Pages

Wednesday 20 July 2011

நம்மை ஆளும் செய்திகளும், பொய்களும்!


மாபெரும் வெற்றியாளராகவும் சக்தி வாய்ந்த மீடியா சக்கரவர்த்தியாகவும் சித்தரிக்கப்பட்டு வந்த ரூபர்ட் மர்டாக், இரு தினங்களுக்கு முன்பு We are Sorry என்று கொட்டை எழுத்தில் எழுதி மன்னிப்பு கேட்டுள்ளார். அவரது கோட்டையின் வலுவான தூணாக இருந்து வந்த News of the World (NoW) இழுத்து மூடப்பட்டுவிட்டது. முர்டாகின் நெருங்கிய நண்பரான முன்னாள் தலைமை அதிகாரியான ரெபேகா ப்ரூக்ஸ் பதவியை விட்டு விலகியிருக்கிறார்.

அருவருக்கத்தக்க, அசிங்கமான மூன்றாம்தர விவகாரங்களை 'புலனாய்வு' செய்து பரபரப்பூட்டி வந்த நூற்றாண்டுகால புகழ்பெற்ற பத்திரிகை நவ். எப்படிப்பட்ட சாக்கடையையும் செய்திகள் என்னும் போர்வையில் அளித்து லாபம் சம்பாதிக்கலாம் என்பதை மர்டாக்கின் நவ் நிரூபித்துக் காட்டியது. லட்சக்கணக்கான வாசகர்கள் குவிந்தனர். பல பெரும் நிறுவனங்கள் நவ் குழுமத்தின் பங்குதாரர்கள் ஆயினர். இந்நிலையில், நவ் தனது செய்திகளை எவ்வாறு பெற்று வந்தது என்பதை கார்டியன் சமீபத்தில் அம்பலமாக்கியது. லஞ்சம். ப்ளாக்மெயில். பிரபலங்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுகேட்பது. கூலிப்படை மிரட்டல்கள்.இன்னபிற.

இந்த விவகாரங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வந்தபோது மர்டாக் அமைதியாகத்தான் இருந்தார். நவ் வழக்கம் போல் வெளியாகிக்கொண்டிருந்தது. முதலில் வாடிக்கையாளர்கள் பத்திரிகையைப் புறக்கணிக்கத் தொடங்கினார். பிறகு, தெருமுறை ஆர்ப்பாட்டம். பிறகு, நாடு தழுவிய அளவில் பிரிட்டனில் ஆவேச அலைகள். இத்தனைக்குப் பிறகும்கூட மர்டாக் வாய் திறக்கவில்லை. இறுதியில், பங்குதாரர்கள் நவ் குழுமத்தில் இருந்து விலக ஆரம்பித்தபோதுதான் மர்டாக் இறங்கி வந்தார். அதாவது, முதலீட்டிலும் லாபத்திலும் சிக்கல் என்றபோதுதான் தலை குனிந்தார். பத்திரிகையை இழுத்து மூடினார். ஐ யாம் சாரி என்றார். அதுவும்கூட தன்னுடைய பிற தொழில் முதலீடுகளுக்குப் பாதிப்பு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

ஆரம்பம் தொடங்கி இன்று முதல் மீடியா உலகம் எப்படி 'செய்திகளை' உற்பத்தி செய்துகொண்டிருக்கிறது என்பதற்கு ரூபர்ட் மர்டாக் சாம்ராஜ்ஜியம் தக்க சாட்சியமளிக்கிறது. ஊடகத்துறை மட்டுமல்ல அனைத்து துறைளிலும் உள்ள பணக்காரர்கள் சட்டத்தை வளைத்தும், உடைத்தும், தகர்த்தும்தான் பெரும் பணக்காரர்களாக மாறியிருகிறார்கள். பெரும் நிறுவனங்கள் இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. உலகம் முழுவதிலும் டாடா, அம்பானி முதல் மர்டாக் வரை அனைவருக்கும் இது பொருந்தும்.

நவ் பத்திரிகை மூடப்பட்டுவிட்டதால் ரூபர்ட் மர்டாக்கின் சாம்ராஜ்ஜியம் இனி சரிந்துவிடும் என்று சொல்வது சரியல்ல. மர்டாக்கின் பின்னணி வலுவானது.
பிரிட்டிஷ் பிரதம மந்திரி டேவிட் காமரூன் ரூபர்ட் மர்டாக்குக்கு நெருக்கமானவர். பல அரசியல்வாதிகளும் காவல்துறை அதிகாரிகளும்கூட மர்டாக்குக்கு நெருக்கமானவர்களே. வழக்குகள், விசாரணைகள் என்று பெயரளவுக்குச் சில சம்பிரதாயங்கள் நடைபெற்றாலும், மர்டாக்கை அவை பெரும்பாலும பாதிக்காது. டாடா மீதும் அம்பானி மீதும் சுமத்தப்படாத குற்றச்சாட்டுகளா? அவர்கள் வளைக்காத சட்டங்களா? லாபத்துக்காக அவர்கள் செய்யாத அயோக்கியத்தனங்களா? என்றாலும், இன்று வரை அவர்கள் மீது சட்டத்தின் நீண்ட கரம் அல்ல அதன் நிழல்கூட தீண்டியதில்லை அல்லவா?

ரூபர்ட் மர்டாக் போன்றவர்கள் நடத்தும் பத்திரிகைகளில் இருந்துதான் இந்த உலகை நாம் புரிந்துகொள்ள முயற்சி செய்து வருகிறோம். . இவர்கள் கொடுக்கும் செய்திகளைத்தான் நாம் கவனத்துடன் ஒவ்வொரு தினமும் உட்கொண்டு வருகிறோம். இந்தச செய்திகளைக் கொண்டுதான் நன்மை, தீமைகளை, சரி, தவறுகளை நாம் அர்த்தப்படுத்திக்கொண்டிருக்கிறோம். இவர்களுயை மதிப்பீடுகளை கேள்விக்கு உட்படுத்தாமல் நம்பிக்கொண்டிருக்கிறோம்.

ஹிட்லர் ஆகச் சிறந்த அரசியல் தலைவர் என்று ஒரு காலத்தில் இப்படிப்பட்ட பத்திரிகைகள் கொண்டாடியபோது, அப்படியா என்று நாம் வாய் பிளந்தோம். உலகின் மாபெரும் கொடூரன் என்று அதே பத்திரிகைகள் ஹோலோகாஸ்ட் ஆதாரங்களை வெளியிட்டபோது அதிர்ச்சியில் பின்வாங்கினோம். கம்யூனிசம் ஒழித்துக்கட்டப்படவேண்டிய சித்தாந்தம், முதலாளித்துவமே உலகை மீட்க வந்த அற்புதம் என்று அவர்கள் சொன்னபோது, உண்மை என்று நம்பினோம். சீனப் பஞ்சங்களை மாவோதான் ஏற்படுத்தினார் என்றும் ஸ்டாலின் உக்ரேனில் பல லட்சம்பேரைக் கொன்று குவித்தார் என்றும் இந்த ஊடகங்கள் 'புகைப்பட சாட்சியம்' அளித்தபோது, நாம் அவற்றை ஆராயாமல் அப்படியே ஏற்றுக்கொண்டோம். இன்றுவரை இந்தச் செய்திகளின் லிங்குளைக் கொடுத்து இந்தப் பொய்ப் பிரசாரங்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டிருக்கிறோம்.

உண்மை என்று நாம் இதுவரை அறிந்து வைத்திருக்கும் செய்திகளின் மெய்ப்பொருளை ஆராய ஆரம்பித்தால் பல அதிர்ச்சிகளை நாம் சந்திக்கவேண்டியிருக்கும். ரூபர்ட் மர்டாக் விவகாரம் நமக்கு உணர்த்தும் உண்மை இதுதான். மீடியா உலகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை முழுவதுமாக, விரிவாக உணர, Nick Davies எழுதிய Flat Earth News என்னும் நூலை வாசிக்கவேண்டும்.

நன்றி: மருதன் 

No comments:

Post a Comment