Pages

Saturday 11 May 2013

மணிப்பூரில் ஒரு சகாயம்!

நாம் கற்ற கல்வியால் இந்த மானுடத்திற்கு பயன் இருக்குமேயானால் அதுதான் சரியான கல்வி. ஆனால் இங்கு பெரும்பாலும் நம் வயித்துபாட்டுக்காகவே படிக்கிறோம். அதுபோல ஒருவர் ஒருபதவியில் இருக்கிறார் என்றால் அந்த பதவியினால் அந்த சமூகத்திற்கும்,எளிய மனிதர்களுக்கும் பயன் இருக்குமேயானால் அப்பொழுதுதான் அந்தப்பதவிக்கும்,அப்பதவில் இருப்பவர்க்கும் பெருமை. ஆனால் இன்று பெரும்பாலான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் தன் பதவியை தக்கவைத்துக்கொள்வதற்கு அரசியல்வாதிகளின் முதுகைச் சொறிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு மத்தியிலும் ஒரு சிலர் மக்கள் நலனுக்காக உழைப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள்.

தமிழ்நாட்டில் எத்தனையோ ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள், ஆனால் நம் நினைவிற்கு வருபவர்கள் சகாயம், இறையன்பு, அன்சுல் மிஸ்ரா என்று ஒருசிலரே. காரணம், இவர்கள் அந்தப் பதவியில் அமர்ந்தப்பிறகு அவர்கள் மக்களுக்காகச் செய்த சேவைதான் அவர்களை நம் நினைவில் நிற்கச்செய்கின்றது.

RBI(Reserve Bank of India)யின் துணைகவர்னர் திரு.சக்கரவர்த்தி அவர்கள் இரண்டு வருடங்களுக்கு முன்னால் சொன்ன ஒரு கருத்தை இங்கு பதிவு செய்கிறேன். அதாவது பெரிய பதவிகளுக்கெல்லாம் பெரும்பாலும் அடித்தட்டிலிருந்து படித்துவிட்டு வருபவர்களை அமர்த்த வேண்டும், அப்பொழுதுதான் அவர்களின் பிரச்சனைக்கு ஏற்ப அவர்களால் திட்டங்களை வகுக்க முடியும் என்றார். இதை நான் முழுமையாக ஆமோதிக்கிறேன். இவரின் கூற்றுக்கு உதாரணங்கள்தான் இறையன்பு,சகாயம் போன்றவர்கள். இவர்கள் வரிசையில் இன்னும் இன்னும் சிலர் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சமீபத்திய ஓர் உதாரணம் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் பாமே, இ.ஆ.ப. Armstrong Pame I.A.S.(28). இவர் ஏழு சகோதரிகள் (Seven Sisters) என்று வருணிக்ககப் படக் கூடிய வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலத்தின், தௌசெம் (Tousem) பகுதியில் Sub-divisional magistrate பதவியில் இருக்கும் இளம் ஐ.ஏ.எஸ் அதிகாரி. அதோடுமில்லாமல் நாகலாந்து மாநிலத்தின் Zeme என்னும் மலைவாழ் இனத்திலிருந்து வந்திருக்கும் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரியும்கூட.


நமது  அரசாங்கம் செய்திருக்க   வேண்டிய செயலை    தனிமனிதனாக  (மக்கள் ஒத்துழைப்புடன்)சாதித்திருக்கிறார்.   இவரை  அந்தப்   பகுதி மக்கள் ’அதிய மனிதன்’ என்று  தலையில் தூக்கி  வைத்து  கொண்டாடுகிறார்கள்.   அப்படி என்னதான் சாதித்துவிட்டார் இவர் என்று கேட்கிறீர்களா?  ஆம், மக்களுக்கு நல்ல   சாலை   வசதியை   ஏற்படுத்திக்    கொடுத்திருக்கிறார்.    இவர்   அந்த திட்டத்திற்கு’’மக்கள் பாதை’’(People's Road) என்றும் பெயர் சூட்டியிருக்கிறார்.


அட!? ரோடுபோட்டதுலாம் ஒரு சாதனையா? எங்க ஊர் பஞ்சாயத்து தலைவர், கவுன்சிலர்கூடதான் எங்களுக்கு ரோடுபோட்டுகொடுத்திருக்கிறார்கள் என்று அங்கலாய்க்காதீர்கள். நம்ம ஊர் பஞ்சாயத்து தலைவர்கள் போடுவது மக்களுக்காக அல்ல, தங்களின் வசதிவாய்ப்பை பெருக்கிக்கொள்வதற்காக. ஆனால் ஆர்ம்ஸ்ட்ராங் பாமே செய்துகொடுத்திருக்கும் சாலைவசதி மலைவாழ் மக்களுக்காக.அதுவும் மிகமிகக் கடினமான மலைப்பகுதியில்.

2012ஆம் ஆண்டு Tousem மாவட்டத்தின் Sub-divisional magistrate பதவிக்கு வந்தபிறகு பல கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் செய்து அம்மக்களின் வாழ்க்கை முறையினைப் பார்த்திருக்கிறார். அம்மக்கள் அரிசி வாங்கி முதுகில் சுமந்துகொண்டு பலகிலோமீட்டர் பயணம் செய்ய வேண்டிய சூழல், ஒரு நோயாளியை மருத்துவமணைக்கு அழைத்துச்செல்ல வேண்டுமானால்கூட மூங்கிலாலான ஒரு தட்டியில்தான் தூக்கிக்கொண்டு செல்லவேண்டும். 


இது போன்ற மிகக் கடுமையான சூழ்நிலையை பார்த்த அவர் உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அப்பகுதி மக்கள் ஒரே குரலாக எங்களுக்கு நல்ல சாலைவசதி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். சரி என்று இந்த விஷயத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்கிறார். 

அரசோ அங்கு சாலைபோடுவதற்கான சூழ்நிலை துளிகூட இல்லையென்று கூறி சாலைபோட மறுத்துவிட்டது. இருந்தும் இவர் சோர்ந்து போய்விடவில்லை. தனது சொந்த பணம் ஐந்து லட்சத்தை முதல்முதலாக இந்த திட்டத்திற்கு ஒதுக்கியிருக்கிறார். அவரது சகோதரர்(டெல்லி பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) ரூபாய் ஒருலட்சமும், அவரது அம்மா (இவரின் அப்பா ஓய்வூதியத்திலிருந்து) ஐயாயிரமும் கொடுத்திருக்கிறார்கள்.

இந்தத் தகவலை அப்படியே அவருடைய முக நூலில் போட்டிருக்கிறார். இதைப்பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்து ஒருவர் 2500 டாலரும், மற்றொருவர்3000டாலரும் கொடுத்திருக்கிறார்கள். இப்படியாக 40லட்சம் சேர்ந்திருக்கிறது. இருந்தும் இந்த 40லட்சம் மிகச் சிறிய தொகையாகவே இருந்திருக்கிறது. சாலைபோடும் உள்ளூர் Contractors சில இயந்திரங்களை இலவசமாக கொடுத்து உதவியிருக்கிறார்கள். அந்தப் பகுதி மக்களும் கூலிவாங்காமல் வேலைசெய்திருக்கிறார்கள். இப்படியாக அந்தப் பகுதி மக்களுக்கு 100கிலோமீட்டர் அளவுக்கு சாலை அமைத்துக் கொடுத்திருக்கிறார்.

 


’உண்மையில் இதை என்னால் நம்பவே முடியவில்லை,   இது  ஒரு அதிசயம், மீண்டும்      என்னால்     இப்படி     ஒரு     செயலைச்    செய்ய   முடியுமா   என்று தெரியவில்லை’ என்று நெகிழ்கிறார் திரு. ஆர்ம்ஸ்ட்ராங் பாமே.

அந்தப் பகுதி விவசாயிகளும் இந்த ’மக்கள் சாலை’ வந்தபிறகு எங்களாலும் நாலு காசு சம்பாதிக்கமுடிகிறது என்று மகிழ்ச்சியுடன் கூறுகிறார்கள்.

’ரோடு   போட்டது   போதும்   முதலில்   உனக்குன்னு   ஒரு   வீடு  கட்டு’ என்று இவரின் அம்மா கூறுகிறாராம்...

நான் எத்தனைமுறை வேண்டுமானாலும் உரக்கச் சொல்வேன் மகத்தான சாதனைகளும், மக்களுக்கான பயனுள்ள திட்டங்களும் இதுபோன்ற எளிய மனிதர்களாலேயே சாத்தியமாகின்றன.

நன்றி: 'தமிழ்க் குடில்' பூரணி எமிலி

No comments:

Post a Comment