Pages

Friday 24 June 2011

வெளிச்சம் பரவட்டும்


சேலம் இதழாளர் மன்றமும் – பெரியார் பல்கலைக்கழக இதழியல்,மக்கள் தொடர்பியல் துறையும் இணைந்து நடத்திய ‘இதழியலில் இன்றைய உத்திகள்’ என்னும் தலைப்பிலான பயிலரங்கம் தமிழக இதழியல் வரலாற்றில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்துள்ளது.ஐம்பதுக்கும் மேற்பட்ட இதழாளர்கள் ஐந்து மணி நேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் அமர்ந்து பயிலரங்கின் பார்வையாளர்களாக மட்டும் இல்லாமல் பங்கேற்பார்களாக இருந்தது நம்பிக்கை அளிக்கும் தொடக்கமாக இருந்தது. இம்முயற்சிக்கு பெரியார் பல்கலைக் கழகத் துணைவேந்தரும், சேலம் இதழாளர் மன்ற பொறுப்பாளர்களும் காட்டிய ஆர்வம் அளப்பரியது. கற்றுக்கொள்வதும், கற்றுக் கொடுப்பதும் வாழ்வின் தொடர் நிகழ்வு என்பதனை பயிலரங்கம் உரத்தக்குரலில் உணர்த்தி இருக்கிறது.

  
    பயிலரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களின் தோழமையான அணுகுமுறையும், இதழாளர்களின் தன்முனைப்பு இல்லாத பங்கேற்பும்,ஆர்வமும் ஆக்கப்பூர்வமான அடித்தளத்தை உருவாக்கி இருக்கிறது.பயிலரங்கில் பங்கேற்ற இதழாளர்கள் பலரும் தம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தை மட்டுமே இலக்காக கொண்டிருந்தனர். இந்தத்தேடல் உள்ளவர்கள் வெற்றிக்கான வாசல்களை தொட்டு விட்டவர்கள் எனலாம். பெரியார் பல்கலைக் கழக இதழியல் துறையும்  சேலம் இதழாளர் மன்றமும் தொடங்கி வைத்திருக்கின்ற இந்த அரிதினும் அரிதான நிகழ்வு தமிழகமெங்கும் தொடர வேண்டும்.
  
    புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் இதழ்கள் குறித்தும் இதழாளர்கள் குறித்தும் வார்த்தைகளில் வடித்திருப்பதை  இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். அவர் சொல்கிறார்……

காரிருள் அகத்தில் நல்ல
கதிரொளி நீ தான்! இந்தப்
பாரிடைத் துயில்வோர் கண்ணில்
பாய்ந்திடும் எழுச்சி நீ தான்!
ஊரினை நாட்டை இந்த
உலகினை ஒன்று சேர்க்கப்
பேரறிவாளர் நெஞ்சில்
பிறந்த பத்திரிகைப் பெண்ணே

அறிஞர்தம் இதய ஓடை
ஆழநீர் தன்னை மொண்டு
செறிதரும் மக்கள் எண்ணம்
செழித்திட ஊற்றி ஊற்றிக்
குறுகிய செயல்கள் தீர்த்துக்
குவலயம் ஓங்கச் செய்வாய்!
நறுமண இதழ்ப் பெண்ணேஉன்
நலம்காணார் ஞாலம் காணார்.

கடும்புதர் விலக்கிச் சென்று
களாப்பழம் சேர்ப்பார் போலே
நெடும்புவி மக்கட்கான
நினைப்பினிற் சென்று நெஞ்சிற்,
படும்பல நுணுக்கம் சேர்ப்பார்
படித்தவர். அவற்றை யெல்லாம்
'கொடும்' என அள்ளி உன்தாள்
கொண்டார்க்குக் கொண்டு போவாய்!

வானிடை நிகழும் கோடி
மாயங்கள், மாநிலத்தில்
ஊனிடை உயிரில் வாழ்வின்
உட்புறம் வெளிப்பு றத்தே.
ஆன நற்கொள்கை, அன்பின்
அற்புதம் இயற்கைக் கூத்துத்,
தேனிதழ் தன்னிற் சேர்த்துத்
தித்திக்கத் தருவாய் நித்தம்!

சிறுகதை ஒன்று சொல்லிப்
பெருமதி யூட்டும் தாளே!
அறைதனில் நடந்தவற்றை
அம்பலத்திழுத்துப் போட்டுக்
கறையுளம் தூய்மை செய்வாய்!
களைப்பிலே ஊக்கம் பெய்வாய்!
நிறைபொருள் ஆவாய் ஏழை
நீட்டிய வெறுங்கரத்தே.

ஓவியம் தருவாய்! சிற்பம்
உணர்விப்பாய்! கவிதை யூட்டக்
காவியம் தருவாய்! மக்கள்
கலகல வெனச் சிரிப்பு
மேவிடும் விகடம் சொல்வாய்!
மின்னிடும் காதல் தந்து
கூவுவாய்! வீரப் பேச்சுக்
கொட்டுவாய்க் கோலத் தாளே!

தெரு பெருக் கிடுவோருக்கும்
செகம்காக்கும் பெரியோர்க் கும்,கை
இருப்பிற் பத்திரிகை நாளும்
இருந்திடல் வேண்டும்! மண்ணிற்
கருப்பெற்றுருப்பெற் றிளநடை
பெற்றுப் பின்னர் ஐந்தேஆண்டு
வரப்பெற்றார், பத்திரிகை நாளும்
உண்டென்றால் வாழ்க்கை பெற்றார்
!

இத்தகைய அளப்பறிய,ஆற்றல் மிக்க பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இதழாளர்களின் பணி தொடர வாழ்த்துகள்.சேலம் மாவட்ட இதழாளர்கள் மன்றம் தொடங்கி வைத்திருக்கும் இந்த வெளிச்சம் தமிழகமெங்கும் பரவ வேண்டும்.

தோழமையுடன்

முனைவர் இரா.சுப்பிரமணி
உதவிப்பேராசிரியர்,இதழியல்,மக்கள் தொடர்பியல் துறை
பெரியார் பல்கலைக்கழகம்,சேலம்

1 comment:

  1. பாவேந்தன் வழியில் புரட்சி பாதை அமைப்போம்
    பத்ரிக்கையுலகில் புதுமை செய்வோம்
    வாழ்த்துக்கள் நன்றி உங்கள் சிறப்பான கருத்துக்களுக்கு

    ReplyDelete