Pages

Thursday 1 December 2011

பாலை முதுவனான பல்கலைக்கழகப் பேராசிரியர்!


  10 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவங்களை மீண்டும் நினைத்துப் பார்க்கும் போதே சில நினைவுகள் நமக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்திவிடும். வரலாற்று இதிகாசங்களையும்,புதினங்களும் வெகுஜனத்தை ஈர்ப்பதே இதற்கு சரியான உதாரணமாகும்.

சில வருடங்களின் நினைவுகளே தமிழர் நெஞ்சங்களை எளிதில் கவர்ந்து விடும் நிலையில் ஏறத்தாழ 2300 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர்களின் நாகரிகம்,வாழ்க்கைத் தரம் மற்றும் அவர்களின் பிரச்சினைகளை கண் முன்னால் தத்ரூபமாக நிறுத்தினால் அதற்கான வரவேற்பும் சற்று கூடுதலாகவே இருக்கும்.

வழக்கமாக பழைய கால வரலாறு என்றால் பேரரசர்களின் வாழ்க்கையை மட்டுமே திரையில் காட்டிய தமிழ் திரைப்பட வரலாற்றில் முதன்முறையாக பொதுமக்களின் வாழ்ககையை பதிவு செய்யும் திரைப்படமாக 'பாலை' என்ற திரைப்படம் வெளியாகியுள்ளது.



இத் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரமான பாலை முதுவனாக பெரியார் பல்கலைக்கழக இதழியல்துறை பேராசிரியர் வை.நடராஜன் நடித்துள்ளார்.


பல்கலைக்கழகப் பேராசிரியர் பாலை முதுவனாக ஆக மாறிய கதை மேலும் சுவாரஸ்யமானது.


 படத்தின் இயக்குநர் மா.செந்தமிழனின் மனைவி கே.காந்திமதி பேராசிரியர் நடராஜன் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில் பணியாற்றிய போது அவரிடம் பயின்ற மாணவியாவார். பாலை திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் புதிதாக ஒருவர் நடித்தால் தான் அதன் ஆளுமையை ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்வார்கள் என நினைத்த  இயக்குர் செந்தமிழன் அதற்கேற்ற நடிகரை பல இடங்களிலும் தேடியுள்ளார்.


இரண்டு மாத தேடலுக்கு பின்னர் மனைவி காந்திமதி சொன்ன யோசனையின் பேரில் பேராசிரியர் நடராஜனை இயக்குநர் அணுகியுள்ளார். இதனையடுத்து கொச்சி அருகேயுள்ள அதரப்பள்ளியில் நடத்தப்பட்ட போட்டோ
ஷூட்-ல் நடராஜன் பங்கேற்றுள்ளார்.


கதாபாத்திரத்திற்கேற்ற உயரம்,ஆளுமைத் திறன் நிறைந்த பார்வை ஆகியவற்றின் மூலம் உடனடியாக அவர் தேர்வாகி விட்டார்.

படத்தில் நடித்த அனுபவம் குறித்த பேராசிரியர் வை.நடராஜன் கூறியது:
"2300 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த தமிழர் வாழ்க்கையை விவரிக்கும் வகையில் பாலை திரைப்படம் அமைந்ததுள்ளது.ஆயக்குடி,முல்லைக்குடி என்ற இரண்டு இனக்குழுக்களுக்கு இடையிலான மோதல்,அதனால் ஏற்படும் விளைவுகள்தான் படத்தில் காட்சிகளாக உருவாக்கப் பட்டுள்ளது.இதில் முல்லைக்குடியின் கணியான் (பருவநிலைகளை கணித்து கூறுபவர்) பாத்திரத்தில் நான் நடித்துள்ளேன்.


பாலை பருவத்தை ஏற்கனவே பார்த்தவன் என்பதால் பாலை முதுவன் என்று அந்த கதாபாத்திரம் அழைக்கப்படும்.என்னுடைய மாணவியின் கணவர் என்ற முறையில் செந்தமிழன் எனக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான்.ஆனால் அவர் திடீரென திரைப்படத்தில் நடிக்க கேட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.அடுத்த ஒருசில நிமிடங்களில் நடிப்பதற்கு நான் சம்மதம் கூறினாலும்,இதற்காக பல்கலைக்கழகத்தில் முறையான ஒப்புதல் பெற்ற பின்னரே நடிப்பதற்கு சென்றேன்.


படப்பிடிப்பு முழுவதும் தஞ்சாவூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது.நாற்பது நாள் நடந்த படிப்பிடிப்பில் பெரும்பாலும் வார விடுமுறை நாள்களில் கலந்து கொண்டேன். படப்பிடிப்பில் என்னுடைய மனைவியுடன் சென்று கொண்டேன். வெயிலுக்கு குடைபிடித்தது உள்பட பல்வேறு வகைகளில் என்னுடைய மனைவி லதா உதவியாக இருந்தார்.



பல்கலைக்கழகத்தில் இதழியல் மற்றும் காட்சித் தொடர்பியல் குறித்த பாடங்களை தியரியாக நாங்கள் சொல்லிக்கொடுக்கிறோம்.தியரியாக சொல்லிக்கொடுத்த பாடங்களுக்கும்,அதை பிராக்டிகல்லாக படப்பிடிப்புத் தளத்தில் பார்ப்பதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.எனினும் ஸ்டில் கேமரா மூலமாகவே படம் எடுக்கப்பட்டதால் பெரிய அளவில் மாறுபட்ட உணர்வு ஏற்படவில்லை.


படத்தில் நடித்ததற்காக சம்பளமாக எதையும் நான் பெற்றுக் கொள்ளவில்லை. எனினும் சங்க காலத்தில் மழை வருவதை உரிய அறிகுறிகள் மூலம் தெரிந்து கொண்டது,போர் தந்திரங்கள்,போரின் போது புகையை எழுப்பி அதன் வாயிலாக தாக்குதலை தொடர்வது போன்ற பண்டைய தமிழரின் வாழக்கையை அறிந்து கொண்டது,தியரியான விஷயங்களை பிராக்டிகலாகப்  பார்த்தது மிகுந்த மகிழ்ச்சிக்குரியதாக இருந்தது" என்று தனது பாலை அனுபவங்களை பேராசிரியர் நடராஜன் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.

4 comments:

  1. பேராசிரியர் ஐயாவுக்கு வணக்கம். நானும் அவருடைய மாணவி என்பதில் பெருமிதம் கொள்கின்றேன்.

    ReplyDelete
  2. me too :)
    All d best for ur new career Sir :)

    ReplyDelete
  3. A wonderful job by Prof.Vai.Natarajan

    ReplyDelete