்காக பி.எட். பட்டம் பெற்ற சிலருக்குக் கடந்த 2010-ம் ஆண்டில் ஆசிரியர் பணியும் கிடைத்தது. அவர்களது சான்றிதழைச் ஆசிரியர் தேர்வு வாரியம் பெரியார் பல்கலைக்கழக இணைவுக் கல்லூரியில் பயிற்றுவிக்கப்படும் மேற்கண்ட படிப்புகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் இல்லை என்று கூறியதுடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட பணியை ரத்து செய்துவிட்டது.
இது குறித்து மாணவர்கள் விசாரித்தபோது பல்கலைக் கழக மானியக் குழுவின் அங்கீகாரம் இல்லாத இது போன்ற படிப்புகள் படித்தவர்களுக்கு தமிழகம் உள்பட எங்கும் அரசு வேலை கிடைக்காது என்றும் தெரிய வந்தது. தங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில் தங்களது படிப்புகளுக்கு அங்கீகாரம் அளிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாணவ-மாணவிகள், இவர்களுடன் படிப்பை முடித்த பட்டதாரிகள் போராட்டத்தில் குதித்தனர். சேலம் ஆட்சியர் மகரபூஷணமும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்திருந்தார்.
ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை என்றும் தங்களின் கோரிக்கையை வலியுறுத்தியும் கடந்த 22ந் தேதி புதன்கிழமை காலை சேலம் ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் அதிகமான மாணவ-மாணவிகள் முற்றுகையிட்டனர். பின்னர் ஆட்சியர் மகரபூஷணத்தின் அறைக்குச் சென்ற மாணவ-மாணவிகள் தங்களது பிரச்னை குறித்து விளக்கி, மனு அளித்தனர்.
மனு அளிக்கச் சென்ற தங்களிடம் கோபமுற்ற ஆட்சியர் மகரபூஷணம் ஆட்சேபிக்கத் தக்க வகையில் பேசியதாகவும் குறிப்பாக பெண்களை இழித்துப் பேசியதாகவும் மாணவர் குழு வெளியில் வந்து தங்கள் சகாக்கள் மத்தியில் தெரிவிக்க அவர்களிடையே கொந்தளிப்பு தோன்றியுள்ளது.
இது குறித்து மாணவர்கள் கூறும்போது....
ஆட்சியர் மகரபூஷணத்திடம் மனு அளித்துவிட்டு, உங்களது குழந்தையைப் போல நினைத்து எங்களுக்கு உதவுங்கள் என்று கூறினோம். ஆனால் ஆட்சியரோ, இத்தனை பேர்களைப் பெற்றிருந்தால் நான் உயிரோடு இருந்திருக்க மாட்டேன் என்று கிண்டலாகக் கூறினார்.
மேலும் எங்களுடன் வந்திருந்த மாணவிகளைப் பார்த்து, இந்த மாணவர்களுடன் சுற்றிக் கொண்டு, கொடி பிடித்து போராடிக் கொண்டிருந்தால் உங்களை யார் திருமணம் செய்து கொள்வார்கள்? என்றும் நீங்கள் படித்து ஆசிரியராகி என்ன சாதிக்கப் போகின்றீர்கள்? என்றும் கேட்டார்.
இதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஒரு மாணவனிடம் நீ அந்தப் பெண்ணைத் திருமணம் செய்து கொள்வாயா சொல் என்று கேட்டு அதிர வைத்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாங்கள் அவரிடம் மேலும் பேசாது அங்கிருந்து வெளியேறிவிட்டோம்" என்று மாணவர்கள் விவரித்தனர்.
பெண்களைப் பற்றி ஆட்சியர் தவறாகப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரைக் கண்டித்தும் சட்டக் கல்லூரி மாணவர்கள் விரைவில் போராட உள்ளதாக அறிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமும் ஆட்சியர் மகரபூஷணத்துக்குக் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. பெண்களை
அவமானப்படுத்தும் நோக்கில் பேசியுள்ள சேலம் ஆட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க தமிழக முதல்வரை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பெண்கள் படிப்பது குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக
எழுந்த பிரச்னை தொடர்பாக ஆட்சியர் மகரபூஷணம் கூறும்போது....
"இந்த பிரச்னை தொடர்பாக நான் உத்தரவு போட முடியாது. இது குறித்து
டி.என்.பி.எஸ்.சி., டி.ஆர்.பி. அதிகாரிகளிடம் பேசியாகிவிட்டது என்றேன்.
அப்போது குறுக்கிட்ட ஒரு மாணவி, இலக்கியம் படித்தவர்கள் ஆசிரியர்
பணியைத் தவிர வேறு என்ன செய்வது என்று கேட்டார். நானும் இரண்டு
இலக்கியங்களும் படித்தவன்தான். எனவே உங்களை சரிவர தயார்படுத்திக்
கொண்டால் பெரிய பதவிகளை அடைய முடியும்.
மாறாக சாலையில் அமர்ந்து போராடினால் அதைப் பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு நபர் உன்னை திருமணம் செய்து கொள்ளமாட்டார். எனவே சாலையில் அமர்ந்தால் திருமணம் நடக்காது என்றுதான் கூறினேன்.
என்னை சந்திக்க வந்தவர்களுக்கு அறிவுரை மட்டுமே
சொன்னேன். ஆனால் அது அவர்களுக்கு கசப்பாக இருக்கிறது" என்றார் மகரபூஷணம்
No comments:
Post a Comment