Pages

Tuesday 28 June 2011

இலங்கையின் ஊடகவியலாளர்களும், கொலைக்கணக்குகளும் - ஈழவாணி

இலங்கையில் ஊசலாடிக்கொண்டிருக்கும் ஊடகவியலாளர்கள் நிலைமைபற்றிப் பேசும் துணிபை யாரும் கொண்டிருக்கவில்லையோ என எண்ணத்தோன்றுகிறது, சுதந்திர ஊடகச் செயற்பாட்டில் தம்மைத் தக்கவைக்கும் தன்னிலைப்பாடுகளோடு வாழமுடியாமல் இங்கு அரசுக்கு சலாம்போடுபவர்களாக மாறியிருப்பவர்களின் நிலைமை மிகு பரிதாபமே.ஒரு நாட்டில் மிகவும் சக்தி வாய்ந்த விடயமாக இருப்பது ஊடகத்துறையே.இலங்கையில் ஒரு சுதந்திரமான ஊடகம் இருந்ததா என்பது தொடர்பில் எப்பொழுதும் ஒரு கேள்விக்குறியே இருந்துவந்துள்ளது.

உலகில் மனித உரிமைகளை மீறும் நாடுகள் பட்டியலில் இலங்கை முன்னணி இடத்திற்கு வந்திருப்பதோடு மட்டுமின்றி, ஊடக சுதந்திரத்தை ஒடுக்கும் முதல் 5நாடுகளின் வரிசையில் இடம்பெற்றிருப்பதும் நோக்கத்தக்க விடயமே.ஊடகங்கள் மனித நாகரீகத்தின் மற்றும் கலாச்சார நடைமுறைகளைத் தீர்மானிக்கும் அல்லது நாகரீகத்தைப் புகட்டும் மிகப் பெரும் சக்தியாகவும் இன்று உலகில் வளர்ந்துள்ளமையை யாரும் மறுக்க முடியாது. ஊடகங்கள் மீதாகத் திணிக்கப்படும் கட்டுப்பாடுகள், கட்டுப்படுத்தும் சாரார் தொடர்பான பூதாகாரமான ஒரு நிலையையே தோற்றுவிக்கும். இச்செயற்பாட்டில் அவர்களின் இலக்கை அழித்து அவர்களின் இருப்பை சர்வதேசத்திலும், மக்கள் மத்தியிலும் கேள்விக்குறியாக்கிவிடும் என்பதே உண்மை.

கருத்தைச் சுதந்திரமாகத் தீர்மானிப்பதற்கும் வெளியிடுவதற்கும் ஒவ்வொரு பிரஜைக்கும் உரிமை உண்டு. கட்டுப்பாடுகளின்றி தேச எல்லையைக் கடந்து எந்தவோர் ஊடகத்தின் மூலமாகவும் தகவல்களைத் திரட்டுவதற்கும் பெற்றுக் கொள்வதற்கும் அதனை விநியோகிப்பதற்கும் ஒருவருக்கு உரிமை உண்டு என்று 1948 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ஆம் திகதி ஐ.நா. சபை வெளியிட்ட மனித உரிமைகள் தொடர்பான நம்பிக்கைப் பிரகடனத்தின் 10 ஆவது சரத்தின் 11ஆவது பிரிவில் மிகவும் தெளிவாகக் கூறப்பட்டிருக்கின்றது. இது ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனத்திலும் சேர்க்கப்பட்டிருக்கின்றது. இதில் இலங்கையும் கைச்சாத்திட்டிருக்கின்றது. ஆனால் இந்த விடயத்தை இலங்கையில் பேணிப்பாதுகாக்கின்றார்களா என்றால் மிகவும் கவலைக்குரிய விடயமே . 

ஓர் ஊடகத்தில் ஊடகவியலாளன் ஒருவன் செய்தியை எழுதுகின்றபோது அல்லது உண்மையை வெளியிடுகின்றபோது அல்லது சுதந்திரமாக ஒரு கருத்தை வெளியிடுகின்றபோது அவன் தாக்கப்படுகின்றான் அல்லது காணாமல் போகின்றான் அல்லது சிறைகளில் அடைக்கப்படுகின்றான். இந்த நிலைமையே இந்நாட்டில் தொடர் சம்பவங்களாகிக் கொண்டிருக்கிறது. படுகொலை செய்யப்பட்ட ஊகடவியலாளர்களில் 34 தமிழ் ஊடகவியலாளர்களும் 2 முஸ்லிம் ஊடகவியலாளர்களும் 5 சிங்கள ஊடகவியலாளர்களும் உள்ளடங்குகின்றார்கள். இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை கொண்டுவந்ததற்குப் பிற்பாடுதான் இவர்கள் அனைவரும் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் என்பது இவ்விடத்தில் சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உண்டென நினைக்கிறேன்
முன்னாள் ஜனாதிபதிகளான ஆர். பிரேமதாஸவின்( பிரதமர் )ஆட்சிக்காலத்தில் 2 ஊடகவியலாளர்களும் திருமதி சந்திரி கா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சிக்காலத்தில் 13 ஊடகவியலாளர்களும் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 26 ஊடகவியலாளர்களும் கொலைசெய்யப்பட்டு இருக்கின்றார்கள். இலங்கையில் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை ஒப்பீட்டு ரீதியில் 7.1 சதவீதமாக இருக்கின்றது. ஆக அதிகளவான ஊடகவியலாளர்கள் சிறிய நாடான இலங்கையில் படுகொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள்.இலங்கை ஆசியாவின் ஆச்சரியம் என்ற விடயத்தில் இதையும் சேர்க்கத் தோன்றுகிறது.

இலங்கையிலே தொடர்ச்சியாக நடந்த யுத்தத்தின் காரணமாக நாட்டைவிட்டு100க்கும் மேற்பட்ட பத்திரிகையாளர்கள் வெளிநாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். குறிப்பாக 50க்கும் மேற்பட்ட தமிழ் பேசுகின்ற பத்திரிகையாளர்கள் வாழ முடியாமல் வெளிநாடுகளிலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இவ்வாறான ஒரு நிலையிலே தான் இன்று ஊடக சுதந்திரம் இருக்கின்றது. உண்மையிலே ஊடகங்கள் சுதந்திரமாக இயங்கவேண்டுமென்றால் சுதந்திர தன்மையுடன் அவர்கள் எழுதுவதற்கான உத்தரவாதத்தை இங்கு யார் வழங்குவது...? 

வெறுமனே ஊடகங்கள் சுதந்திரமாக இயங்குகின்றன என்று கூறிக்கொண்டு அச்சுறுத்தலைக் கொடுத்துக்கொண்டிருக்கும் அரசு எப்படி பொறுப்புவாய்ந்த ஊடகமாகத் துறையை நாட்டில் உருவாக்க முடியும்?

இலங்கையின் ஊடகவியலாளர்களின் பிரபலமான கொலை வரலாற்றை நோக்கின்.......
1976ம் ஆண்டு "இளைஞர் குரல்" என்ற பத்திரிகையின் ஆசிரியரும் சமூக சேவகருமான இறைகுமாரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதேபோலவே 1989ம் ஆண்டு முறிந்த பனை’ என்ற நூலை இணைந்து எழுதிய கலாநிதி.ராஜினி திரணகம அந் நூல்வெளியீட்டுக்குத் தயாராகும் போது கொல்லப்பட்டார். இவ்வாண்டிலேயே இலங்கையின் முதலாவது சிங்கள வானொலி அறிவிப்பாளரும் சுயாதீனத் தொலைக்காட்சியின் பணிப்பாளருமான தேவிஸ் குருகே படுகொலை செய்யப் பட்டார். 

டுத்து தமிழர்களின் நெஞ்சங்களில் என்றும் நிலையாக நிற்கும் மதுரக் குரலோன் கே.எஸ். ராஜா (கனகரத்தினம் சிறிஸ்கந்தராஜா) இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் மிகப் புகழ் மிக்க அறிவிப்பாளரான இவர் கொழும்பு கடற்கரையில் படுகொலை செய்யப்பட்டார். 

ரிச்சர்ட் டி. சொய்சா இலங்கையில் இருந்த முன்னணி ஊடகவியலாளர் மனித உரிமை செயற்பாட்டாளர் . இவர் இனம் தெரியாத நபர்களால் இவரது வீட்டில் இருக்கும்போது கடத்தப்பட்டு 1990 இல் கொலை செய்யப்பட்டார். இலங்கையின் தேசிய தொலைக்காட்சி சேவையானரூபவாஹினி’யில் ஆங்கிலச்செய்தி வாசிப்பாளராகவும் மற்றும் பத்திரிகை ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மயில்வாகனம் நிமலராஜன் 2000ம் ஆண்டு கொழும்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். இவர் பி.பி.சி.தமிழோசையின் மற்றும் சர்வதேச சேவைகளின் செய்தியாளர் என்பது குறிப்பிடத் தக்கது. ஐயாத்துரை நடேசன் (நெல்லை நடேசன்) 2004ம் ஆண்டு மட்டக்களப்பில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். தர்மரத்தினம் சிவராம்(தராக்கி சிவராம்). 2005ம் ஆண்டு கொழும்பில் வைத்துக் கொல்லப்பட்டார்.ரேலங்கி செல்வராஜா இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர், இவர் ஆகஸ்ட் 2005 கொழும்பில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். லசந்த விக்கிரமதுங்க இலங்கையின் பிரபலமான ஊடகவியலாளரும் பத்திரிகை ஆசிரியரும் வழக்கறிஞரும் ஆவார். இவர் கொழும்பில் இருந்து வெளியாகும்த சண்டே லீடர்’ என்ற ஆங்கில ஞாயிறு இதழ் மற்றும் புதன் தோறும் வெளிவரும் "மோர்னிங் லீடர்" வார ஏட்டின் ஆசிரியராகவும் இருந்தவர். 2009 இல் இவர் இனந்தெரியாதோரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இவை தவிர பல பத்திரிகையாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள் தங்களின் பாதுகாப்புக் கருதி நாட்டை விட்டு வெளியேறியே தம் பணிகளைச் செய்யக்கூடிய நிலைக்குப் பலாத்காரமாகத் தள்ளப்பட்டுள்ளனர். இதற்குள் இராணுவ ஆய்வாளர் இக்பால் அத்தாசும் அடக்கம். ஊடகவியலாளர் என்ற ஒரு சமூகத்தின் வளர்சியில் மிகப் பங்காற்றும் சாத்வீகப் போராளிகளை அதிவேகமாகத் துரத்திக்கொண்டிருப்பது ஆயுதங்களின் மிரட்டல்களும் பலி வாங்கல்களுமே என்பதோடு மட்டுமின்றி தமிழருக்கு எதிரான அரசின் செயற்பாடுகளுமே என்பதும்தான் அப்பட்டமான உண்மை.

யுத்தம் நடக்கின்ற, போராட்டம் நடக்கின்ற அல்லது இனக்காழ்ப்புகள் கொண்ட ஒரு தேசத்தில் ஊடகங்கள் மீதான அடக்குமுறை என்பது உலகம் முழுவதும் இடம்பெற்று வருகின்றதென்பதே இந்த நாகரீக உலகின் வருத்தம் மிக்க உண்மையாகும். வெகுஜன ஊடகங்கள் ஒரு சமூகப் பிரக்ஞையுடன் செயற்பட வேண்டும். மக்கள் சரியான திசை வழியே பயணிப்பதற்கு ஊடகங்களின் செயற்பாடு முக்கியமான பாத்திரத்தை வகிக்க முடியும். ஒரு சமூக மாற்றத்திற்கும் சமூக முன்னேற்றத்திற்கும் சமூக விழிப்பிற்கும் ஊடகங்கள் பெரும் பங்களிப்பை ஆற்ற முடியும். எனவே அவர்கள் மிகவும் பொறுப்பு வாய்ந்தவர்களாக உண்மையானவர்களாக செயற்பட முயல வேண்டும். ஊடகத்துறை சமூகத்தின் முதுகெலும்பாகச் செயற்பட வேண்டும்.இவர்களின் பிழையான செயற்பாடுகள் தனிநபர்களை மட்டும் அல்ல, ஒரு சமூகத்தையே ஏன் ஒரு நாட்டையே புரட்டிப்போட்டுவிடும். இது அண்மையில் இலங்கையின் வரலாற்றிலே இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

இருப்பினும் தடைகளைத் தாண்டி ஊடகவியலாளர்களின் பேனாக்களும் குரல்களும் நசுக்கப்படும் தடவைகளை விஞ்சி மறுபடி மறுபடி வீரியத்தோடும் வேகத்தோடும் உலகின் மனித நலனுக்காகச் செயற்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.

நன்றி: உயிரோசை

2 comments:

  1. ஊடகத்தின் மீதான கட்டுப்பாடுகள் எந்த தேசத்தில் இருந்து எந்த ரூபத்தில் இருந்து வெளி வந்தாலும் நாம் அதை வன்மையாக எதிர்ப்போம்!

    ReplyDelete
  2. the lead and content that we pen is not just news , its the history that we are penning , no matter how strong the arms stopping us may be, believe that our pen will mount for all sort of justice by any mean!

    ReplyDelete