மறைந்த திரு. சதீஷ்குமார் |
கண்ணீரை ஏற்றுக்கொள்
எங்கள் தோழா!........
வாழ்வின்
மற்றும் ஒரு பரிமாணத்தை
கற்றுக் கொடுத்து விட்டுச்
சென்றுவிட்ட
சக தோழனே!
நாம்
அன்றாடம் சந்திக்கும்
கொலை-தற்கொலை சாவுகள்
மற்றவர்களுக்கு வேண்டுமானால்
வெறும் செய்தியாகத் தெரியலாம்.
ஆனால் அவை
நமக்கான பாடங்கள் என்பதை
ஏன் கற்க மறந்தாய்?
அன்றாடம் சடலங்களைப்
பார்த்துப் பழகிவிட்டாலும்
எங்களுக்கு
உன் உயிரற்ற சடலம்
கொடுத்த அதிர்ச்சியை
நீ
உணர்வாயா?
உன்
விரைத்துப்போன கைகளை
தூக்குப் படுக்கைக்குள்
மடித்து வைத்து
வாகனத்தில் ஏற்றுகையில்,
எழுந்து வந்து
இன்ப அதிர்ச்சியூட்டமாட்டாயா
என்று எண்ணி ஏமாந்தது
உனக்குத் தெரியுமா?
எவ்வளவு பெரிய
செய்தியாளனாலும்
வாழ்வின் சில
விளங்க இயலாத
பக்கங்கள் குறித்து
செய்தி சேகரித்து
எழுதிட முடியாது என்பதையும்,
எவ்வளவு பெரிய
புகைப்படக் கலைஞனாக
இருந்தாலும் மனதின் சில
ஆழமான பக்கங்களை
புகைப்படம் எடுத்துக்
காட்டிவிட முடியாது என்பதையும்
நீ
உன் கடைசி புன்னகை மூலம்
உணர்த்தியதை
நாங்கள்
புரிந்துகொண்டோம்.
உன்னில் இருந்து
பாடங்கள் கற்றோம்.
வாழ்வின்
மற்றும் ஒரு பரிமாணம் கற்றோம்.
அதற்கு
எங்களது கண்ணீரை
உனக்கு
காணிக்கை ஆக்குகிறோம்
ஏற்றுக்கொள்!!