Pages

Saturday, 31 December 2011

அரசு ஆணையினை மதிக்காத சேலம் பி.ஆர்.ஓ. பழனிசாமி!

அனைத்து அதிகாரங்களையும் கொண்டிருப்பதாகத் தன்னை கருதிக் கொண்டு நிழல் ஆட்சியராகச்  செயல்பட்டு வரும் சேலம் மாவட்டச் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பழனிசாமி, சேலம் செய்தியாளர்களுக்கான உரிமைகளை முற்றிலுமாக மறுத்து தொடர்ந்துஅவர்களைக் கேவலப்படுத்தி வரும் அவலம் குறித்து நமதுமுந்தைய பதிவுகளில் விரிவாகக் குறிப்பிட்டிருந்தோம்.

'துரோகிகள்' என்று குறிப்பிட்டு தமிழக முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா அவர்களால் தன்னுடைய கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட சில நபர்களின் தயவு மற்றும் ஆசி தனக்கு இருந்த காரணத்தால் மாவட்ட ஆட்சித் தலைவவரைக் கூட மதிக்காதவராகவே இருந்தார் என்று அவரை நன்கறிந்த சேலம் அரசியல் பிரமுகர்கள் பி.ஆர்.ஓ. பழனிசாமி பற்றி வெளிப்படையாகவே விமர்சித்தனர்.


பிற மாவட்டங்களில் மரியாதைக்குரியவர்களாக மதிக்கப்படும் செய்தியாளர்கள் சேலத்தில் செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி திரு.பழனிசாமியால் மட்டம் தட்டப்பட்டு மிகக் கேவலமாக நடத்தப்பட்டனர். 2011ஆம் ஆண்டுக்கான செய்தியாளர்கள் அடையாள அட்டையும், புதிய ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களுக்கென அறை ஆகியவற்றையும் ஏற்பாடு செய்து தந்திருக்க வேண்டிய பி.ஆர்.ஓ. பழனிசாமி அவற்றைச் செய்யவே இல்லை.

தனது ஏ.சி. அறையில் சொகுசாக அமர்ந்து செய்தியாளர்களைப் பிரித்தாளும் தந்திரங்களை வன்மத்துடன் மேற்கொண்டார். கடந்த காலங்களில் இவரது ஒழுங்கீனங்களைப் பற்றி சில பருவ இதழ்கள் ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி இருந்ததே அந்த இதழ்களின் செய்தியாளர்கள் மீது அவர் வன்மம் கொள்ளக் காரணம்.

சேலம் செய்தியாளர்கள் இரு அமைப்புகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டு இருந்தாலும் ஒற்றுமையுடன் இருந்தனர். இந்த ஒற்றுமையை உடைத்தால்தான் தன்னுடைய செல்வாக்கினை நிலை நாட்டிக் கொள்ள முடியும் என்று பி.ஆர்.ஓ. பழனிசாமி அதற்கான வேலைகளில் திட்டமிட்டு இறங்கினார். இரு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் பரஸ்பரம் தூண்டி விட்டு அவர்களுக்குள் புகைச்சலை ஏற்படுத்த பழனிசாமி மேற்கொண்ட  முயற்சி செய்தியாளர்கள் மத்தியில் எடுபடவில்லை.

செய்தியாளர்களுக்கு அனுசரனையாகவும் ஆதரவாகவும் நடந்து அவர்களுடன் நட்பு பாராட்டி வந்த ஏ .பி.ஆர்.ஓ. திரு.கோவலனை செய்தியாளர்களுடன் விரோதப் போக்கை மேற்கொள்கிறார் என்று பி.ஆர்.ஓ. பழனிசாமி தனது துறை இயக்குநருக்குப் புகாரும் அனுப்பி இருந்தார் என்பது தான் வேடிக்கை! 

தொடர்ந்த போராட்டங்களின் விளைவாக செய்தியாளர்களுக்கு என தனி அறையினையும், அடையாள அட்டையினையும் தர வேண்டிய கட்டாயத்துக்கு பி.ஓர்.ஓ. பழனிசாமி தள்ளப்பட்டார். இந்த போராட்டங்களை முன்னின்று செய்த காரணத்தால் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களை மட்டம் தட்டும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையினை தர மறுத்து விட்டார் பி.ஆர்.ஓ. பழனிசாமி !

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பருவ இதழ்களின் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையை சேலத்தில் இதற்கு முன்பாக இருந்த மாவட்ட ஆட்சியர்களும், பி.ஆர்.ஓ.க்களும் வழங்கி இருந்தனர். அவற்றைக் குறிப்பிட்டு சலுகைகளுக்காக அடையாள அட்டையைக் கேட்கவில்லை, செய்தியாளர்களுக்கான அடையாள அறிமுகமாகவே அதைக் கேட்பதாகக் கூறப்பட்டதை அவர் ஏற்கவில்லை. பிற மாவட்டங்களில் இதுபோன்ற அடையாள அட்டை வழங்கப்பட்டு இருப்பதை ஆதாரங்களுடன் செய்தியாளர்கள் எடுத்து உரைத்தும் அதனை பி.ஆர்.ஓ. ஏற்கவில்லை.

"மற்ற மாவட்டங்களில் அடையாள அட்டையினைப் பருவ இதழ் செய்தியாளர்களுக்கு வழங்கி இருப்பது தப்பு. மத்த மாவட்டங்களில தப்பு பண்ணினாங்க அப்படிங்கரதுக்காக நானும் தப்பு பண்ண மாட்டேன். இதுக்கு முன்னால சேலத்தில இருந்தவங்க விபரம் தெரியாமப் பண்ணிட்டாங்க. எனக்கு விபரம் தெரியும். சோ... உங்களுக்கு ஐ.டி. கார்டை நான் தர மாட்டேன் " என்றார் ஆணவத்தின் உச்சத்தில் இருந்த பி.ஆர்.ஓ. பழனிசாமி !

கடந்த சில வாரங்களுக்கு முன்பாக சென்னையில் நடந்த பி.ஆர்.ஓ.க்களின் கூட்டத்தில் செய்தித்துறை இயக்குனர் பருவ இதழ்களின் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை தரப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறி இருந்தார்.  ஆனால் அதனை ஏற்கும் நிலையில் சேலம் பி.ஆர்.ஓ. பழனிசாமி இல்லை. 

சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத்தின் முக்கியப் பொறுப்புகளை வகிக்கும் வாரமிருமுறை இதழ்களின் செய்தியாளர்களை மட்டம் தட்டும் வகையில் அவர்களுக்கு அடையாள அட்டையினைத் தர  மறுத்து வினோதமான ஒரு காரணத்தைச் சொல்லி அதை எழுத்துப் பூர்வமாகவும் கையெழுத்திட்டு அசட்டுத் துணிச்சலுடன் அதனைத் தந்தார் பி.ஆர்.ஓ. பழனிசாமி...!


ஆனால்...

செய்தி மற்றும் சுற்றுலாத் (செய்தி வெளியீடு) துறையின் சார்பில் 3.12.1996 தேதியன்று பிறப்பிக்கப்பட்ட அரசாணையோ (நிலை) எண்.210 பருவ இதழ் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கலாம் என்று கூறி உத்தரவிட்டுள்ளது.

காண்க: http://www.tn.gov.in/tamiltngov/gosdb/gos/inftour/tour210-t.htm



இப்படி ஒரு அரசு ஆணை இருப்பது கூட தெரியாத ஒரு நபர் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் பி.ஆர்.ஓ.வாக இருக்கிறார் என்பது வெட்கக் கேடு! 

அந்த ஆணையின் விபரங்கள் வருமாறு....

1. அரசு விழாக்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்று செய்தி சேகரிப்பதற்கு ஏதுவாக, செய்தியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குமாறு, பருவ இதழ்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிடமிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.

2. மேற்படி கோரிக்கையை, அரசு உரிய பரிசீலனைக்குப் பின்னர் பருவ இதழ்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களில் பணிபுரியும் செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் நிகழ்ச்சிகளில் செய்திகள் சேகரிப்பதற்கு ஏதுவாக, செய்தியாளர் அட்டை (Press Pass) வழங்குவதென ஆணையிடப்படுகிறது.

3. செய்தியாளர் அட்டை பின்வரும் விதிமுறைகளின் அடிப்படையில் வழங்கப்படும். 

பருவ இதழ்கள் விற்பனை பிரதிகளின் எண்ணிக்கை குறைந்த பட்சம் 10,000 ஆக இருத்தல் வேண்டும். 

செய்தியாளர்கள்/புகைப்படக்காரர்கள்/ஒளிப்பதிவாளர்கள் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். 

பருவ இதழ்களிலும், தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களிலும் நிரந்தர ஊழியராக இருத்தல் வேண்டும். 

ஒவ்வொரு பருவ இதழுக்கும் முறையே 2 செய்தியாளர்கள் மற்றும் ஒரு புகைப்படக்காரர் ஆக மொத்தம் மூவருக்கு மட்டும் வழங்கப்படும். 

ஒவ்வொரு தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் முறையே 2 செய்தியாளர்கள், 2 ஒளிப்பதிவாளர்கள், 2 ஒளிப்பதிவு உதவியாளர்கள், ஆக மொத்தம் ஆறு நபர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.

புதிய பருவ இதழ்கள் 6 மாத காலம் தொடர்ந்து வந்த பின்னரே செய்தியாளர் அட்டை வழங்கப்படும். 

4. செய்தியாளர் அட்டை வழங்குவது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்குவதற்கென, இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறையின் தலைமையிலான ஏழு நபர்கள் கொண்ட 'செய்தியாளர் அட்டை பரிந்துரைக்குழு' ஒன்று அமைக்கப்படும். இக்குழுவின் உறுப்பினர் செயலராக இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) இருப்பார். பிற ஐந்து உறுப்பினர்களையும் அரசு நியமிக்கும்.

5. செய்தியாளர் பரிந்துரைக் குழுவின் பதவிக்காலம் இரண்டு ஆண்டுகள். இக்குழு மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கூடி செய்தியாளர் அட்டை விண்ணப்பங்களை பரிசீலித்து, விவாதித்து, செய்தி மக்கள் தொடர்பு இயக்குநருக்கு அளிக்கும் பரிந்துரையையொட்டி, இயக்குநர், செய்தியாளர் அட்டையை வழங்க அதிகாரமளித்து ஆணையிடப்படுகிறது.

6. 1990-1998 ஆம் ஆண்டிற்கான செய்தியாளர் அட்டை பரிசீலனைக் குழுவிற்கு  உறுப்பினர்களை நியமித்து ஆணையிடப்படுகிறது. 

இவ்வளவு தெளிவான ஒரு அரசு ஆணையை இருட்டடிப்பு செய்து அடையாள அட்டையினை மறுத்து சேலம் மாவட்டச் செய்தியாளர்களையும், மாவட்ட ஆட்சித் தலைவரையும் ஒரு சேர  முட்டாள்களாக்க முயற்சி செய்யும் அதிமேதாவி பி.ஆர்.ஓ. பழனிசாமியின் பார்வைக்காக அந்த அரசு ஆணையினையும் இங்கு வெளியிட்டுள்ளோம். 

இதன் பிறகாவது குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்ததைப் போல அல்லாமல் அரசு ஆணையினைத் தெளிவாகப் புரிந்து கொண்டு பருவ இதழ் செய்தியாளர்களுக்கு அடையாள அட்டையினை வழங்கி அரசு ஆணையினை சேலம் பி.ஆர்.ஓ. பழனிசாமி மதிப்பார் என நம்புகிறோம்.

No comments:

Post a Comment