Pages

Saturday, 31 December 2011

போலி ரேஷன் கார்டுகளை தடுக்க மின்னணு ரேஷன் கார்டு....

சென்னை, போலி ரேஷன் கார்டுகளை ஒழிப்பதற்காக மின்னணு குடும்ப அட்டை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு கால அவகாசம் தேவைப்படுவதால் தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகளை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனால், அடுத்த ஆண்டு டிசம்பர் வரை பழைய கார்டு மூலமே ரேஷனில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் தற்போது 1.90 கோடி ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. பொதுவாக 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும். தற்போது புழக்கத்தில் உள்ள ரேஷன் கார்டுகள், 2005 -ம் ஆண்டு வழங்கப்பட்டது. அவை 2009 -ம் ஆண்டுடன் முடிந்து விட்டன. அப்போது போலி ரேஷன் கார்டுகள் கணக்கெடுக்கும் பணி நடந்து வந்ததால், புதிய ரேஷன் கார்டு வழங்கப்படவில்லை. இதனால், பழைய கார்டிலேயே 2010 -ம் ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு வழங்கப்பட்டு ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டது. 2011 -ம் ஆண்டிலும் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படாமல் உள்தாள் வழங்கி மேலும் ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டது.

தொடர்ந்து 7 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டு பயன்படுத்தப்பட்டதால் முகவரி மாற்றம், பெயர் நீக்கல், சேர்த்தல் என பல பதிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் பழைய ரேஷன் கார்டை பயன்படுத்த முடியாத சூழ்நிலை இருந்து வந்தது. 2012 -ம் ஆண்டில் புதிய ரேஷன் கார்டு வினியோகிக்கப்படும் என கூறப்பட்டது. இதை காரணம் காட்டி, பல மாதங்களாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு கார்டு வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், 3 -வது முறையாக பழைய ரேஷன் கார்டை மேலும் ஒரு ஆண்டிற்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 2012 -ம் ஆண்டுக்கு உள்தாள் இணைப்பு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பொது வினியோக திட்டத்தின்கீழ் தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலம் 2011 டிசம்பர் 31 அன்று முடிவடைகிறது. தற்போதுள்ள நடைமுறையின்படி, ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் குடும்ப அட்டையில் தன் பெயரை பதிவு செய்திருந்தால் அதை கண்டுபிடிக்க வழி இல்லை. இதன் காரணமாக ஒன்றுக்கும் மேற்பட்ட குடும்ப அட்டைகளில் ஒரே நபரின் பெயர் இடம்பெற்றுள்ள நிலையும், போலி குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருக்கின்ற நிலையும் உள்ளது.
இத்தகைய குறைபாடுகளை களைய, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பதிலாக உடற்கூறு பதிவு முறையில் மின்னணு குடும்ப அட்டைகள் வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. தேசிய மக்கள் தொகை பதிவு அமைப்பின்கீழ் பத்து விரல் ரேகைகள் மற்றும் கண்ணின் கருவிழி ஆகியவற்றை பதிவு செய்து பிரத்யேக அடையாள அட்டை வழங்குவதற்கான கணக்கெடுப்பு தற்போது நடத்தப்பட்டு வருகிறது.

இந்த உடற்கூறு முறையிலான கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த தகவல் தொகுப்பை பயன்படுத்தி மின்னணு குடும்ப அட்டை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் தொகுப்பு முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்கும் முறை உள்ளதால் ஒரே நபர் பல குடும்ப அட்டைகளில் பெயரை பதிவு செய்வதும், போலி குடும்ப அட்டைகளும், நியாய விலைக்கடைகளில் போலி பட்டியல் இடப்படுவதும் களையப்படும்.

புதிதாக மின்னணு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கு சில காலம் ஆகும். எனவே, தற்போது புழக்கத்தில் உள்ள குடும்ப அட்டைகளின் செல்லுபடியாகும் காலத்தை மேலும் ஓராண்டு காலத்துக்கு அதாவது 2012 டிசம்பர் 31 வரைநீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment