சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறையும், நாமக்கல் மாவட்டப் பத்திரிகையாளர்கள் நலச் சங்கமும் இணைந்து 'இதழியலின் புதிய போக்கு' என்ற தலைப்பிலான கருத்தரங்கை ஆகஸ்ட் 6ந் தேதி நடத்தின.
நாமக்கல் பவுல்டரி டவுன் ரோட்டரி சங்க அரங்கில் நடந்த விழாவில் நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச்சங்கத் தலைவர் ஏ.எச்.சாகுல் ஹமீத் வரவேற்றார். செயலாளர் ஆர்.ரமேஷ்கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார்.
கருத்தரங்கு துவக்க விழாவில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஜெ.குமரகுருபரன் தலைமை வகித்து, துவக்கி வைத்து கருத்தரங்கினை துவக்கி வைத்தார்.
இதில் அவர் பேசிய போது ‘பத்திரிகைத் துறையில் பணியாற்றுபவர்கள் தங்களை மேலும் தகுதியுள்ளவராக்கிக் கொள்ள, இது போன்ற கருத்தரங்கை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அரசுச் செய்திகளை மக்களிடையே கொண்டு செல்வதில், முக்கியப் பங்காற்றுவதோடு மட்டுமில்லாமல், மக்கள் பிரச்சனைகளை அரசுக்கு எடுத்துச் செல்லும் பணியிலும் ஈடுபட்டு வருவது மேலும் அரசு பணியை செம்மையாக்க உதவும்’ என்றார்.
பெரியார் பல்கலைக்கழக இதழியல் மற்றும் மக்கள் தொடர்பியல் துறைத் தலைவர் வி.நடராசன் முன்னிலை வகித்தார். அவர் பேசுகையில்,
'சமீபகாலமாக இதழியல் துறை அதிகவேக வளர்ச்சியை அடைந்து வருகிறது. இந்தியாவில் ஊடகங்களின் ஆட்சிதான் நடக்கிறது என்று விமர்சனம் எழும் அளவிற்கு ஊடகங்கள் மக்கள் நலனில் அக்கறை செலுத்துகின்றன. ஊடகத் துறையில் பணியாற்றுவோருக்கென சிறப்பான பாடத்திட்டத்தை பெரியார் பல்கலைக்கழகம் உருவாக்கி வருகிறது. உழைக்கும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்புப் பட்டய மற்றும் பட்டப் படிப்புகளை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன் அடிபபடையில் கல்வித் தகுதியற்ற உழைக்கும் பத்திரிகையாளர்கள் கூட சான்றிதழ் படிப்பு, டிப்ளமோ படிப்பு பயில வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பின்னர் நடைபெற்ற பயிலரங்கில் செய்தித்துறையில் நாளிதழ்கள், தொலைக்காட்சி போன்றவற்றின் வளர்ச்சி, தற்போதைய நிலை, செய்தி சேகரிப்பு முறைகள், சமுதாயப் பிரச்சனைகள் போன்றவை குறித்து பேசப்பட்டது.
பயிற்சி பட்டறை துவக்க விழாவில் நாமக்கல் ரோட்டரி பவுல்டரி டவுன் சங்க தலைவர் சுரேஷ், சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றத் துணைத் தலைவர் சிவசுப்பிரமணியன், மூத்த பத்திரிகையாளர்கள் மோகன், தனசேகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
இதில் சேலம் மாவட்டப் பத்திரிகையாளர் மன்றச் செயலாளர் தங்கராஜா, சேலம் சரவணன், மற்றும் நாமக்கல் மாவட்ட அளவில் உள்ள ஏராளமான பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட பத்திரிகையாளர்கள் நலச் சங்கப் பொருளாளர் ரவிக்குமார் நன்றி கூற விழா இனிது நிறைவடைந்தது.
No comments:
Post a Comment