Pages

Saturday, 23 July 2011

'நான் கலக்டரு கலக்டரு கலக்டரு.....!'


சாதனைகளைச் செய்து பெயர் வாங்குபவர்கள் ஒருவகை... சத்தம் போட்டு பெயர் வாங்குபவர்கள் மற்றொருவகை... 

இதில் சேலம் கலக்டர் மகரபூஷம் இரண்டாவது வகை....


 இவரைப் பற்றி அறிந்தவர்களும், இவர் தான் சேலம் கலெக்டர் எனத் தெரிந்தவர்களும் சேலம் மாவட்டத்தில் மிகக் குறைவு. மக்கள் மத்தியில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய சேம்பரில் மட்டுமே அமர்ந்து கொண்டு, தன்னைத் தனிமைப் படுத்திக் கொண்டு தனிமையில் இனிமை காண்கிறார். இதனால் இவரை யாரென்று அடையாளம் தெரியாமல் பத்தோடு பதினொன்றாக இவரை மற்றவர்கள் சாதாரணமாக நடத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எந்த நிகழ்ச்சிக்கு போனாலும் இவரை அடையாளம் தெரியாத மக்களிடம் எதோ ஒருவகையில் மூக்கறுபட்டு விடுகிறார் என்கின்றனர் அவர் மீது மெய்யாலுமே அக்கறை கொண்டவர்கள்.

முதன் முதலாக பொறுப்பேற்று சேலம் வந்தவுடன் மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடும் நிகழ்ச்சி.

அங்கு எந்த வித அறிவிப்பும் இல்லாமல் திடு திடுப்பென அமைச்சர்கள் இருக்கும் பகுதிக்குச் சென்றார் சேலம் மாவட்ட ஆட்சியரான மகரபூஷணம் . அவர் யாரென்று தெரியாத அங்கிருந்த கரைவேட்டிகள் 'யோ யாருப்பா திடீர்னு உள்ள நுழையிறது? தள்ளுப்பா....' எனச் சத்தமிடனர்.  'நான் யார் தெரியுமா..?நான் தான் கலெக்டர்' என்றாரே பார்க்கலாம்...'சார் சொல்லிட்டு வரலாமில்ல என்றனர் கரைவேட்டிகள்....

மேட்டூரில் இப்படி என்றால் சேலத்திலோ இதைவிட சூப்பர் ...

சேலம் சூப்பர் ஸ்பெசாலிடி மருத்துவமனை ஆய்வுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் கரை வேட்டிகள் படை சூழ வந்தார். அங்கிருந்த பாதுகாப்பு காவலர் உள்ளே நுழைய முயன்றவர்களை தடுத்து நிறுத்த ஒருவர் மட்டும் முண்டி அடித்துக்கொண்டு சென்றார். சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர்தான் அவர். 'ஹே ஹே யாருப்பா அது நில்லுப்பா' என்றபடியே காவலர், ஆட்சியரைத்  தடுக்க 'நான் தான் கலக்டர்' என்றபடியே அவர்  உள்ள போக முயற்சிக்க 'என்ன கத விடுறியா நான் நம்ப முடியாது' நம்பிக்கை இல்லாமல் தடுத்தார் காவலர். இதை நேரில் கண்ட டவாலி 'நெஜமாலுமே அவர் கலக்டரு தாங்க' என சொல்லி உள் அழைத்துச் சென்றார்.

அத்தோடு நிற்கவில்லை....

உள் அறுவை சிகிச்சை அரங்கத்தில் அமைச்சர் ஆய்வு செய்துகொண்டு இருக்க வெள்ளை கோர்ட் போட்ட ஒருவர் உள்ளே நுழைந்தார். இதை பார்த்த ஒருவர், 'ஹெலோ யாரு நீங்க? உள்ள போககூடாது' எனத் தடுக்க,'என்னயா தடுக்கறே?, 'நான் யார் தெரியுமா? நான் டாக்டரு அதனால போவேன் ' என்றார் காட்டமாக. தடுத்தவர் வேறு யாருமில்லை.... சேலம் கலெக்டர்தான் அவர்.

'ஒ அப்படினா நான் யார் தெரியுமா நான் கலெக்டரு அதனால நான் தடுப்பேன்' என வடிவேலு போல கலெக்டர் மகரபூஷணம் பேச......  'ஓ கலக்டரா நீங்க. எனக்குத் தெரியாது சாரி சார்' என்றபடியே பவ்யம் காட்டி நழுவினார் அந்த டாக்டர்.

ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் போல இங்கு சில உதாரணங்களைதான் தான் எழுதியுள்ளோம். அந்தளவுக்குக் கலெக்டருக்கான கம்பீரத்தை மறந்தவராய் இருக்கிறார் மாங்கனி மாவட்ட ஆட்சியர் திரு. மகரபூஷணம் அவர்கள்...

மக்கள் நலன் சார்ந்த நிகழ்சிகளில் கலந்து கொண்டால் அவரை எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எங்கும் எதிலும் தன்னுடைய கருத்துக்களை அவர் பதிவு செய்வதில்லை. மக்களுடனும் நெருங்குவதில்லை. எந்நேரமும் சாதாரண கட்சி தொண்டர் போல அமைச்சர்கள் தொட்டு வார்டு செயலாளர் வரை யார் வந்தாலும் தான் கலெக்டர் என்பதை மறந்தவராக அவர்கள் பின்னே பவ்யமாய் நின்று கொண்டு கரைவேட்டிக்காரரைப் போல இருந்தால் எப்படி? 

இந்த நிலை நீடித்தால் 'நானும் கலக்டர் நானும் கலக்டர்' என இவரே கூப்பாடு போட்டுத் தன்னை அறிமுகம் செய்து கொள்ள வேண்டியது தான். கட்சிக்காரர் போல செயல்படுவதை நிறுத்திவிட்டு மக்கள் நலனுக்காகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தினால் தான் கம்பீரக் கலெக்டராய் அவர் வலம் வரமுடியும்' என்கின்றனர் ஆட்சியர் அலுவலக வட்டாரத்தினர்.

திரு.மகரபூஷணம் கம்பீரக் கலக்டராக வலம் வர வேண்டுமென்பதே நம் ஆவல்!

-  தமிழ், சேலம் 

No comments:

Post a Comment